நாவல்
தீரமிகு புது உலகம்
ஆல்டஸ் ஹக்ஸ்லி
தமிழில் ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்
303 பக்கங்கள்
26 ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக புனையப்பட்டுள்ள துர்கற்பனை நாவல் இது. எதிர்மறை சிந்தனை நல்லது என்று எண்ணுகிறார் ஆல்டஸ் ஹக்ஸ்லி.
எதிர்காலத்தில் திணிக்கப்படும் கடுமையான சூழல்களை உறுதியுடன் எதிர்கொள்ள அவை உதவும் என்ற அளவில் அது தர்க்க ரீதியாக பொருந்தி விடுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நாவல் செவ்வியல் தன்மையுடன் 100 ஆண்டுகளைக் கடந்து ஹக்ஸ்லியின் சிந்தனை முன்னோடியானது மட்டுமல்ல, சாத்தியக்கூறுகள் நிறைந்ததும்தான் என்று உணர்த்துவது வியப்பானதொரு விஷயம்.
தீரமிகு புது உலகில் மனிதனின் சுய சிந்தனைகளும், இயல்பான நிகழ்வுகளும் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றன. செயற்கையாக ஒரு கரு, கருவேற்றம் செய்யப்பட்டு போகனாவ்ஸ்கி முறை என்று அழைக்கப்படும் கதிர்வீச்சு முறையில் 96 கருக்களாக பிரிக்கப்பட்டு கருமுட்டைகள் வளர்க்கப்படுகின்றன.
அவை ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்றவாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும் எத்தகைய தன்மையுடன் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
ஆல்ஃபா மனிதர்கள் தன்னுணர்வுடன், அகங்காரம் மிகுந்தவர்களாக தம்மை உணர்கிறார்கள். அதே வேளையில் கடைசிப் பிரிவினர் எப்சிலான்கள், எவ்வித எதிர்ப்பும் இன்றி தமக்கு இடப்பட்ட பணிகளை ஆற்றுபவர்களாக நுண்திறனற்ற பணியாளர்களாக வாழ்கின்றனர்.
துயிற்கல்வி என்றவாறு அவரவருக்கு தமது வரம்புகள், பணிகள் குறித்து போதிக்கப்படுகிறது. தாய் என்ற வார்த்தையும், பாலூட்டுதலும் செயற்கை மனிதர்களுக்கு ஆச்சரியத்தையும் அருவருப்பையும் உண்டாக்குகின்றன.
முற்றிலும் இயந்திரத் தன்மையுடன் செயல்படும் தீரமிகு புது உலகில் இயல்பான மனித உணர்வுகளான கோபம், கவலை, விரக்தி, மகிழ்ச்சி, தியாகம் எவற்றிற்கும் இடமில்லை.
வலிய திணிக்கப்பட்ட இவ்வளவையும் மீறி மனித உணர்வுகள் அவ்வப்போது மேல் எழும்புகின்றன. சோமா என்று சொல்லப்படும் போதை அதையும் மட்டுப்படுத்தி விடுகிறது. ஃபீலி திரைப்படங்களும், கட்டற்ற பாலியல் சுதந்திரங்களும் மகிழ்ச்சி என்ற இயல்பான மனித உணர்வை கேலிக்குள்ளாக்கி விடுகின்றன.
லெனினாவின் மீது ஜான் கொள்ளும் அன்பு அவளது புதுவிதமான இயல்பை அறிகையில் அவனை மூர்க்கனாக மாற்றி விடுகிறது. அநாகரிகன் என்று அழைக்கப்படும் அவன் உதிர்க்கும் ஷேக்ஸ்பியரின் வரிகள் நாவலின் நல்முத்துகள்.
அடிக்குறிப்புகள் ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசகனிடம் எளிமையாக கடத்தி விடுகின்றன. தான் ஒரு டெல்டா பிளஸ் என்று புலம்பும் லிண்டா, சோமா மாத்திரைகளை தொடர்ச்சியாக விழுங்கி முடிவைத் தேடிக் கொள்கிறாள்.
தாய், தந்தை, உடன் பிறந்தோர், உறவினர் யாவரும் எவருக்கும் இல்லை என்ற அளவில் தீரமிகு புது உலகில் தனி மனிதர்களிடம் சுயநலம் மட்டுமே மிகுந்து காணப்படுகிறது. வேறெல்லாவற்றையும்விட தனது நலனே பெரிது என்று கருதும் ஒரு தலைமுறையை நினைக்கவே அச்சம் ஏற்படுகிறது.
இயல்பான மனித உணர்வுகளை வேரறுத்து அமைக்கப்படும் இவ்வுலகம் அச்சமூட்டுவதாக அமைகிறது.
பொரிப்பகம், வளர்ப்பகம், கருவேற்றலர்கள், துயிற்கல்வி, முற்சாய்வு, முறை மாற்றல், இசைப்பகம், பேரிருப்பு, மின்பகவை போன்ற சொற்களை வாசிக்கையில் மனம் ஆனந்தமடைகிறது. பழந்தமிழ் சொற்களை மீட்டெடுத்தும், புத்தம் புதிய சொற்களை உருவாக்கியும் தமிழை தனது அசுர உழைப்பினால் வளப்படுத்துகிறார் மொழிபெயர்ப்பாளர். எந்தக் காற்றானாலும் பறக்கும் பறவையன்றோ அவர்?
நிகழ சாத்தியமில்லாத எதையும் எழுதிவிடவில்லை ஹக்ஸ்லி. அவரது கணிப்பையும் மீறி மிக விரைவாக இப்படி ஒரு யுகத்திற்கான சாத்தியக்கூறுகளை மறுத்துவிட இயலாது.
நாவலின் இறுதியில் அநாகரிகன் ஜானுக்கு ஏற்படும் நிலையும், கடைசி வரிகளும் அதிர வைப்பவை.
'வடக்கே, வட கிழக்கே, கிழக்கே, தென்கிழக்கே, தென்-தென்மேற்கே, பின் அசைவற்று நிலைத்தன'.

Comments
Post a Comment