Posts

Showing posts from May, 2022

நேசம்

Image
 நேசம் லா.ச.ராமாமிருதம் மின்நூல் 179 பக்கங்கள் லா.ச.ராவின் 11 சிறுகதைகளின் தொகுப்பு இம்மின்நூல்.  கண்கட்டு, காதில் பஞ்சு சகிதம் உப்பில்லா பட்டினியுடன் மௌன விரதம் அனுசரிக்கிறார் பணி ஓய்வு பெற இருப்பவர்.  நவராத்திரி நாட்களில் நடைபெறும் இவ்விரதம் அவரது புறச்சூழல்களில் ஆச்சரியங்களையும், நகைப்புகளையும் கொண்டு வருவதுடன், பெரும் அதிர்வுகளை அவருக்கு ஏற்படுத்தி விரதம் முடிவுக்கு வருகிறது.  சிறு பிணக்கு ஒன்றின் பொருட்டு வீட்டை நீங்கிச் சென்றவர், மீளவும் அவ்விடம் திரும்புகிறார்.  மஞ்சள், குங்குமத்தை தவிர்த்துவிட மறுக்கும் அம்மாவிடம் பெரும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.  விருந்தாளியாக அறியப்பட்ட பெரியவர், இரவு உணவு கொள்ளவும் மறுக்கிறார். கதவை திறந்து வைக்க நிர்பந்திப்பவர் விடியும்முன் அவ்விடம் நீங்கிச் செல்கிறார்.  ஜன்னலோரத்தில் சாக்லேட் ஒன்றுடன், தோடுகள் இரண்டும் தமது இருப்பின் மூலம் வந்திருந்தது யார் என்பதை விளக்கி விடுகின்றன.  குழந்தைகளின் பார்வையில் பெரியவர்களின் ஊடலை அழகாக உணர்த்துகிறது 'அப்பாவின் மீசை' கதை.  தொகுப்பின் நீண்ட கதை 'பாலா'. இந்நூலின் வாசிப்பில் பெரும் தாக்கத்த

சுழலும் சக்கரங்கள்

Image
சுழலும் சக்கரங்கள் ரியுனொசுகே அகுதாகவா தமிழில் கே கணேஷ்ராம் நூல்வனம் வெளியீடு 144 பக்கங்கள் ரியுனொசுகே அகுதாகவாவின் 6 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கும் தொகுப்பு இந்நூல்.  முரகாமியின் முன்னுரையே படைப்பாளியின் மேதமையை உணர்ந்து கொள்ள போதுமானதாக உள்ளது. 'கடவுள்கள் துரதிர்ஷ்டம் பீடிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நம்மைப் போல் அவர்களால் தற்கொலை செய்து கொள்ள இயலாது'.  மேற்கண்ட வரிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக இருப்பினும் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜப்பானிய பண்பாட்டுச் சூழலில் உதிர்க்கப்பட்ட சொற்கள் அவை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.  மழைக்காக கட்டிடத்தில் ஒதுங்கும் கீழ்நிலை ஊழியன், உயிர்த்திருத்தலுக்கான தத்துவ தரிசனத்தை அங்கு பெற்று விடுகிறான்.  கைவிடப்பட்ட பிணங்கள் குவிந்துள்ள அவ்விடத்தில், தலைமயிர்களை சேகரிக்கும் கிழவியின் மூலம் பாம்பினை துண்டங்களாக வெட்டி மீன் இறைச்சி என்று விற்பனை செய்தவள் குறித்து அறிகிறான் அம்மனிதன். கிழவியின் ஆடைகளை பறித்துக் கொண்டு கிளம்புபவன் தன் செயல் குறித்த எவ்வித குற்ற உணர்வும் இல்லாதவனாக, தெளிந்த சிந்தை கொண்டவனாக செல்கிறான்.  எழுத்தாளனின் மனவெழுச்சிகள் நிறைந்

கடிதங்கள்

Image
 கனவிருந்த கூடு அ.வெண்ணிலா  அன்புநிலா பதிப்பகம் 64 பக்கங்கள் தேர்ந்த இரு படைப்பாளிகளின் (அ.வெண்ணிலா -மு.முருகேஷ்) திருமணத்திற்கு முன்பான காதலும், நட்புணர்வும் மிகுந்திருந்த நாட்கள் குறித்த பதிவுகள் இவை. வெண்ணிலா முருகேஷிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். 'ஒரு கன்னி மனசில் காதல் அரும்பி அது கல்யாணத்தில் முடிகிற வரைக்கும் உள்ள கடிதங்கள்' என்றவாறு முன்னுரையில் கி.ரா வாழ்த்துகிறார். 'கனவிருந்த கூடாயினும், நனவிருக்கும் வீடாயினும் வாழ்வுதான் ஒரே உண்மை. வாழ்க்கையில் எதையும் நிரூபிக்க அவசியமில்லை. முக்கியமாக மேலான உறவுகளை'  கல்யாண்ஜியின் வாழ்த்து வரிகள் மேற்கண்டவை.  சந்திப்பு ,புரிதல், விரும்புதல், திருமணம் என்றவாறு நளினமான கூறுகளை உள்ளடக்கி உள்ளன இக்கடிதங்கள்.  சுயமரியாதைத் திருமணம், வாசிப்பு, எழுதுதல் என்றவாறு செல்லும் கடிதங்களில் மெல்லிய உணர்வுகளுக்கும், பொங்கி வழியும் அன்பிற்கும் குறைவில்லை.  இரு நபர்களுக்கு  இடையிலான கடிதங்கள் என்ற எல்லைகளைக் கடந்து  காத்திரமான இலக்கியமாக உருப்பெற்று விடுகிறது இந்நூல்.

நாவல்

Image
 அருகன்மேடு ரமேஷ் பிரேதன் யாவரும் பதிப்பகம் 128 பக்கங்கள் கடலும், காமமும் மிகையின்றி பல்கிப் பெருகி ஆர்ப்பரிக்கும் புனைவு. முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியும், இறுதி அத்தியாயத்தின் நிறைவு பத்தியும் ஒரே மாதிரியாக அமைந்து கச்சிதமாக பொருந்தி விடுகிறது.  எழுத்தே எழுத்தினை எழுதிச் செல்கிறது என்று எங்கோ வாசித்த நினைவு. பூடகமான மொழியில் படைக்கப்பட்டிருக்கும் இந்நாவல் வாசகனின் பிரக்ஞைக்கு சவால் விடுக்கும் வகையில் புனையப்பட்டுள்ளது.  வள்ளத்தான்-ரேமா உரையாடல்கள் கவித்துவமாக நாவலெங்கும் விரவிப் பரந்துள்ளது.  வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மனைத் துணைக் கொண்டு கடலில் கால்நனைப்பவனாக, எளியவனாக தன்னை ரேமாவிடம் முன்னிறுத்துகிறான் வள்ளத்தான்.  எதையும் திட்டமிடாதவளாக, காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படுபவளாக தன்னிலை விளக்கம் அளிக்கிறாள் ரேமா.  அருகன்மேடு அகழ்வாய்வு பகுதிகளும் உரையாடல்களில் இடம்பெறுகின்றன.  தனது தாய், தந்தையை முறையே பானையிலிருந்து வந்தவராகவும், பிணத்தின் அடிவயிற்றில் இருந்து வந்தவளாகவும் வள்ளத்தான் ரேமாவிடம் உரைக்கிறான். சமூகம் என்பது கதைகளால் ஆனது என்ற குறிப்பும் அப்போது இடம்பெறு

இந்திய ஞானம்

Image
 இந்திய ஞானம் தேடல்கள் புரிதல்கள் ஜெயமோகன் மின்நூல் 368 பக்கங்கள்  வேதங்கள், இதிகாசங்கள், திருக்குறள், மதச்சடங்குகள் உள்ளிட்ட அலகுகளில் மற்றும் கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இம்மின்நூல்.  இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இத்தனை சொற்கள் நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடுகின்றன என்றவாறு பெரும் வியப்பை ஏற்படுத்தும் சொற்களின் ஊற்று இக்கட்டுரைகளில் நிறைந்துள்ளன.  தலைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளோ அல்லது கடுமையாக விமர்சிக்கப்படும் கேள்விகளுக்கான எதிர்வினைகளோ எதுவாயினும் ஆழ்ந்த சொற்களைக் கொண்டு உருக்கொள்ளும் ஜெயமோகனின் அல்புனைவு வடிவங்கள் வாசகனை மலைக்க வைப்பவை.  'அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறிக் கஞ்சிக்குப் பறந்த ஒரு நீண்ட காலகட்டம் உண்டு. அன்று பட்டினியால் பரிதவித்தலைந்த மக்களுக்கு இந்திய ஞானமரபின் தத்துவ உச்சங்கள் எப்படிப் பொருள்பட்டிருக்கும்? வறட்டு வேதாந்தம் என்பதில் உள்ள கசப்பு அப்போது உருவானதாகவே இருக்க வேண்டும்'  ஜெமோவின் மேற்கண்ட வரிகள் ஞானம்,தத்துவம் உள்ளிட்ட வகைமைகளில் சாமானிய மக்களின் தொடர்புகள் அறுந்த

கவிதைகள்

Image
 நீரில் அலையும் முகம் அ.வெண்ணிலா அகநி வெளியீடு 64 பக்கங்கள் கடந்து செல்லும் இயல்பான தருணங்களின் நிகழ்வுகள் கவிதைகளாய் மலர்கின்றன வெண்ணிலாவின் புனைவில்.  சாலையோர மரத்தின் அழிப்புக்காக ஒரு கவிதை வருந்தினால், மாநிறத்தின் இயல்பை மற்றொரு கவிதை பகடி செய்கிறது.  பெண் குழந்தைகள் மீதான சார்புகளுடன் கூடிய பார்வையை எடுத்தாளும் கவிதைகளும் உண்டு இத்தொகுப்பில்.  குழந்தைகளுக்கு கற்பிக்கும்போதுதான் புதிது புதிதாக நாமும் கற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்திய கவிதை கீழ்கண்டது. 'சூரியன் பார்த்திருக்கிறேன் நட்சத்திரங்களையும் பூக்களையும் பனித்துளியையும் கூட அத்தனையையும் என் மகளுக்கு அறிமுகப்படுத்தி ரசிக்கையில்தான் புரிந்தது இத்தனை நாட்கள் வெறும் பெயர்களாக மட்டும் அறிந்து வைத்திருந்தேன் என்று' சிறப்பான கவிதைகள் இடம்பெற்றிருக்கும் வாசிக்க வேண்டிய நூல் இது.  

நிரந்தரக் கணவன்

Image
 நிரந்தரக் கணவன் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தமிழில் நர்மதா குப்புசாமி பாதரசம் வெளியீடு 200 பக்கங்கள் 'யாருக்கும் தெரியாது என்று நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எல்லோரும் எப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்' என்ற தி.ஜானகிராமனின் கூற்றினை நினைவுபடுத்தி விட்ட நாவல் இது.  செய்ய நேர்ந்துவிட்ட தவறினால் குற்ற உணர்வுடன் தூக்கமின்மையுடன் வருந்தும் வெல்ச்சேனினோவ், பாவெல் பாவ்லோவிச் தன்னை தொடர்ச்சியாக கண்காணிப்பதை அறிகிறான். நதாலியாவின் இறப்பு குறித்தும், லிசாவின் பிறப்பு சார்ந்தும் பூடகமாக அவனிடம் விளக்குகிறார் பாவெல்.  துவக்கத்தில் அவனைக் கண்டு அஞ்சும் லிசா, நோயுற்று மரணிக்கிறாள். சீண்டல்களை ஏற்படுத்தும் பாவெல் உடனான உரையாடல்கள் வெல்ச்சேனினோவை கவலையடையவும் செய்கின்றன. முதிர் பருவத்தை நெருங்கும் பாவெல், பதின்வயது சிறுமி நத்யாவை மணம் செய்ய எண்ணி, பரிசுப் பொருளுடன் வெல்ச்சேனினோவையும் அழைத்துச் செல்கிறார்.  அறத்தையும், மனசாட்சியையும் உலுக்கிவிடும் உரையாடல்கள் பாவெல்-வெல்ச்சேனினோவ் மற்றும் வெல்ச்சேனினோவ்-லோஃபவ் இடையே நடைபெறுகின்றன.  இளவயதுக்காரனாக இருப்பினும், துல்லியமான அனுமானத்தோட

நிதி

Image
 சிக்கனம் சேமிப்பு முதலீடு சோம வள்ளியப்பன் கிழக்கு பதிப்பகம் 118 பக்கங்கள் ஈட்டிய வருவாயை முறையாக, அவசியம் உள்ள வகைகளில் செலவழித்தல், குறிப்பிட்ட சதவீதம் சேமித்தல், சாதுரியமாக முதலீடு செய்தல் குறித்து சோம. வள்ளியப்பன் இந்நூலில் இருபத்தி மூன்று கட்டுரைகளில் விளக்குகிறார்.  தீவிர இலக்கிய வாசிப்புகள் தந்திடும் மனச்சோர்வினை, இலகுவான வாசிப்புகளின் வழியே குறைத்துக் கொள்ள இது போன்ற நூல்கள் துணைபுரிகின்றன.  நேர்வழியில் உழைத்து படித்து, தகுதிக்குரிய வேலை வாய்ப்பினையும் பெற்றுவிட்ட நபர்கள், அவர்களின் நிதிநிர்வாகம் குறித்த புரிதல்கள் இன்றி, சிக்கல்களை, தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும் தோற்றுவித்துவிடும் விந்தைகளை நாம் காண நேரிடுகிறது.  தாம் ஈட்டிய செல்வத்துடன் சேர்த்து, தமது பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு மற்றும் சொத்துக்களையும் சில ஆண்டுகளில் இழந்து விடுகின்றனர்.  இச் சிறுநூல் அத்தகைய இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியது.  தினமணியில் சோம. வள்ளியப்பனின் நடுப்பக்க கட்டுரைகளை விரும்பி வாசித்தது உண்டு.  ஆரம்பநிலை வாசகருக்கு இந்நூல் இனியதொரு வாசிப்பு இன்பமும் அளிக்க வல்லது.

எண்ணும் மனிதன்

Image
 எண்ணும் மனிதன் மல்பா தஹான் தமிழில் கயல்விழி அகல் வெளியீடு  224 பக்கங்கள்  இயல்பான கணித திறன்களைக் கொண்டோ அல்லது மிகுந்த ஆர்வமுடைய கணித ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு வழிநடத்தப்பட்டோ, கடினமானதாக அல்லது இயல்பு வாழ்வுக்கு பயனற்றதாக, மேலோட்டமான புரிதலுடன் அறியப்படும் கணிதப் பாடத்தை பயின்று, ஆசிரியராகவும் ஆகிவிட்டவர்கள், தமது வழிகாட்டலுக்கு இந்நூலினை நிச்சயமாக அணுகலாம்.  ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 'பெரமிஸ் சமீர்',  தனது முதலாளியின் கண்டிப்புக்கு அஞ்சி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனது மந்தையில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொண்டே இருக்கிறான்.  'எண்ணுதல்' கலையில் அவன் அடைந்து விடும் தேர்ச்சி, பெரும் மரமொன்றின் கிளைகளையும், இலைகளையும் ஒரு சில வினாடிகளில் கணக்கிட்டுக் கூறிவிடும் அளவுக்கு நீண்டு விடுகிறது.  நண்பருடன் பாக்தாத் செல்லும் 'எண்ணும் மனிதன்', கணிதத்தின் அடுத்தடுத்த பரிமாணங்களிலும் தனது தேர்ச்சியை நிரூபிக்கிறான்.  ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்படும் மனிதர்களை தனது திறனால் வியக்க வைத்து வெற்றி கொள்கிறான்.  அரசர் அளிக்க ஒப்புக் கொண்டு விடும் உயர்வான வெகுமத