கட்டுரைத் தொகுதி
மூன்றாவது கண் ஜி குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம் 198 பக்கங்கள் 'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர உழைப்பை இட்டு மகிழும் மொழிபெயர்ப்பாளர்களையும் கண்டடைகின்றனர். 'எந்தக் காற்றானாலும் பறக்கும் பறவை' என்று தனது முன்னேர் மொழிபெயர்ப்பாளரால் வியக்கப்படும் ஜி குப்புசாமி, தமிழின் சமகால, நம்பகமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும், நேர்காணல் தொகுப்புகளையும் முன்பே காலச்சுவடு இதழ்களிலும், கனலி தளத்திலும் வாசித்திருந்தபோதிலும் நூல் வடிவில் வாசிக்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. தொழில்முறையாக பதிப்பாளர் மொழிபெயர்க்கப் பணித்திடும் நூல்களை எடுத்துக் கொள்ளாமல் தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தமிழுக்கு கொண்டுவர விரும்பும் நூல்களை அவரே தேர்வு செய்து பணியாற்றுதல...