கவிதைகள்

கொண்டலாத்தி 

கவிதைத் தொகுப்பு 

ஆசை 

க்ரியா பதிப்பகம் 

63 பக்கங்கள் 


ஆசையின் 40க்கும் மேற்பட்ட பறவைகள் குறித்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது. க்ரியாவின் அழகியல் மிகுந்த பதிப்புக்கு மேலும் வசீகரம் கூட்டுபவை இந்நூலில் இடம்பெற்றுள்ள பறவைகளின் வண்ணப் புகைப்படங்கள்.


பறவையினங்களை வெகு நுண்மையாக அணுகி கவி பாடிக் களித்திருக்கிறார் ஆசை.


தையல் சிட்டு பறந்து சென்றபின் அதிரும் இலைக் காம்பை பதிவு செய்பவர், மொழியின் முதல் சொல்லைக் கூட்டில் பறவை அடைகாப்பதாகவும் எழுதி வியப்பு தருகிறார்.


 நுண்ணுணர்வு மிகுந்தவர்களே இலக்கியம் சார்ந்து இயங்க முடியும் என்பது நாம் அறிந்ததே. அதனினும் மென்மையானவர்களே கவி பாடவும், கூர்மையாக அவதானிக்கவும் கூடிய திறன் மிகுந்து திகழக்கூடிய நல்வாய்ப்பு அமையப் பெற்றவர்கள்.


 பறவைகளின் உலகிற்குள் நுழைந்து அவற்றைக் குறித்த கவிதைகளையும் படைத்திருக்கும் ஆசை, தனது மிகத் துல்லியமான பார்வையாலும், படைப்பாற்றலாலும் வாசகனுக்கு தனது அனுபவங்களை நுட்பமாக கடத்தி விடுகிறார்.


'கைக்கெட்டி வாய்க்கெட்டாக் கதை' தலைப்பில் அமையும் கவிதை, குயில், காக்கையின் கூட்டில் முட்டையிடும் என்ற அனைவரும் அறிந்த எளிய தகவலுடன், குயில் இணையரின் காதலையும் அழகுறச் சொல்லிவிடுகிறது.


 மீன் கொத்தி, மண் கொத்தி காற்றுக் கொத்தி, வானங் கொத்தி என்று சிறகு விரித்து பறந்து செல்கின்றன கவிதைகள்.


 வெகு நாட்களுக்குப் பிறகு ஆவலுடன் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கத் துவங்கி நிறைவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.


'காலால் கிளறி 

மூக்கால் முட்டி 

உழுத வயலையே 

உழுது கொண்டிருக்கும்

ஓரேர் உழவன்'

என்று கொக்கு குறித்து கவி பாடுகிறார் ஆசை.


தமிழ் இலக்கிய உலகில் கவிஞர்களின் பணியும் இது போன்றதே என்றுதான் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

கட்டுரைகள்

நாவல்