கட்டுரைகள்
மதுரை போற்றுதும்
ச. சுப்பாராவ்
சந்தியா பதிப்பகம்
200 பக்கங்கள்
விலை ரூபாய் 200
மதுரையுடனான தனது நினைவுகளை, வாழ்வை சுப்பாராவ் 23 கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார்.
வளமான, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திருக்கும் சுப்பாராவ், தனது பிறந்த மண் மீதான பாசத்தை, பிணைப்பை எடுத்துக்காட்டி இருக்கும் விதம் மிகவும் சிறப்பானது.
மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக சில காலம் பணியாற்றி இருக்கிறார் என்ற குறிப்பும், மன்னர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி பற்றிய தகவல்களும் வியக்க வைத்தன.
மன்னர் சேதுபதிக்கு கல்வி மீதான ஆர்வம் எந்த அளவுக்கு இருந்திருந்தால் தனது அரண்மனையை பகுதி பகுதியாக கல்விப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருப்பார் என்று நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது.
50 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் படிப்பகங்கள், வாசிப்பில் சாமானியர்கள் மேம்பட எத்தனை வகைகளில பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
சுப்பாராவின் நினைவோடைக் குறிப்புகள் நம்மையும் நமது இளமைப் பருவ காலங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற அளவிலேயே ஆண்டாள் மீதான புரிதல் இதுவரை இருந்து வந்த நிலையில், ஆண்டாள் மாலை மதுரைக்கு பயணிக்கும் விதங்களை அறிய நேர்ந்தபோது வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
விடுமுறைக் காலங்களில் சித்திரைத் திருவிழா பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகளில் காண நேர்கையில், மதுரை மீதான பெரும் ஆர்வம் ஏற்பட்டதுண்டு.
ஒரேயொரு முறை மதுரைக்கு சென்றிருந்த போதும், கலைஞர் நூலகத்தைத் தவிர வேறெங்கும் விரும்பி சென்றிடவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்காமல் வந்துவிட்ட வருத்தம் இப்போது மேலோங்குகிறது.
மதுரை மக்கள் உணர்ச்சிகர மானவர்கள் என்ற பிம்பத்தை மட்டும் திரும்பத் திரும்ப சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். நீண்ட நெடிய பாரம்பரியமிக்க அம்மண், முற்போக்கு சிந்தனையாளர்களின் வலுவான கோட்டையாகவும் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
புத்தகங்கள் வாங்கிய குறிப்புகளை எல்லாம் சுப்பாராவ் சொல்லிச் செல்லும்போதும், இரண்டு சுப்பிரமணியன்கள் கட்டுரையில் உடற்பயிற்சிக் கூடங்களைப் பற்றிய நீண்ட விவரணைகளும் மலைக்க வைத்தன.
என்பதுகளில் 60, 90 வகையிலான கேசட்டுகளை பயன்படுத்தியதை மற்றொரு கட்டுரை நினைவுபடுத்தியது.
TDK கேசட்டுகள் பாடல் பதிவுகளில் ஏற்படுத்திய புரட்சியும், வணிகப் போட்டியின் காரணமாக குல்ஷன் குமார் படுகொலை செய்யப்பட்டதும் நினைவுக்கு வந்தது.
ஒரே பாடலை கேசட்டின் இரு புறங்களிலும் முழுமையாக பதிவு செய்து திரும்பத் திரும்ப கேட்ட நபர்களைப் பற்றிய நினைவுகளும் சேர்ந்தே வந்தன.
பெரும்பாலும் ராஜாவின் திரை இசைப் பாடல்களை தேர்வு செய்து பதிவுக் கூடங்களின் வாசலில் காத்துக் கொண்டிருந்து பெரும் ஆர்வத்துடன் டேப் ரிக்கார்டர்களில் அப்பாடல்களை கேட்டு மகிழ்ந்த நாட்கள் மறக்கவே முடியாதவை.
மதுரை மீதான ஆர்வத்திலும், சுப்பாராவின் மீதான நம்பிக்கையிலும் இந்நூலை வாங்கி விரும்பி வாசித்தேன். இந்நூலினை மேலும் செம்மைப்படுத்தி வெளியிட்டு இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. கட்டுரைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று விடும் நீண்ட பெயர்ப் பட்டியல்கள் வாசிக்கையில் அலுப்பு ஏற்படுத்துகிறது. இக்குறைகளைத் தாண்டி இந்நூல் மிகவும் சிறப்பானது.
மதுரையின் இசைப் பாரம்பரியம் எம் எஸ் அம்மா, AM ராஜாவின் கச்சேரிகள் உள்ளிட்ட தகவல்கள் அருமை.
மதுரையைப் போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பகுதியைக் குறித்து பேசவும், எழுதவும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
எழுத்தில் கொண்டு வருவதாக இருந்தாலே ஆயிரக்கணக்கான பக்கங்களைத் தாண்டி விடும்.
மதுரை மீதான தனது நினைவுகளை, தனது வாழ்வை மிகச் சிறப்பான நூலாக அளித்திருக்கும் சுப்பாராவின் பணி வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியது.
Comments
Post a Comment