கட்டுரைத் தொகுதி
மூன்றாவது கண்
ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்
198 பக்கங்கள்
'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.
பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர உழைப்பை இட்டு மகிழும் மொழிபெயர்ப்பாளர்களையும் கண்டடைகின்றனர்.
'எந்தக் காற்றானாலும் பறக்கும் பறவை' என்று தனது முன்னேர் மொழிபெயர்ப்பாளரால் வியக்கப்படும் ஜி குப்புசாமி, தமிழின் சமகால, நம்பகமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும், நேர்காணல் தொகுப்புகளையும் முன்பே காலச்சுவடு இதழ்களிலும், கனலி தளத்திலும் வாசித்திருந்தபோதிலும் நூல் வடிவில் வாசிக்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
தொழில்முறையாக பதிப்பாளர் மொழிபெயர்க்கப் பணித்திடும் நூல்களை எடுத்துக் கொள்ளாமல் தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தமிழுக்கு கொண்டுவர விரும்பும் நூல்களை அவரே தேர்வு செய்து பணியாற்றுதல் மிகவும் சிறப்பாகும்.
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்தல் வேண்டும்' என்ற பாரதி உலக இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்ற செய்தியும், 'தன்னுள்ளிருந்து கலையின் புயலை பரப்பி அப்புயல் இட்டுச் சென்ற திசைகளில் எல்லாம் சுழன்று ஒரு அசுரத் தன்மைக்கு ஆளான கலைஞர்' என்று புதுமைப்பித்தனை சுந்தர ராமசாமி வர்ணிப்பதும் முதல் கட்டுரையில் இடம்பெறுகின்றன.
சிறுகதைகளுக்காகவே அறியப்படும் புதுமைப்பித்தன், அவற்றிலும் அதிகமான பக்கங்களுக்கு மொழிபெயர்ப்புக்கு பங்களித்திருக்கிறார் என்பது புதிய செய்தி.
சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழியின் 'தோட்டியின் மகன்', 'செம்மீன்' நாவல்கள் காலத்தை வென்ற செவ்வியல் தன்மையுடன் நீடிக்கின்றன.
க.நா.சு, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், வண்ண நிலவன் என்றவாறு பெரும் கலைஞர்கள் மொழிபெயர்ப்புப் பணியில் சிரத்தையுடன் ஈடுபட்டிருப்பது தமிழின் நல்லூழ்.
விளாடிமிர் நபகோவ் குறிப்பிடும் மொழிபெயர்ப்பாளரின் மூன்று பாவங்கள் வரிகளை வாசிக்கையில் மொழிபெயர்ப்புப் பணியின் முக்கியத்துவம் விளங்கும்.
வாசித்துவிட்ட, வாசிக்காமல் வைத்திருக்கும் நூல்களின் பெயர்கள் கட்டுரைகளில் இடம்பெறுகையில் நமது ரசனை குறித்த ஆறுதல் பெற முடிகிறது.
மூலமொழியின் படைப்பாளிக்கும், இலக்கு மொழியின் வாசகனுக்கும் மிகவும் நேர்மையாக செயல்பட்டு உலக இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவரும் பணி, பெருமைமிகு பண்பாட்டுச் செயல்பாடாகும்.
படைப்பினை எளிமைப்படுத்தி, தட்டையாக்கிவிடும் செயல்களை கடுமையாக எதிர்க்கிறார் நூலாசிரியர்.
அருந்ததிராயின் 'பெருமகிழ்வின் பேரவை' நாவலை வாசித்தபோது அந்நூலில் இடம்பெற்றிருந்த வசைச் சொற்கள் மிகுந்த அதிர்ச்சி அளித்தன.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, கொடூரமான அவலச் சூழலில் வாழ நேர்ந்திடும் திருநங்கைகள் இதுபோன்ற சொற்களைத்தானே பயன்படுத்தச் செய்வர், பிரதியிலிருந்து அவற்றை நீக்கிவிடுகையில் கதை மாந்தர்கள் வெறும் எலும்புக் கூடுகளாகவே தெரிவார்கள் என்ற நூலாசிரியரின் கருத்து எண்ணத்தக்கது.
மொழிபெயர்ப்பு நூல்களை சரியான கண்ணோட்டத்துடன் நிதான வாசிப்பின் மூலம் அணுகுதல் வேண்டும் என்ற கருத்தும், 'படைப்பின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக புலப்படுவதுதான் ஆகச் சிறந்த வாசிப்பின்பம்' என்ற வரியும் மனதை தொட்டுவிட்டவை.
'மேலோட்டமான வாசிப்பு வாசகனுக்கு பெரிதாக எதுவும் தந்து விடுவதில்லை' என்ற சு.ராவின் வரி இங்கு நினைவுக்கு வந்தது.
இயல்பாகவே வாசிப்புப் பழக்கத்தில் தனது பதின் வயதிலேயே நுழைந்துவிட்ட நூலாசிரியர், குறிப்பிட்டுச் சொல்லும் நூல்களின் பட்டியல் பெரும் வியப்பை ஏற்படுத்துபவை.
முறையான அனுமதியுடன் உலக இலக்கியங்களைத் தமிழுக்கு கொண்டு வருவதில் பதிப்பாளரின், மொழிபெயர்ப்பாளரின் சிரமங்களை அறிந்து கொள்ள இந்நூலின் வாசிப்பு துணை செய்கிறது.
சிறப்பான அட்டைப்படமும், அறச்சீற்றமும், நேர்மையும் வெளிப்படும் நேர்காணல்களும் நூலின் அழகியல் தன்மையை கூட்டுகின்றன.
முதல் வாசகரிடமிருந்து பெற்றிருக்கும் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி சரவணன் ❤️
ReplyDeleteமிக்க நன்றியும் அன்பும் சார்
ReplyDelete