வலசைப் பறவை
வலசைப் பறவை ஜெயமோகன் நற்றிணை பதிப்பகம் 104 பக்கங்கள் ஜெயமோகனின் 16 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நிகழ்வுகள் குறித்து உடனடி எதிர்வினைகளை ஆற்றாது சலசலப்புகள் நீங்கியபின் அமைதியாக, உறுதியாக தனது கருத்துக்களை உரிய தரவுகளுடன் அளிப்பதையே பெரிதும் விரும்புவதாக பதிவு செய்கிறார் ஜெமோ. சமகால நிகழ்வுகளுடன், சரித்திர நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்து அவர் அளிக்கும் கட்டுரைகள், கருணையற்ற அதிகார பீடத்தின் குணங்களை உள்வாங்கிக் கொள்ளச் செய்கிறது. அரசியல் தலைமைகளின் புதிய நம்பிக்கைகள், சரிந்துவிழும் அடுக்குகளை அறிய நேர்கையில் மதிப்பீடுகளும் பொய்த்துவிடுகின்றன. திராவிட இயக்கங்கள், தி.ஜாவின் நாவல்கள், கு.ப.ராவின் சிறுகதைகள் குறித்த ஜெமோவின் கூர்மையான விமர்சனச் சொற்கள் முழுமையாக உடன்பட்டுவிட இயலாதவை. கம்யூனிசம், பெரியாரியம் குறித்த அவரது கருத்துக்களையும் அதே போன்றுதான் கருத வேண்டியுள்ளது. எண்பதுகளில் ராஜீவ் அரசு தொலைத்தொடர்புத் துறையில் பெரும் கனவுடன் நிகழ்த்திய முதலீடுகள் குறித்தும், தற்போதைய அத்துறையின் அசுர வளர்ச்சி குறித்தும் தீர்க்கமாக இந்நூலில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.