கட்டுரைகள்

 அங்கே இப்ப என்ன நேரம்? அ.முத்துலிங்கம்

மின்நூல்

476 பக்கங்கள்



நன்கு எழுதப்பட்ட ஒரு கட்டுரை சிறுகதை ஒன்றை வாசித்துவிட்ட அனுபவம் தருவதாய் இருத்தல் வேண்டும் என்று அசோகமித்திரன் கூறியதாக எங்கோ வாசித்த ஞாபகம்.


 உயிர்மை, காலச்சுவடு இலக்கிய இதழ்களில் முத்துலிங்கத்தின் சிறுகதைகளை வாசித்த நாட்களில் அவை கட்டுரைகளை வாசித்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தின.


 கிண்டிலில் விலையின்றி பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்நூலில் 48 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.


கலைஞன் ஏமாளியாக, கோமாளித்தனம் நிறைந்தவனாக பல தருணங்களில் பொது சமூகத்தின் பார்வையில் அறியப்பட்டாலும் அவனது அனுபவம் வாசிப்பு தளத்தில் இலக்கியமாக உருப்பெற்றுவிடுகிறது.


 வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் நிகழ்வு முதல் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குதல், திரைக் கலைஞர் உடனான சந்திப்பு என 48 கட்டுரைகளிலும் நிறைந்திருக்கும் மெல்லிய அங்கதச் சுவையுடன் கூடிய அழகான நடை புதுமையான வாசிப்பனுபவத்தை அளித்துவிடுகின்றன.


 வாசிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைதல் வேண்டும் என்று ஆண்டன் செகாவ் கூறியதாக சமீபத்தில் வாசித்தேன்.


 இம்மின்நூல் அத்தகையதொரு மகிழ்ச்சியை வாசகனுக்கு அளிக்கவல்லது.


 நாட்டியப் பேரொளி, திரைப்பட நடிகை பத்மினி கனடாவிற்கு சென்றிருந்த நாட்களில் முத்துலிங்கத்தின் இல்லத்தில் தங்கி இருக்கிறார்.


 அவரிடம் தொடர்ச்சியாக பல தருணங்களில், பல நாடுகளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவர் ஏன் மணந்து கொள்ளவில்லை? என்ற கேள்விதான் அது.


 பலர் அக்கேள்வியைக் கேட்டபோது சிறு புன்னகையுடன் கடந்து சென்றுவிட்ட பத்மினி, முத்துலிங்கம் அதே கேள்வி கேட்கையில் அளித்த பதில் பெரும் வியப்பை அளிப்பதாக அமைந்திருக்கிறது.


 அவர் மறவர் சமூகம், நானோ நாயர் வீட்டுப் பெண், இதெல்லாம் நடக்கிற காரியமா? என்ற பதில்தான் அது.


 கலைஞர்கள் சாதி, மதங்களை கடந்தவர்கள் என்ற புரிதலை கேள்விக்கு உட்படுத்திய பதில் அது.


 உலகமயமாக்கல், நடுத்தர வர்க்கத்தை கடனாளிகளாக ஆக்கிவிடுதலை ஒரு கட்டுரையில் எளிமையாக விவரிக்கப்படுகிறது.


 கடன் அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் சிறுசிறு சலுகைகள் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக மாறி தேவையற்ற இடர்களுக்கு இட்டுச் செல்வதை அறியமுடிகிறது.


 நமது நாட்டில் லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அறமற்ற ஆர்டிஓ அலுவலர்கள், ஓட்டுனர் உரிமம் வழங்குதலை கேலிக்கூத்தாக்கி விடுகையில், கனடா போன்ற நாடுகளில் உரிமம் வழங்கும் பணிகள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், முறையான மதிப்பீடு கொண்டவாறு அமைந்திருத்தலை வாசிக்கையில் பெரும் ஆசுவாசம் எழுகிறது.


 வாடகை வீடுகளில் வசித்திருக்கும் நாட்களில் சொந்த வீடு பெரும் கனவாக, லட்சியமாக நீடிக்கிறது.


 இலக்கை அடைந்து விடுகையில் பராமரிப்பு மற்றும் இதர சிக்கல்கள் வாடகை வீடே மேல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.


 கனடாவின் பெரும் ஆர்வத்துடன் தான் வாங்கிவிட்ட வீட்டில் சந்திக்க நேரிட்ட இடர்களை சுவையாக எழுதுகிறார் முத்துலிங்கம்.


 அருகாமை வீட்டை நீங்கிச் சென்ற முதிய தம்பதியர் பற்றிய குறிப்புகள் மனதை கனக்கச் செய்தவை.


 கார் ஓட்ட பயில்கையில் கீ,கியர், பிரேக் என்ற வார்த்தைகளின் சுருக்கம் கேஜிபி என்றவாறு அமைந்து இளைஞர் ஒருவரிடம் பயில நேர்ந்ததை கிண்டலாக விளக்குகிறார்.


'வேடர்கள் தானாக உருவாவதில்லை மான்களே அவர்களை  உருவாக்குகின்றன'


 மேற்கண்ட வரிகள் கனடாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை வாங்குகையில் தனது அனுபவம் குறித்து எழுதுகையில் இடம்பெறுகிறது.


 சுந்தரராமசாமி உடனான சந்திப்பில், என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள்? என்ற தனது கேள்விக்கு, புத்தகங்களைப் பார்த்தால் ஆசையில் வாங்கி விடுவதாகவும், அவ்வளவையும் படித்து முடிக்க வேண்டும் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் பதிலளித்ததை பதிவு செய்கிறார்.


 300 பக்கங்களில் நாவல் ஒன்றை எழுதி நிறைவு செய்ய 3 ஆயிரம் பக்கங்கள் வரை எழுதி செப்பனிடுவதை முத்துலிங்கத்திடம் தெரிவித்திருக்கிறார்.


 அடிக்க வந்த தன் மாமாவிடம் இருந்து தப்பிக்க அண்ணனுடன் ஓடிச் சென்று நூலகத்தில் ஒளிந்து கொள்கிறான் அச்சிறுவன்.


 ஐம்பது பக்கங்களை கொண்ட 'டாம் மாமாவின் இருட்டறை' என்ற நூலினை வாசிக்கிறான்.


 அமெரிக்கப் போர் உருவாவதற்கும்,  அடிமை ஒழிப்புக்கும் வித்திட்ட நூல் அது என்று பின்னாளில் அறிந்துகொள்கிறான் அச்சிறுவன்.


 பெரும் கல்வியாளரும், வரலாற்று ஆய்வாளருமான தொ.பரமசிவன்தான்  அந்நாவலை பெரும் வியப்புடன் வாசித்து மகிழ்ந்த அச்சிறுவன்.


 மனிதர்கள், சம்பவங்கள், நாடுகள் என்றவாறு முத்துலிங்கத்தின் 48 கட்டுரைகளும் ஏற்படுத்திவிடும் வாசிப்பு அனுபவங்கள் அலாதியானவை.


 மனித வாழ்வின் பரிமாணங்களை கலைஞர்களின் எழுத்து வன்மை எளிதாக சாத்தியப்படுத்தி, வாசிப்பு பொது தளத்திற்கு அளித்துவிடுகின்றன.


 வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தொடர்ச்சியாக தனது வாசிப்புத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார் முத்துலிங்கம்.


 ஆண்டன் செகாவ் குறிப்பிட்ட மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை இந்நூலும் வழங்கிவிட்டது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்