Posts

Showing posts from December, 2023

நாவல்

Image
 நொய்யல் தேவிபாரதி தன்னறம் நூல்வெளி 630 பக்கங்கள்  மனித வாழ்வின் வாதைமிகு தருணங்களை ஆற்றாமைகளில் முகிழ்ந்திடும் ஏக்கங்களை, பெருந்துயர்களின் தீரா வடுக்களை கால் நூற்றாண்டாக தொடர்ந்த தனது தீவிர எழுத்துகளால் ஆவணப்படுத்தியுள்ளார் தேவிபாரதி.  சற்றே விரிவுபடுத்தி எழுதியிருப்பின் தகழியின் 'கயிறு' நாவலுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய  நூல் இது.  நாவலின் துவக்கப் பக்கங்களில் நொய்யல் கரை தேவநாத்தாள், சங்கிலியங்காட்டுப் பண்ணாடி வீட்டில் தாண்டவமாடுகிறாள்.  தேவநாத்தாளுக்கு கோயில் எழுப்பப்படுகிறது. நொய்யல் கரையில் கிரிக் கவுண்டரின் காரிச்சியுடனான உரையாடல்கள் விவரிக்கவியலா தூய அன்பினை எடுத்தியம்புபவை. தான் வியந்து காண்பவைகளைத்தான் போலி செய்ய எண்ணுகிறார்கள் குழந்தைகள். ஆரம்பச் செயல்கள் அளித்திடும் வெற்றிகள், அவரவருக்கான பாதைகளை தீர்மானித்து விடுகின்றன.  மாறாக தவறான செயல்களின்போது கிடைத்திடும் துவக்க நிலைத் தோல்விகள் கேலிக்கு ஆளாக்கும்போதும், பாதைகளை மாற்றி நல்வழிப்படுத்தி விடுகின்றன. பூபதியின் ஆளுமை இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. வேம்பணக் கவுண்டர் செல்வாக்கான பண்ணாடியாக அரண்மனையில் வலம்

தன் வரலாறு

Image
 பாபாசாஹேப்  டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை சவிதா அம்பேத்கர்  தமிழில் த.ராஜன்  எதிர் வெளியீடு பதிப்பகம்  484 பக்கங்கள் அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பிய மனிதர்கள் உலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒடுக்கு முறைக்கு ஆளாகும் இனத்தையே மீட்டெடுக்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பின், காலத்தால் அழியாதவர்களாக, மக்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக உருக்கொண்டு விடுகிறார்கள்.  டாக்டர் அம்பேத்கர், மெத்த படித்தவராக, சட்ட நிபுணராக, எழுத்தாளராக, தீராப்பசி கொண்ட வாசிப்பாளராக, ஓவியராக, ஒடுக்கப்பட்ட மக்களின் காவலனாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.  அப்பெருமகனாரின் இறுதி எட்டு ஆண்டுகளை அழகுணர்வுடன் எழுத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் சவிதா அம்பேத்கர்.  பெரும் பதவிகளை வகித்தபோதும், திரளான மக்கள் கூட்டத்தை  வசீகரிப்பவராக இருந்த போதும், ஈட்டிய செல்வத்தைக் கொண்டு சொத்துக்களை உருவாக்கிக் கொள்ளவில்லை அவர்.  பிரிட்டிஷ் இந்தியாவிலும், நேருவின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த போதிலும், ஓய்வூதியம்கூட இல்லாதவராக, மனைவியின் எதிர்காலம் குறித

கல்வி

Image
 நூலின் பெயர் : தெருக்களே பள்ளிக்கூடம்  ஆசிரியர்: ராகுல் அல்வரிஸ் தமிழில் :சுஷில் குமார் வெளியீடு : தன்னறம் நூல்வெளி/ குக்கூ காட்டுப்பள்ளி 'சாளரம் வழியாக வானம் நோக்கும் வகுப்பறை குழந்தை தானாய் திரும்பும் வரை காத்திருக்கும் கனவு ஆசிரியருக்கு' மேற்கண்ட வரிகளைக் கொண்டு இந்நூலினை அர்ப்பணிக்கிறார் ராகுல் அல்வரிஸ். Free from school என்ற தலைப்பில் 16 வயது சிறுவன் எழுதிய நூல் இது.  தனது உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தபின், உள்ளுணர்வின் வழிகாட்டலில், பள்ளிப் படிப்பில் ஓராண்டு இடைவெளி விட்டு சுய கற்றலில் ஈடுபட்டிருக்கிறார் இந்நூலாசிரியர்.  அவரது பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட, மிக கவனமாக தேர்வு செய்யப்பட்ட, ஆச்சரியமூட்டும் பயணம் இது.  கோவாவில் இருந்து புனேவிற்கு முதல் கட்டமாக பயணிக்கிறார். பாம்பு பூங்காவில் சில நாட்கள் தங்கி பாம்புகளின் வளர்ச்சி, விஷத்தன்மை, விஷ முறிவு மருந்து தயாரிக்கும் முறைவரை அரிய தகவல்களை முழுமையாக கற்றுணர்கிறார். ஊர்வனவற்றின் மீதான ராகுலின் தனியாத ஆர்வம் மண்புழுக்கள், முதலைகள் வரை நீள்கிறது.  மண்புழுக்கள் குறித்த அறி

நாவல்

Image
 மிதவை நா ஞ்சில்நாடன்  நற்றிணை பதிப்பகம் 144 பக்கங்கள் புத்தக வாசிப்பு என்பது ஒரு பிறவிக்குள் பல பிறவிகளுக்கான அனுபவங்களை அளிக்க வல்லது என்று முன்பொரு முறை இலக்கிய நண்பர் ஒருவர் கூறினார். அதே கூற்றை இன்னும் சில தருணங்களில் வாசித்திருக்கிறேன். இந்நாவலை வாசித்த நாட்களில் 27 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்ட உணர்வு ஏற்பட்டது.  எந்த நூலினை வாசிக்கும்போதும் கதையின் நாயகனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வது வாசகனின் இயல்புதான். அதிலும் அவன் விழுமியங்கள் நிறைந்தவனாக, அப்பாவியாக இருக்கையில் அவ்வுணர்வு சற்று கூடுதலாகவே அமைந்துவிடுகிறது.  நாஞ்சில் நாடன் சண்முகத்தை அப்படியொன்றும் ஒழுக்கசீலனாக செயற்கைத்தனத்துடன் படைத்துவிடவில்லை.  எளிய மனிதனாக, கேட்க நினைப்பவற்றையும் தயக்கத்துடன் விலக்கிச் செல்பவனாக, இயல்பான உணர்வெழுச்சிகளுக்கு உட்பட்டவனாக,நண்பர்களுக்கு சிறிதளவு உதவுபவனாக, அவசியம் நேர்கையில் உதவிகளைக் கேட்டுப் பெறுபவனாக அறம் மிகுந்தவனாக, பணியாற்றும் இடத்திற்கு விசுவாசம் நிறைந்தவனாக இவ்வாறெல்லாம் தான் சண்முகம் வாழ்கிறான்.  60களின் போதும், பட்டதாரி ஒருவன் வேலையின்றி அலைந்திருப்பதை வாசிக்கையில் வ

கதைகள்

Image
 கி.ராஜநாராயணன் கதைகள்   அன்னம் வெளியீடு  575 பக்கங்கள்  வானம் பார்த்த கரிசல் பூமியின் வெக்கையை, உழைக்கும் பெண்களை, சலிக்காமல் போராடும் அம்மண்ணின் சம்சாரிகளை கி.ராவின் எழுத்துக்கள் மிகையின்றி கொண்டாடி மகிழ்கின்றன.  எளிய மனிதர்களின் நீடித்த வறுமை, வானம் பொய்த்துவிட்ட காலங்களில் வரி செலுத்த இயலாமை, இவற்றுடன் குழந்தைகள் விளையாட்டு நியதிகளையும் கதையில் நுழைத்து, ஒன்றுமில்லாத எளிய மக்களிடம் அரசின் கருணையற்ற அணுகுமுறையை 'கதவு' விரிக்கிறது.  குடும்பத்தின் ஒரு நபராகவே பாவிக்கப்படும் மாடு இறந்து போவது பெரும் துக்க நிகழ்வாகி விடுகிறது ஒரு வீட்டில்.  புழுக்கமான பேருந்தில் குழந்தையொன்றின் வருகை இறுக்கங்களை தளர்த்தி விடுகிறது 'மின்னல்' கதையில்.  பள்ளியை ஜெயிலுடன் ஒப்பிடுகிறார் கி.ரா. உண்மையில் கற்பித்தலின் கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளுடன் பொருந்திப் போக முடியாத குழந்தைகளுக்கு அப்பள்ளி சிறையாகத்தான் அறியப்படுகிறது. 'சாவு' கதையில் எதிர்பாரா மரணங்கள் மிஞ்சி இருப்பவர்களின் வாழ்வைப் புரட்டி போடுவதை விவரிக்கிறார்.  அரசுகளின் கவர்ச்சிகரமான திட்டங்கள் சாமானியர்களை படுகுழியில் தள்ள

கவிதைகள்

Image
 இருளும் ஒளியும்  பிருந்தா சாரதி  படைப்புப் பதிப்பகம்  120 பக்கங்கள்   ஒன்றை உயர்த்துவதும், பிறிதொன்றை தாழ்த்துவதுமே மனித அறிவின் மேம்போக்கான நிலை.  கருப்பு நிறம் அழுக்கின், துக்கத்தின் குறியீடுகளாகவும், வெண்மை நிறம் தூய்மையின், சமாதானத்தின் குறியீடுகளாகவும் கருதப்படுவது எண்ணத்தக்கவை.  அவ்வகையில் வாழ்வின் தொடக்கமும், முடிவுமான இருள், வெறுப்பு மேலோங்க ஒதுக்கப்படுகிறது. ஒளியே நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் நீடிக்கிறது.  இக்கவிதைத் தொகுப்பில் பிருந்தா சாரதி இருளையும், ஒளியையும் அவற்றின் நேர்மறையான கூறுகளினூடாகச் சென்று வியந்தோதுகிறார். 'பிறப்பா இறப்பா தீக்குச்சியின் உரசல்' ஒளியின் பிறப்பாகவும், தீக்குச்சியின் இறப்பாகவும் இக்கவிதை காட்சிப் படிமமாக மாறுகிறது.  வாசிக்கப்படும் கவிதைகளில் இடம்பெற்றுள்ள சொற்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய காட்சிகளை விரித்துக் கொண்டே செல்கின்றன. 'மலர்கள்  தாவர விளக்குகள் விழிகள்  மாமிச விளக்குகள்' 'தீபத்தை அணைத்துவிட்டு விளக்கைத் திருடுகிறான்.... இருள்கிறது அவன் பாதை'  மேற்கண்ட கவிதைகளில் ஒளியையும், இருளையும் மிக அழகாக பதிவு செய்கிறார் கவிஞ

நாவல்

Image
 அவன் காட்டை வென்றான்  கேசவ ரெட்டி தமிழாக்கம் ஏஜி எத்திராஜுலு நேஷனல் புக்ட்ரஸ்ட் வெளியீடு  நிறைமாத கர்ப்பிணியான தனது பன்றியைத் தேடி ஒரு இரவு முழுவதும் போராடித் தவிக்கும் கிழவன் ஒருவனின் கதை இது.  சாண்டியாகோ கிழவனின் போராட்டம் கடல் பின்னணியில் அமைவது போன்று, பெயரிடப்படாத இக்கிழவனின் போராட்டம் காட்டின் பின்னணியில் அமைகிறது.  100 பக்கங்களுக்கும் குறைவான இக்கதையை எளிதாக வாசித்துவிட இயலாது. நுட்பமான வாசிப்பைக் கோரும் எழுத்துகள் இவை.  காடு, கானுயிர் குறித்த வியப்பளிக்கும் அறிவுநுட்பம் வாய்ந்தவன் அக்கிழவன்.  சிட்டுக்குருவியின் ஓசையைக் கேட்டு பன்றியின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறான். அதன் 10 குட்டிகளையும் அழகு நிலாக்களாக காண்கிறான்.  அழகுக்காகவே மேற்கோள் காட்டப்படும் நிலவு, பன்றியுடன் ஒப்பிடப்பட்டு இகழப்படுகிறது.  மூர்கத்தனமாக தன்னைத் தாக்கி பெரும் காயங்களை ஏற்படுத்தியபோதும், தாய்ப்பன்றி மற்றும் அதன் குட்டிகளின் மீதான கிழவனின் அன்பும், அக்கறையும் மாறுவதில்லை.  பாறை போன்ற அவனது கால்களில் மிதிபட்டு காட்டு முட்கள்கூட நசுங்கிப் போகின்றன.  சிட்டுக்குருவியின் உதவியால் மகிழும் அவன், தொடர்ச்சியான அதன