கட்டுரைகள்
விண்மீன் துகள்கள் நாம்
அறிவியல் கட்டுரைகள்
ஆசை
சீர்மை பதிப்பகம்
226 பக்கங்கள்
விலை ரூபாய் 290
கவிஞராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்படும் ஆசை, மிக எளிய நடையில் எழுதியுள்ள அறிவியல் கட்டுரைகள் நிறைந்துள்ள நூல் இது. மனித வாழ்வை மிகமிக சுவாரசியமாக்கி, தேடலை ஏற்படுத்தி, அற்ப கவலைகளை மறக்கச் செய்து, நிலையாமையை உணர்த்துவதில் வானியல் பற்றிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் உண்டு.
நாம் வாழும் பூமி எங்கோ அந்தரத்தில் தனது அச்சில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுகூரும் தருணத்தில் ஒருவித பரவசம் ஏற்பட்டு விடுகிறது. அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதிய சுஜாதா முதல், 'அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு' என்ற நூலினை எழுதிய பில் பிரைசன் வரை ஆசை மேற்கோள் காட்டுகிறார்.
விரிவடையும் பிரபஞ்சம், சுருங்கும் பிரபஞ்சம், ஒளியின் வேகம், கால இயந்திரம் போன்ற தகவல்கள் இந்த நூலுக்கு 'Pageturner' தரத்தை அளித்து விடுகிறது. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி எது? என்று வாசகனை வினவுகிறார் ஆசை. வானமே அந்த தொலைநோக்கி என்று பதில் உரைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
சென்னை பிர்லா கோளரங்கத்தில் வானவியல் படக்காட்சி அரங்கில் பல் மருத்துவமனைகளில் உள்ளது போன்ற சாய்வு இருக்கைகள் அமைத்திருப்பார்கள். அந்த இருக்கையில் அமர்ந்து மேல்நோக்கி பார்க்கையில் கோள்கள் பற்றிய படக்காட்சிகள் ஒளிபரப்பப்படும். அற்புதமான அனுபவம் அது. வானமே பிரபஞ்சத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி என்ற கூற்று மெய்யாகிவிடும் தருணம் அதுவே.
சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிய அரிய தகவல்களை 'அந்தரத்தில் ஒரு அற்புத கட்டுமானம்' என்ற கட்டுரை அறியத் தருகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய கட்டுரை அவரது கருந்துளைகள் குறித்த ஆராய்ச்சிகளை சுருக்கமாக கூறுகிறது.
மிகவும் இளம் வயதில் கழுத்திற்கு கீழே உடலின் செயல்பாடுகளை முழுமையாக இழந்துவிட்ட அவர், சிந்திக்கும் திறனை முழுமையாக கையாண்டு நோபல் பரிசு பெற்று பெருவாழ்வு வாழ்ந்து மறைந்து விட்ட செய்தி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணிக்க இயலும் எனில், தொலைதூரம் சென்று விட்டு திரும்புகையில், பயணம் ஆரம்பிக்கையில் குழந்தையாக இருந்த அவரது பிள்ளை திரும்பி வரும்போது முதியவராகவும், ஒளி வேகத்தில் பயணித்தவர் அதே இளமையோடும் இருப்பார் என்ற தகவல் கால-வேக தொடர்பை மாய யதார்த்தத்துடன் உணர்த்துகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிப்பது சாத்தியமில்லை என்ற போதும், அதுபோன்ற தகவல்கள் நாம் வாழும் பிரபஞ்சத்தின் கணக்கிலடங்கா அதிசயங்களை விளக்குகிறது, காலஎந்திரம் தொடர்பான கதைகளை சிறுவயதில் வாசித்து ஆச்சரியப்பட்டது உண்டு. சமீபத்தில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களும் இக்கருத்தை மையமாகக் கொண்டு வெளிவந்தன.
ஸ்டீபன் ஹாக்கிங் கூற்றுப்படி அப்படி ஒரு கால இயந்திரம் மனிதனின் அறிவு வளர்ச்சியினால் கண்டறியப்பட்டால் அக்கருவியினைக் கொண்டு வருங்காலத்திற்கு மட்டுமே செல்ல இயலும், கடந்த காலப் பயணங்கள் ஏதும் சாத்தியமில்லை என்பதை அறிகிறோம்.
40 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்நூலினை மிக எளிமையாக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார் ஆசை. இந்நூல் ஆசிரியர்களும், மாணவர்களும் வாசித்து மகிழ வேண்டிய நூல். விண்வெளி சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற நல்ல நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும். அந்நூல்கள் தமிழகப் பள்ளி நூலகங்களில் இடம்பெற்று அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் நிலையற்ற இவ்வாழ்வில் தேடலையும் உவகையையும் அளிப்பது வாசிப்பு பழக்கம் தானே!

Comments
Post a Comment