Posts

Showing posts from March, 2024

கதைகள்

Image
 கடைசியாக ஒரு முறை  அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 118 பக்கங்கள் 100 ரூபாய்  இலக்கிய இதழ்கள் பலவற்றில் வெளியான அரவிந்தனின் ஏழு கதைகளின் தொகுப்பு நூல் இது.  சுயமதிப்பும், வெட்கமும் சற்றும் இல்லாது அதிகாரப் பீடத்திற்கு மண்டியிட்டு மகிழும் கூட்டத்தினரைப் பற்றிய கதை 'மயான நகரம்'.  ராணியின் கண்ணசைவில் அவளுக்கு மகிழ்வளிக்கும் வகையில் அனைத்தும் நடைபெறுகின்றன. சுய சிந்தனையற்ற அக்கூட்டம் நீடித்து அழவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் கைகளைத் தட்டவும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.  தொகுப்பின் இரண்டாவது மற்றும் இறுதியில் அமையும் கதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒரே நபரை வியந்தோதும் இரட்டைக் கதைகள் இவை.  ராமமூர்த்தியைப் போன்ற வழிகாட்டிகள் எல்லோரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறிப்பாக பதின் வயதுகளில் இருக்கவே செய்கிறார்கள்.  தாம் வலியுறுத்திய விழுமியங்களைத் தாமே  உடைத்து விடும் அந்நபர்கள், தன்னை பொய் கூறாதே என்று வலியுறுத்தும் அப்பா, அம்மாவிடம் ஏன் இப்படி பொய்யுரைக்கிறார் என்று வியக்கும் குழந்தையை நினைவுபடுத்துகிறார்கள்.  கடலும், மலையும், வனமும் வியப்பின் உச்சங்களாக மனிதனுக்குத் தோ

வாழ்க்கை

Image
என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் என் ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம்  207 பக்கங்கள் 180 ரூபாய்  தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது.  102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில் 15 நாட்களுக்கு முன்பாக சிறைக்குச் செல்கிறார். 18 மாத சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்புகையில் படிப்புக்கு முடிவு ஏற்படுகிறது.  சிறையில் பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்பு 'தாய்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் சங்கரய்யா ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளிக்கிறார்.  பதின் வயதுகளிலேயே மார்க்சிய சித்தாந்தம் தோழரை ஈர்க்கிறது. உலக மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு மார்க்ஸியமே வழி என்று முடிவு செய்கிறார்.  மிக இளம் வயதிலேயே உயர் பொறுப்புகள் தேடி வருகின்றன. தனது தீவிர சோர்வறியாத செயல்பாடுகளால் வழங்கப்பட்ட பதவிகளுக்கு நியாயம் செய்கிறார் தோழர். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்'  மேற்கண்ட பாரதியின் வரியை தோழர் சங்

கதைகள்

Image
டால்ஸ்டாய் கதைகள் தமிழில் வல்லிக் கண்ணன் மின்னூல் 138 பக்கங்கள்  டால்ஸ்டாயின் மூன்று கதைகளின் தொகுப்பு இந்நூல். 'இருவர்'  பணம் ஈட்டுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுணோவ், தனது விசுவாசமான ஊழியன் நிகிட்டாவைக்கூட  சுரண்டுகிறான்.  நிகிட்டா, வாசிலியின் எண்ணங்களை முழுமையாக அறிந்திருக்கிறான். 'மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்- தனக்கு -தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில்தான் மரணம் மனிதரை பயமுறுத்தும். தன்னை மறந்து பிறருக்கு உதவத் துணிகிறபோது மனிதன் மரண பயத்தை வென்று விடுகிறான். அதுவரை அவனுக்கு கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது'.  மேற்கண்ட வரிகள் டால்ஸ்டாய் எழுதியதா அல்லது மொழி பெயர்ப்பாளர் வல்லிக் கண்ணன் எழுதியதா என்று தெரியவில்லை முன்னுரையில் இடம்பெறும் இவ்வரிகள் எத்தனை நிதர்சனமானவை என்பதை உணர முடியும்.   குளிர் காலத்தில், இரவு நேரத்தில்,  நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவ்விருவரும் இரு துருவங்களில் வசிப்பவர்கள். நிகிட்டா இறந்து விடுவான் என்று நினைக்கும் போது பெரும் திருப்பமாக பனிப்புயலில் வாசிலி இறந்

நாவல்

Image
 கிடங்குத் தெரு செந்தூரம் ஜெகதீஷ் ஜெயரிகி பதிப்பகம் 224 பக்கங்கள் 280 ரூபாய் 90களின் துவக்கத்தில் சென்னை பாரிமுனை பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று வரும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அன்றைய நாட்களை நினைவுபடுத்திவிட்ட நாவல் இது.  சென்றமாத காலச்சுவடு இதழில் இந்நாவல் குறித்த குறிப்பு ஒன்றை வாசித்ததன் அடிப்படையில் முன்பதிவு செய்தேன்.  வாசிப்பதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்ட நூல் என்ற போதும், வாசிப்பின் முடிவில் அடைந்த ஏமாற்றத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  ராஜா என்ற எழுத்தாளனைப் பற்றியே மிக அதிக பக்கங்களுக்கு இடம்பெறும் புனைவு, சுய பச்சாதாபம்  மிகுந்ததாகவும் உருமாறி விடுகிறது.  தன்னையே, தனது செயல்பாடுகளையே எப்போதும் எந்நிலையிலும் நேர்மறையாக கட்டமைப்பது உவப்பானதாக இல்லை. மிதமிஞ்சிய தன்னிரக்கம், தன்னம்பிக்கை இழப்புக்குத்தான் கொண்டு செல்லும்.  நாவலில் ஆங்காங்கே அறியப்பட்ட பெரும் எழுத்தாளர்களின் மேற்கோள்கள் இடம்பெறுவது சிறப்பு.  வணிகத்தில் மார்வாடிகளின் ஈவிரக்கமற்ற, கறார்த்தனமான செயல்களையும் நாவல் பகடியுடன் சொல்கிறது. பணி செய்யும் இடங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள்

கவிதைகள்

Image
அண்டங்காளி ஆசை டிஸ்கவரி புக் பேலஸ் 86 பக்கங்கள்  100 ரூபாய் கவிஞர் ஆசையின் 50 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தேய்ந்துபோன அல்லது  தேர்ந்த ஒரு 100 சொற்களைக் கொண்டு இந்நூலுக்கு வாசிப்புப் பதிவு எழுதிவிட முடியுமா என்ன?  ஒவ்வொரு கவிதையும் வார்த்தைகளை சிறகுகளாக்கி அண்டவெளியெங்கும் வாசகனை சுழற்றியடிக்கிறது.  பாரதி கவிதைகளில் இடம்பெறும் காளி மீதான பாடல்களில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவற்றின் நூற்றாண்டுக்குப் பிறகான தொடர்ச்சியாக ஆசையின் இக்கவிதைகளைக் கருதலாம். 'கண்ணைத்  திறந்துகொண்டு காணும் காளியல்ல நீ கண்ணை மூடினால் விழிக்கோளத்துக்கும்  இமையடைப்புக்கும்  இடையே இருள் தாண்டவம்  ஆடுபவள் நீ இருட்காளி' அடுத்தடுத்த வாசிப்புகளினூடே நுட்பங்களை கூர்மையாக விளக்கிச் செல்லும் கவிதைகள் வாசகனை வியப்பில் ஆழ்த்துபவை. பா.வெங்கடேசனின் 'வாரணாசி' நாவலில் இடம்பெறும் 'மறிநிலைப் படிமம்' என்ற அழகிய சொல் ஒரு கவிதையில் காளியை பேரண்டமாக உருவகிக்கப் பயன்படுகிறது.  காளியை அன்னையாக, அண்டமாக, பேயாக கட்டுக்கடங்காத தனது வர்ணிப்புகளால் உருவகித்து சன்னதம் கொண்டு ஆடி கவி பாடுகிறார் ஆசை. 'எவ்வளவு கவி

கட்டுரைகள்

Image
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்  மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல்  210 பக்கங்கள்  களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.  தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி  நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது.  'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள்.  இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  இலங்கையில் குறுகிய காலப் பகுதிகளில்

நாவல்

Image
  கிருஷ்ணப் பருந்து  ஆ.மாதவன்  நற்றிணை பதிப்பகம்  126 பக்கங்கள்  முன்னோர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு வாழும் குருஸ்வாமி, சாமியப்பாவாகவே அறியப்படுகிறார். சுய உழைப்பில் விளையாதவை என்ற அச்சம் தனது சொத்துக்களின் மீது அவருக்கு ஏற்படுகிறது.  குறைவான வாடகைக்கு கடைகளை அனுமதிப்பதில் இருந்து, ரவி, பார்வதி, வேலப்பன்,ராணி  உள்ளிட்டவர்களிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்வதுவரை இதனை அறிய முடியும்.  அம்மு அம்மையின் ஆறுதலளிக்கும் தூயநெருக்கம், தந்தையுடன் அவளைக் காண நேர்கையில், மேகம் போன்று கலைந்து செல்கிறது.  மொட்டை மாடியில் தனியறை வசிப்பு, புத்தக வாசிப்பு என நேர்கோட்டு முறையில் செல்லும் சலனமற்ற வாழ்வு, இயல்பான மன எழுச்சிகளை உள்ளடக்கியதாகவும் புனையப்பட்டு இருப்பது சிறப்பு.  தோப்புவிளையின் மரங்களில் வந்தமரும் கிருஷ்ணப்பருந்தாகவே குருஸ்வாமியின் உள்ளுணர்வுகள் நீடிக்கிறது.  துவக்கத்தில் தனது நண்பனின் மகளை வேலப்பன் மணந்து கொள்ள உறுதியாக மறுத்து விடுபவர், தேவி கோவிலில் இருந்து வெளிப்படுகையில் புன்னகையுடன் அச்செயலை அனுமதிக்கிறார். கோயில் உட்பிரகாரங்களின் ஓவியங்கள் மீதான குருஸ்வாமியின் பெரும் ஆர்வத்தை வேலப்பன் க

கதைகள்

Image
ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு  நற்றிணை பதிப்பகம்  640 பக்கங்கள்  ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.  தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.  விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம்.  தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில்  அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை.  சாலைக் கடை  மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை கதைகளில் வரிசைகட்டி வருகின்றனர்.  கல்லூரி நிகழ்விற்க

நாவல்

Image
1984 ஜார்ஜ் ஆர்வெல்  தமிழில் க.நா.சு  மின்நூல்  288 பக்கங்கள்  அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிகையில் அல்லது ஒற்றை சித்தாந்தம் பரவலாக வலியுறுத்தப்படுகையில் விளைவுகள் எவ்வாறெல்லாம் அமையும்? பொய்கள் அனைத்தும் மெய்யென வலியுறுத்தப்படுவதுடன் நிற்பதில்லை.  நடமாடிக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போகிறார்கள். வெகு சுலபமாக மறைக்கப்பட்டும் விடுகிறார்கள். 'டெலி ஸ்கிரீன்' அச்சுறுத்தும் வகையில் மக்களைத் தொடர்ச்சியாக கண்காணிக்கிறது.  ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் கூடிய நிகழ்வு ஒன்றில் அப்போதைய ஆட்சித் தலைவரின் உரையை தொடர்ந்து, பெரும் கரவொலி எழும்பியது. 10 விநாடிகள், 20 விநாடிகள், ஒரு நிமிடம் என்று கரவொலி தொடர்ந்து நீண்டுகொண்டே இருந்ததாம்.  யார் முதலில் கரவொலியை நிறுத்துகிறார் என்பதை கண்காணிப்பதாக அங்கு இருப்பவர்கள் அனைவரும் சந்தேகித்ததால் ஒருவரும் கரவொலியை குறைத்துக் கொள்ளவும், நிறுத்திவிடவும் தயாராக இல்லாத நிலை அது.  அதே ஆட்சியாளரின் மரணத்தருவாயில் அவரது உதவியாளர் முழு வெறுப்புடன் அவரது முகத்தில் காறி உமிழ்ந்ததாகவும், எதேச்சையாக விழித்துக்கொண்ட தலைவரின் கோபத்திற்கு அஞ்சி அவரது கரங்களை முத்தமிட்டு, பய

நாவல்

Image
சர்மாவின் உயில் க நா சு மின்னூல் 268 பக்கங்கள்  புனைவு முற்றிலும் கற்பனையில் முகிழ்ந்த வையாகவோ அல்லது முழுவதும் சுய அனுபவமாகவோ இருப்பதில்லை.  க.நா.சு தனது வாழ்வனுபவங்களில் எழுத்து வலிமையைச் சேர்த்து சர்மாவின் உயிலை எழுதி இருக்கிறார்.  எழுத்தை வாழ்வாக கொள்ள விழையும் சிவராமன் வெற்றி அடைவதாகவும் கதையை நகர்த்தியமை வாசகனுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.  இளவயது, சிறுவயதுகளில் இணையரை இழந்துவிடும் பெண்கள் தம் குலத்திற்கு வழிகாட்டும் விளக்காக மாறிவிடுகின்றனர்.  பவானி மற்றொரு சானுப்பாட்டியாக ஆகாமல் நேர்ந்தது நிம்மதி அளிக்கிறது.  பொருளீட்டலின் வேகத்தால் செலுத்தப்பட்டு, வாழ்வின் மென்சுவைகளை தொலைத்தவர்கள், குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் வெற்றி அளிக்கும்  ஆசுவாசத்தால் பணத்தின் மீதான அலட்சியத்தை கைக்கொண்டு அதன் பலனாக சறுக்கலையும் சந்திக்கின்றனர்.  கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் வாழ்வு உணர்த்துவது மேற்கண்ட வரிகளைத்தான்.  தட்டையான, மேலோட்டமான சிந்தனை கொண்ட நாராயணசாமி ஐயரும், ராஜமும் சிவராமனின் சவால் தரும் இலட்சிய வாழ்வினை ஏற்றுக்கொள்ளாதவர்களாகிவிடுகின்றனர்.  அவ்வகையில் உயிலின் மையத் தகவலை அறிந்து கொள்ள அவர்கள்

கதைகள்

Image
அவரவர் வழி சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல் 118 பக்கங்கள்  இயல்பான மனிதர்களின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை நேரடியாக எளிய எழுத்துக்களில் பதிவு செய்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.  புனையப் பட்டிருக்கும் பெயர்களிலேயே அவரது எள்ளல்  தொனிக்கிறது.  நிகழ்கால போலி வாழ்வு, கடந்த காலங்களில் மறக்கவியலாத கசடுகளை சுமந்த நிலையில் தள்ளாட்டங்களுடன் சுழன்று கொண்டிருக்கிறது.  திருடன் உருவாதல், தொடர்ச்சியான களவு செயல்கள் தேய்வழக்கான புனைவாக இருப்பினும் கதையின் முடிவு கலைஞனை மீட்டெடுக்கிறது.  இழத்தலின் நினைவுகள், அடையவியலாதவற்றின் மீதான பொங்கிவழியும் மோகம், சிறுமைத்தனங்கள் வலுவாக எழுதப்பட்டிருக்கின்றன.  தவறான வழிகளில் விரைவாக ஈட்டப்படும் பணம், அதனினும் தவறான, விரைவான வழிகளிலேயே பயணிக்கிறது.  இழப்பின் வலிகளையும், நிகழ்கால தவிர்க்கவியலா சங்கடங்களையும் மட்டுமின்றி, வாழ்தலின் அவசியங்களையும் வாசகனுக்கு உணர்த்தி செல்கின்றன இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள்.

கட்டுரைகள்

Image
ஆறில் ஒரு பங்கு பாரதி மின்நூல் 37 பக்கங்கள்  பாரதியின் உரைநடை, ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சமூகச் சூழல்களை, அரசியல் நிலைகளை, ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது.  பிரம்ம சமாஜத்தின் மேல் பற்றுக் கொள்ளும் கோவிந்தராஜன், மீனாம்பாளை புறக்கணிக்க துணிகிறான்.  காளியின் ஆணையை ஏற்று விஷமருந்தும் மீனாம்பாள், காய்ச்சலில் விழுந்து உயிர் தப்புகிறாள்.  ஆறில் ஒரு பங்கு நீடித்திருக்கும் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்டோராக காலந்தோறும் தொடர்கிறார்கள்.  சமூக அடுக்குகளைப் வலுவாக கட்டுடைக்க பாரதி தயங்குவதில்லை என்பது வாசகன் அறியாத விஷயம் அன்று.  மீனாம்பாளின் வீணை இசையை, அவளது தந்தையின் குறட்டை ஒலி எவ்வகையிலும் தொந்தரவு செய்வதில்லை என்பது போன்ற பகடிகள் இக்குறு நாவலில் இடம் பெறுகிறது.  பாரதியின் கவிதைகள், கட்டுரைகள் அளித்திடும் மாபெரும் தரிசனங்களுக்கு சற்று குறைவானதாகவே தோற்றமளிக்கும் கதைப் புனைவுகளில் ஒன்று  இக்குறுநாவல்.  'பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது'  காலங்கள் கடந்து பாரதியின் மீதான ஈர்ப்பு குன்றாதிருக்க மேற்கண்ட வரியும் ஏதுவாக அமைகிறது.

கட்டுரைகள்

Image
கொள்ளையோ கொள்ளை ஜே சி குமரப்பா தமிழில் மீ.விநாயகம் மின்நூல் 90 பக்கங்கள் வரலாற்றுப் பாட நூல்கள் வாயிலாக ராபர்ட் கிளைவ், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வழிகோலியவராக, வெற்றியாளராக அறியப்பட்டிருக்கிறார்.  இந்நூலை வாசிக்கையில் தட்டையான அப்புரிதலும், பிம்பமும் உடைகின்றன.  நிர்வாகத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக அவர் இருந்திருக்கிறார். போக்கிரியாக பிறந்த நாட்டில் சுற்றித் திரிந்தவர், இந்தியாவில் குமாஸ்தா பணிக்கு வந்து படிப்படியாக வேகமாக முன்னேறி சாதித்திருக்கிறார்(!).  ஆங்கிலஆட்சி இந்தியாவை இரக்கமின்றி நடத்தி ஏழை எளியவர்களின் செல்வங்களையும் சுரண்டியமை புள்ளிவிவரங்களுடன் இந்நூலின் விவரிக்கப்படுகிறது.  பிரிட்டன் அரசு தனக்கான போருக்கான நிதிகளை அடிமை இந்தியாவின் தலையில் கட்டியதை அறியும்போது ஆதங்கமாக உள்ளது.  பொய் கணக்குகளும், ஒருவர் தரவேண்டிய கடனை மற்றவர் பெயரில் எழுதுவதும், அதற்கான வட்டித்தொகையை உடனடியாக வசூலிப்பதும் ஆங்கில ஆட்சியின் கொடூரங்களை ஓரளவிற்கு புரிந்து கொள்ள வழி செய்கிறது.  உலகின் எவ்வகையான அரசாக இருப்பினும் (கம்யூனிஸ்டுகள் தவிர்த்து) சாமானியர்களுக்கு நல்லவையாக அறியப்பட்டவற்றை நடைமுறைப்பட

கட்டுரைகள்

Image
உலகம் சுற்றும் தமிழன் ஏகே செட்டியார் மின்நூல் 234 பக்கங்கள்  முடங்கிக் கிடக்கும் இந்நாட்களில் பயண நூல்களை வாசிப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அதிலும் பயண இலக்கியத்தின் முன்னோடியாக அறியப்படும் ஏ.கே செட்டியாரை வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.  ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்ததாக அறியப்படும் நீரோ மன்னனின் செயலுடன் இப்போதைய வாசிப்புகளை ஒப்பிட முடியவில்லை.  ஏனெனில் வாசிப்பு ஒன்று மட்டுமே பெரும் நம்பிக்கை அளிக்கிறது. 10 பிறவிகளில் துடிப்பாக வாழ்ந்து அறிந்துகொண்டிருக்க முடிந்த அனுபவங்களை ஒரே பிறவியில் ஏகே செட்டியாரால் சாதிக்க முடிந்திருக்கிறது. கப்பல் பயணங்கள் குறித்த அவரது கட்டுரை நான்கு வரிகளில் நம்மை கடலுக்கு அழைத்துச் சென்று விடுபவை.  ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அவர் எழுதிச் செல்லும் குறிப்புகள் நுண்ணிய அவதானிப்பினால்தான் சாத்தியமாகி இருக்க இயலும்.  சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஏகே செட்டியாரின் படைப்புகள் (இரண்டு தொகுதிகள்) முழுத் தொகுப்பு நூல்களை கடந்த 4 ஆண்டுகளாக கையில் எடுத்து பார்த்துவிட்டு இயலாமையுடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.  கிண்டிலில் கிடை

கட்டுரைகள்

Image
பௌத்தக் கதைகள் மயிலை சீனி வேங்கடசாமி மின் நூல் 123 பக்கங்கள்  பௌத்த மதம் தோன்றி வளர்ந்துவந்த காலங்களின் நிகழ்வுகளை, வரலாற்றுத் தகவல்களை 16 கதைகளாக புனைவில் வடித்துள்ளார் மயிலை சீனி வேங்கடசாமி.  சிக்கலற்ற, நேர்த்தியான மொழிநடை அமையப்பெற்ற கதைகள் இவை.  அரண்மனையை விட்டு நீங்கிய சித்தார்த்தர், அன்றையதினம் சேகரிக்கும் பிச்சைசோறு முகச்சுளிப்பை அவருக்கு ஏற்படுத்தி, தெளிவையும் உண்டாக்குகிறது.  தேவதத்தன், அஜாதசத்துருவின் துரோகங்கள் குறித்த வரலாற்று குறிப்புகளும் கதைகளில் அழகியலுடன் புனையப்பட்டுள்ளன.  கள்வனை பெரிதும் விரும்பி கணவனாக ஏற்றுக் கொள்ளும் பெண், அவனது முட்டாள்த்தனமான சதிச் செயல்களை அறிந்து பெரிதும் வருந்தி, வேறு வழியின்றி அவனை வீழ்த்தி துறவுக்கோலம் பூணுகிறாள்.  பெரும் செல்வந்தரின் மகள், புகுந்த வீட்டில் கடைபிடிக்கும் நெறிமுறைகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் செவ்வியல் தன்மை கொண்டிருக்கிறது.  மரணத்தின் நிதர்சனத்தையும், வாழ்வின் நிலையாமைகளையும் மட்டுமின்றி, வாழ்தலின் இனிமையையும் விளக்கிவிடும் கதைகள் இவை.

கட்டுரைகள்

Image
விந்தன் கட்டுரைகள் மின்நூல் 116பக்கங்கள் 'புலமையும்-வறுமையும்' என்ற கூற்றுக்காண உதாரணங்களில் விந்தனும் ஒருவர்.  விந்தனின் 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  பாரதி, பாரதிதாசன் குறித்த கட்டுரைகள் சிறிய அளவில் எழுதப்பட்டிருப்பினும் இந்நூலின் சிறப்பான பக்கங்கள் அவை.  எதிரெதிர் துருவங்களாக அன்றைய நாட்களில் அறியப்பட்டிருந்த கல்கியையும், புதுமைப்பித்தனையும் தனது எழுத்துக்களில் வியந்து போற்றத் தவறவில்லை விந்தன்.  கல்கியில் பணிபுரிபவர் வேறு பத்திரிகைகளுக்கு எழுதுதல் கூடாது என்ற நிலையில், தான் அவ்வாறு வேறு பத்திரிகைக்கு படைப்பு அனுப்பி இருப்பதாக புகார் எழுந்த சூழலில், கல்கி தன்னை கண்ணியத்துடன் நடத்தியதாக விந்தன் குறிப்பிடுகிறார்.  கல்கியின் எச்சரிக்கையையும் மீறி, பணியிலிருந்து நீங்கியமை, 'மனிதன்' பத்திரிகை துவங்கி சந்திக்க நேர்ந்த சவால்கள், பொருளாதார இழப்புகளையும் தாண்டி மக்கள் எழுத்தாளராக விந்தன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.  நூலின் இறுதிக் கட்டுரையில் இடம்பெறும் தன்னம்பிக்கை மனிதர்களின் குறிப்புகள், எக்காலத்தவரும் வாசித்து அறிந்து கொண்டு, ஆறுதல் கொள்ளவேண்டியவை.  விந்

கதைகள்

Image
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு 2 மின்நூல் 253 பக்கங்கள்  ஜெயகாந்தனின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.  30 வயதைக் கடந்தவன் திருமண ஏக்கம் கொண்டு அச்சாபீஸில் கடுமையாக உழைத்து வருகிறான்.  அச்சடிக்கப்படும் திருமண பத்திரிகைகள் அவனுள் கிளர்த்தும் ஏக்கம், துல்லியமான வார்த்தைகளில் வெளிப்பட்டு இக்கதைக்கு செவ்வியல் தன்மையை அளித்து விடுகிறது.  தொடர்ச்சியான, ஓய்வற்ற அவனது அசாத்திய உழைப்பு, உடல் உபாதைக்கு இட்டுச் செல்ல,  இனி அவனுக்கு ஒரு போதும் திருமண ஏக்கம் ஏற்படப் போவதில்லை என்ற வகையில் கதை நிறைவுபெறுகிறது.  எப்போதோ நடைபெற்ற தவறு- அது நியாயமற்றது எனினும்- மனவெழுச்சியின் ஊடான பகிர்வின் போது மன்னிக்க இயலாத செயலாக கருதப்பட்டுவிடுகிறது.  கிடைத்துவிடும் தண்டனையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி கையறு நிலைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.  கால ஓட்டத்தில் மென்மையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், மறுக்கப்படும் தருணங்களில் புதிய வார்ப்புகளுக்கான சாதக சூழல்கள் நிகழாமல் போய் விடுகிறது.  நிகழ்வுகளை முதிர்ச்சியுடன் அணுகும் பக்குவங்கள் இன்மை இக்கதையில் வெளிப்படுகிறது.  எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடராக கண்டு வியந

கட்டுரைகள்

Image
உணவு நூல் மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல் 97 பக்கங்கள்  உணவை உண்பது அவரவர் விருப்பத்தையும், பழக்கத்தையும் பொறுத்தது.  ஆகவே வைத்தியரைத்தவிர மற்றவர்கள் இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்பது கூடாது என்று சொல்ல தகுதியற்றவர்கள் என்று கூறும் மயிலை சீனி வேங்கடசாமி இந்நூலில் முன்னரே நமக்கு அறியக் கிடைத்த எளிய விவரங்களை தகவல் பகிர்தலைப் போன்ற நடையில் சொல்லிச் செல்கிறார்.  இறைச்சி உணவு உண்ணாதவர்கள், இறைச்சியோடு தொடர்புடைய பால், வெண்ணெய்,நெய் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நலம் என்று கூறுகிறார்.  தானியங்கள், பயறுகள், கீரைகள் போன்ற தலைப்புகளில் அவர் அளிக்கும் தகவல்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டியவை.  நவீன காலங்களில் இறைச்சி உணவு உண்ணாமல் தவிர்ப்பவர்களின் முன்னோர், பௌத்த காலத்திற்கு முன்னர் இறைச்சி உணவை முதன்மையாகக் கொண்டிருந்தனர் என்றும் கூறுகிறார்.  உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த எளிமையான குறிப்புகளை கொண்டிருக்கும் பயனுடைய நூல் இது.

கட்டுரைகள்

Image
தெய்வம் என்பதோர்... தொ பரமசிவன் காலச்சுவடு பதிப்பகம் 111 பக்கங்கள்  காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விஸ்வகர்மா எனப்படும் கம்மாளர் சமூகத்தினரின் பொறுப்பிலேயே முதலில் இருந்ததெனவும், பிற்காலத்திலேயே சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் தொ.ப  விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் பாவாடை என்ற உடை தமிழ் பெண்டிருக்கு அறிமுகம் ஆனது என்பது மற்றுமொரு தகவல்.  வணிகன் ஒருவன் தனது முதல் மனைவி நீலியை தந்திரமாக கொன்றுவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான்.  கொல்லப்பட்ட நீலி பேய் உருக்கொண்டு தன் கணவனைப் பழிதீர்க்க திட்டமிடுகிறாள். பெண்ணுரு கொண்டு குழந்தையுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கிருக்கும் வேளாளர்களிடம் முறையிடுகிறாள்.  வேளாளர்கள் வணிகனிடம் அப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பளிக்க, அழுதவாறே மறுக்கும் அவன், அவள் பேயென்றும் தன்னை அவள் கொன்று விடுவாளென்றும் புலம்புகிறான்.  நீலி அவ்வாறு அவனை கொன்று விட்டால் தாம் அனைவரும் அக்னியில் இறங்கி உயிர் துறப்பதாக உறுதி அளிக்கின்றனர் அவர்கள்.  அன்றைய இரவு நீலி வணிகனைக் கொன்று விட மறுதினம் வாக்களித்தவாறு 70 வேளாளர்களும் அக்னிக் க

வாழ்க்கை வரலாறு

Image
எம் கே தியாகராஜ பாகவதர் விந்தன் மின்னூல் 205 பக்கங்கள்  50 வயதுகூட வாழ்ந்து முடிக்காமல், பிறர் நினைத்து பார்க்கவே இயலாத சாதனைகளை நிகழ்த்தி சென்ற பெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.  சிறு வயது வறுமை மட்டுமன்று, இளவயதில் அவரை நாடிவந்த பெரும் செல்வமும், நம்பவே முடியாத புகழும் இறுதியில் நிகழ்ந்துவிட்ட பெரும் சோகமும் எந்த ஒன்றும் அப்பெருமகனை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  அவருக்கு முந்தைய காலத்தில் மட்டுமல்ல, பிந்தைய காலத்தில் கூட பாகவதர் போன்ற கலைஞன் இருக்கப்போவதில்லை.  'நான் மக்களை நாடிச் செல்கிறேன். மக்களோ, பாகவதரை நாடிச் செல்கிறார்கள்' இசைவாணர் குறித்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கூறிய வார்த்தைகள் இவை.  தனது திறனையும், உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்திருக்கிறார் அவர்.  இசையும், சினிமாவும் அவரை நாடி ஆக்கிரமித்துக் கொண்டது போன்று, பெருந்துன்பமும் அவரை நெருக்கி வீழ்த்திவிட்டது பெரும் சோகம். பேரம்பேசி சம்பளம் நிர்ணயிக்காதவர் என்பதோடு, சிறை செல்ல நேர்ந்த தருணத்தில் சொத்துக்களை விற்று தான் பெற்ற முன்பணங்களை திருப்பி வழங்குமாறு கூறியிருக்கிறார்.  தன் துறையில் பிறர் சாதிக்க

நாவல்

Image
உயிரின் யாத்திரை எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம் 79 பக்கங்கள்  முன்னுரையாக திருமூலரின் திருமந்திரப் பாடல் இடம்பெறுகிறது. 'உயிரின் யாத்திரையில் உடல் ஒரு சத்திரம்' என்று குறிப்பிடும் எம் வி வெங்கட்ராம் படைத்திருக்கும் குறுநாவல் இது.  முடிவற்ற ஆன்மீகத் தேடலின் ஒரு துளியாகவே இக்குறு நாவலைப் படைத்திருக்கிறார் எம்விவி.  ராஜா, ராணி,  கோபு, சதாசிவம், லீலா (மீனா) என மிகக் குறைவான எண்ணிக்கையில் கதைமாந்தர்கள்.  பாலியல் வரம்பு மீறல்கள் ஆரம்பகட்ட கிளர்ச்சியை ஏற்படுத்தி இறுதியில் தீர்க்க இயலாத பெரும் இக்கட்டுக்குள் மட்டுமே மனிதனை செலுத்துகிறது.  தவறு செய்யும் துணிச்சல் அற்றவனாக விளங்கும் ராஜா, பெரும் குற்ற உணர்விற்கும், நகைப்பிற்கும் ஆளாகின்றான்.  ஆன்மீகத் தேடலில் ஈடுபடும் சதாசிவம், புரிந்துகொள்ள இயலாத நபராகவே அறியப்படுகிறார்.  சிறுசிறு அத்தியாயங்களில் ஆங்காங்கே தேவைக்கேற்ப திருமந்திரப் பாடல்கள் இடம் பெற்றிருப்பது இக்குறுநாவலுக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.  'ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே  காத்த மனையாளை காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடரு

நாவல்

Image
பஞ்சும் பசியும் தொ.மு.சி ரகுநாதன் மின்நூல் 345 பக்கங்கள் எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு உதவிபெறும் சிறுபான்மை தனியார் பள்ளியில் இருந்து ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்ட என்னை சென்னைக்கு அழைத்து சென்று படிக்க வைப்பதாக பொய்யுரைத்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். புதிய பள்ளி, புதிய சூழ்நிலை, அக்காலத்தில் தேர்ச்சியின்மை நடைமுறையில் இருந்ததால் ஒவ்வொரு வகுப்பிலும் கால்பங்கு மாணவர்கள் வயதில் இரண்டு மூன்று வருடங்கள் மூத்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் உதை வாங்காமல் தப்பிப்பது பெரும் சவால்.  மதிய உணவு இடைவேளையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்கள் அருகாமை வீட்டு தின்னைகளுக்குச் சென்று உணவுகளை பகிர்ந்து உண்போம்.  அது நெசவாளர்கள் நிறைந்துள்ள பகுதி. இன்முகத்துடன் பிள்ளைகளை உபசரித்து மகிழ்வார்கள் அம்மக்கள். ஒருநாள் மதியம் கூட்டு, பொரியல் ஏதுமின்றி தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை அந்த வீட்டம்மாள் வீட்டிற்குள் அழைத்து ஊறுகாய் அளித்து உபசரித்தார்.  வாஞ்சையுடன் மற்றொரு ஆண்குரலும் எங்களை விசாரித்தது. த

கதைகள்

Image
 தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தமிழில் எம் ஏ சுசீலா நற்றிணை பதிப்பகம் 143 பக்கங்கள்  பிரக்ஞையின்றியோ அல்லது சூழ்நிலையின் தாக்கத்தினாலோ விரும்பத்தகாத அல்லது குற்ற நிகழ்வுக்கு காரணமாகிவிடும் மனிதனின் மனப் போராட்டங்களை துல்லியமாக உணர்த்திவிடும் தருணங்களை காட்சிப்படுத்துவது இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகள்.  கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின்போது அறிந்து கொள்ளப்படும் ஒரு சிறு பெண்ணின் பொருளாதார சாத்தியக்கூறுகள் ஒரு பேராசைக்கார மனிதனை துல்லியமான கணக்கீடுகளுக்கு இட்டுச் சென்று அவற்றை நிறைவேற்றிடவும் வாய்ப்பளிக்கிறது.  ரூபிள்களின் எண்ணிக்கையும், கால நீட்சியின் அடைவும் கணிப்பின்பாற்பட்டே பூர்த்தியாகிறது. பொருளாதாயங்களின் பின்னணி கொண்டே திருமணங்கள் நடைபெறுதலை விளக்கும் கதை இது.  கணநேர உந்துதலில் திருட்டில் ஈடுபட்டு விடுபவனின் மனப் போராட்டங்களை விவரித்துச் செல்கிறது 'நேர்மையான திருடன்'.  திருட்டினை ஒப்புக்கொள்ள மனமின்றியும், நம்பியவனுக்கு இழைத்துவிட்ட பிழைக்காகவும் வருந்தி தவிக்கிறான் அம்மனிதன்.  திருட்டினை நிகழ்த்துவது இவன்தானென்று உறுதியாக நம்பும் வீட்டுக்காரன், ஆதாரமின்றி தவிக்கவில்லை. அச்செயலுக்காக மட

நாவல்

Image
பெருமகிழ்வின் பேரவை அருந்ததி ராய் தமிழில் ஜி குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம் 447 பக்கங்கள் ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலை வாசித்திருக்கவேண்டும்.  வியத்தகு நடுநிலையும், அறச்சீற்றமும் மிகுந்த அருந்ததிராயின் எழுத்துக்கள் வருங்காலங்களின் நம்பத்தகுந்த பெரும் ஆவணமாக நீடிக்கப் போவது உறுதி. 'நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்காகவே நீங்கள் கொல்லப்படலாம்' காஷ்மீர் மக்களின் துயரை, சவால்களை இந்த ஒரு வரியே எடுத்துக்காட்டுகிறது.  'ஆறுதலற்றவர்களுக்கு' என்ற சமர்ப்பணத்துடன் துவங்கும் நாவல், ஏற்படுத்தும் அதிர்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.  நாவலில் இடம்பெறும் வசைச் சொற்கள் வியப்பளிப்பினும், திருநங்கையரின் ஆற்றாமையை, மரத்துப் போய்விட்ட அவர்களின் உணர்வுகளை சற்று அவதானிக்க முடிகிறது.  கைவிடப்பட்ட கல்லறைப் பகுதியில் குடியேறும் 'அஞ்சும்', திருநங்கையரின் உலகை மகிழ்வுடன் வாழும் சாத்தியக்கூறுகளை நம்பிக்க

கதைகள்

Image
அந்திராகம் இஷிகுரோ-குந்தர் கிராஸ்-மார்க்கேஸ் தமிழில் ஜி.குப்புசாமி வம்சி பதிப்பகம் 152 பக்கங்கள்  ஒரு படைப்பாளியின் இரு நூல்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாசிப்பது இல்லை என்ற முடிவினை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.  அட்டைப்படத்தின் அழகிய வடிவமைப்பும், மொழிபெயர்ப்பாளரின் பெயருமே விதிவிலக்கிற்கு போதுமானதாக அமைந்துவிட்டன. ருசிகர்-திரைச்சித்திரம்  இஷிகுரோவின் எழுத்துகள் வாசிக்கையில் காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.  'சாதாரணமாக கிடைப்பது அனைத்தையும் சுவைத்து விட்டால் வாழ்க்கை வெறுத்து விடுகிறது' செவ்வியல் தன்மை கொண்ட இவ்வரியை வாசித்துவிட்டு மனம் சமநிலை இழப்பதை மறுக்க இயலவில்லை.  மான்லியின் மேட்டிமைத்தனத்தை, டேவிட்டின் எளிமை பரிகாசத்திற்கு உள்ளாக்குகிறது.  கிடைக்கப் பெறாதவைகளின் பரிச்சயமற்ற புதிர்த்தன்மைகள், உணர்ந்திராத சுவாரசியங்களுக்கு இட்டுச்சென்று மனித மனங்களை அலைக்கழிப்பதை எடுத்துக்காட்டும் நேர்த்தியான திரைச்சித்திரத்தின் எழுத்துவடிவம் 'ருசிகர்'.  'போரில் என் பங்கு'-ஓர் ஒப்புதல் வாக்குமூலம்  நாஜி இராணுவத்துடனான தனது பால்ய கால அனுபவங்களை நேர்மையுடன் குந்தர் கிராஸ்

நாவல்

Image
நீர்வழிப் படூஉம் தேவிபாரதி நற்றிணை பதிப்பகம் 200 பக்கங்கள்  சம்பவிக்கும் மரணம், ஆழ்மன இடுக்குகளில் விரவியிருக்கும் நிகழ்வுகளை மீட்டெடுக்கிறது.  தோழமை, சுற்றங்களுடனான முரண்படும் தருணங்கள், விரும்பத்தகாத சொற்களை அள்ளி இறைத்து, இடைவெளிகளை நீட்டித்து, வருந்தி ஆற்றாமையுடன் நினைவுகூரும் சாத்தியங்களை கலை நேர்த்தியுடன் எழுதிச் செல்கிறார் தேவிபாரதி.  அன்புமேலிட பெரும் வாஞ்சையுடன் தோழமைகளிடம் இயங்குபவர் என்ற போதிலும், மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் பின்னட்டைக் குறிப்பினை மிகையாகக் கருதவே இடமளிக்காத படைப்பு இது.  வெள்ளந்தியாக வாழ்ந்த காருமாமாவின் மரணத்துடன் துவங்குகிறது நாவல். உரிய மரியாதையுடன் காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுமா அவரது உடல்? என்று தவித்த நிலையில், மகனின் வருகையில் துவங்கி தேர் பவனியுடன் நிறைவடைகிறது தகனம். சிதிலங்களைக் காணநேர்கையில் மனித மனங்களின் துடிப்புகள் எவ்வாறானதாக அமையும்? மனப்பறவையின் அசாத்தியமான வேகம் அளவிடக்கூடியதா என்ன? மனைவியின் விலகலால் அவமானத்துடன் உடைந்துபோகும் காருமாமா,உடன் பிறந்தவர்கள் மீதும், அவர்தம் பிள்ளைகள் மீதும் தூய அன்பினை அளவின்றி செலுத்துகிறார்.

கதைகள்

Image
 வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள் பேர் லாகர்க்விஸ்ட் தமிழில் ஜி குப்புசாமி  வம்சி புக்ஸ்  184 பக்கங்கள்  'இருட்டு சுவாசத்தோடு உள்ளே சென்று நிரம்பி விடும் அபாயம் இருந்தது'.  அவரவரின் அப்பாக்களின் நினைவுகளை மீட்டெடுப்பதாக அமைந்து விட்ட கதை 'அப்பாவும் நானும்'.  ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்காக நான்கு வயதில் (ஆம்! ஒரு வயதைக் கூட்டித்தான்) என் அப்பா, என் கரம்பற்றி முட்புதர்களுக்கு இடையே ஒற்றையடிப் பாதையில் அழைத்துச் சென்றது தெளிவாக நினைவுக்கு வந்தது.  வாசகனை சிரமத்திற்குள்ளாக்காத அழகிய மொழிநடை, மூலப் படைப்பையும் எவ்வகையிலும் சிதைத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.  அனைத்திலும் நல்லவற்றை மட்டுமே பார்க்கத் தெரிந்த லிண்ட்கிரன், இயலாமையை பொருட்படுத்தாது நம்பிக்கையுடன் ஒளிர்விடும் ஆன்மா அவனுடையது.  பயன் உள்ளவனாக வாழுதல் குறித்த அவனது கூற்றுகள் சிந்திக்க வைப்பவை.  ஏதோ ஒன்றை இலக்காக கொண்டு, அலைந்து திரிந்து, அழகியல் தன்மையை வாழ்வில் தொலைத்து விடுபவர்கள் குறித்த மறைமுகமான அல்ல, நேரடியான பகடியாகவே லாகர் க்விஸ்டின் புனைவுகள் தோன்றுகின்றன.  கோபுரத்தின் உச்சியில் தலைகீழாக நிற்கவும்,

நாவல்

Image
பாரபாஸ் (அன்புவழி) பேர் லாகர்க்விஸ்ட் க.நா.சு மின்நூல் 190 பக்கங்கள்  மரண தண்டனை நிறைவேற்றலின் இறுதித் தருணத்தில் தப்பிவிடும் பாரபாஸ், இறையுணர்வு அற்றவனாக இருக்கிறான்.  இறைதூதரின் வாதை மிகுந்த மரணம் அவனை பாதிக்கவில்லை.  அவரது தாயின் துயர்மிகு கண்ணீரை அருகிலிருந்து காண்கிறான். இறை தூதரின் வழிநடப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு விரட்டப்படுகிறான்.  மரண தண்டனை நிறைவேற்றும்போது பூமி இருட்டி விடுவதும், சூழ்ந்திருக்கும் மக்களின் கையறு ஓலமும் அவனை பாதிக்கின்றன.  சுரங்கத்தில் தனது இணை அடிமையின் எண்ண ஓட்டங்களை மதிப்புடன் செவிமடுக்கவும், கழுத்துச் சங்கிலியில் இறை அடையாளத்தை இட்டுக் கொள்ளவும் சம்மதிக்கிறான்.  விசாரணையின்போது இருவரின் வாதங்களும் முரண்படுகையில், இணைஅடிமை சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கிறான்.  கொள்ளையனாக, தந்தையைக் கொன்றவனாக அடையாளப்படுத்தப்படும் பாரபாஸ், தனது உள்ளுணர்வுக்கு புறம்பாக நடந்து கொள்வது இல்லை.  இணைஅடிமை தனது மரண தண்டனையைக் காட்டிலும், பாரபாசின் மறுமொழிகளினாலேயே (விசாரணையின்போது) பெரிதும் வருந்துகிறான்.  அடிமைவோட்டிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளும், சுரங்கத்தின் இருளும

நாவல்

Image
நட்சத்திரவாசிகள் கார்த்திக் பாலசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் 262 பக்கங்கள்  பத்து வருடங்களுக்கு முன்னர் இரா.முருகனின் 'மூன்று விரல்' நாவல் நூலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து வாசித்தேன். ஐடி துறையினரை மையப்படுத்தி எழுதப்பட்ட அந்நூலை வாசித்து முடித்தபோது அத்துறை சார்ந்த புரிதல் ஓரளவுக்கு ஏற்பட்டது.  அந்நாவல் ஒரேயொரு பணியாளரின் வாழ்வையும், பணிகளையும் பெரும்பாலும் மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. கார்த்திக் பாலசுப்பிரமணியனின் நட்சத்திரவாசிகளின் களம் மிகவும் விசாலமானது.  எளிய விவரணைகளில் உள்ளது போன்று தோன்றினாலும், தேர்ந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். துறைசார்ந்த வழக்குச் சொற்களுக்கு அவர் அளித்திருக்கும் விளக்கங்கள், பயன்படுத்தப்பட்ட விதம் மிகவும் அருமை.  அலுவலக உள்குத்து வேலைகள், பணி நெருக்கடி அளிக்கும் மன அழுத்தங்கள், அவற்றை மீறிய நட்புகள், வலியுடன் கூடிய பிரிதல்கள், கார்த்திக்கின் சொற்களில் வாசகனை அவனது துவக்ககால பணி அனுபவங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவை.  நுட்பமான வர்ணனைகளும், சூழலின் நுண்ணிய அவதானிப்புகளும் அவரது எழுத்துக்களில் நிறைந்திருக்கின்றன.  பொதுவாக தனி