கட்டுரைகள்
விண்மீன் துகள்கள் நாம் அறிவியல் கட்டுரைகள் ஆசை சீர்மை பதிப்பகம் 226 பக்கங்கள் விலை ரூபாய் 290 கவிஞராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்படும் ஆசை, மிக எளிய நடையில் எழுதியுள்ள அறிவியல் கட்டுரைகள் நிறைந்துள்ள நூல் இது. மனித வாழ்வை மிகமிக சுவாரசியமாக்கி, தேடலை ஏற்படுத்தி, அற்ப கவலைகளை மறக்கச் செய்து, நிலையாமையை உணர்த்துவதில் வானியல் பற்றிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி எங்கோ அந்தரத்தில் தனது அச்சில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுகூரும் தருணத்தில் ஒருவித பரவசம் ஏற்பட்டு விடுகிறது. அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதிய சுஜாதா முதல், 'அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு' என்ற நூலினை எழுதிய பில் பிரைசன் வரை ஆசை மேற்கோள் காட்டுகிறார். விரிவடையும் பிரபஞ்சம், சுருங்கும் பிரபஞ்சம், ஒளியின் வேகம், கால இயந்திரம் போன்ற தகவல்கள் இந்த நூலுக்கு 'Pageturner' தரத்தை அளித்து விடுகிறது. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி எது? என்று வாசகனை வினவுகிறார் ஆசை. வானமே அந்த தொலைநோக்கி என்று பதில் உரைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். ...