நடைவழி நினைவுகள்1 வாசிப்பு பதிவு
நடைவழி நினைவுகள் தொகுதி-1
சி.மோகன்
மின்நூல்
88 பக்கங்கள்
இந்து தமிழ்திசை நாளிதழில் வெளிவந்த சி.மோகனின் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தமிழ்நாவல் வகைமைக்கு பூர்வாங்க வடிவம் அளித்ததுடன், அயல் இலக்கியங்களை தனக்கே உரிய பாணியில் மொழிபெயர்த்தமை, கவிதைகளில் ஈடுபாட்டுடன் முயன்றமை உள்ளிட்ட க.நா.சுவின் செழுமையான இலக்கியப் பணிகளை முதல் நான்கு கட்டுரைகள் பேசுகின்றன.
'சர்மாவின் உயில்' நாவலில் எடுத்தாண்டிருக்கும் கருவை விளக்குவது போன்றே அப்படைப்பாளியின் வாழ்வும் அமைந்து விட்டிருக்கிறது.
முதிர்ந்த வயதில் கைகள் இரண்டிலும் துணிப்பைகளில் புத்தகங்களை சுமந்து திரிந்த சி.சு.செல்லப்பாவின் தளராத இலக்கியப்பணி நெகிழச் செய்கிறது.
தனது வாழ்வின் முதல் பகுதியை நாட்டின் சுதந்திரத்திற்காகவும், இரண்டாம் பகுதியை தமிழ் இலக்கியத்திற்காகவும் அளித்து விட்டதாக கூறும் அவர், வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.
படைப்புகளின் வெளிச்சத்தினாலேயே மிகவும் தாமதமாக அறியப்பட்டு, தங்கும் இடத்தில் இருந்து வலிய முயன்று வெளியேற்றப்பட்ட ப.சிங்காரம், தமிழுக்கு அளித்திருக்கும் அற்புதமான இரு நாவல்கள் 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' குறித்த தரவுகள் அந்நாவலை வாசித்த நாட்களை நினைவு படுத்துகின்றன.
இசையை, அழகியலை, அன்பினை, தன்னம்பிக்கை மிகுந்த பெண்களை தனது நாவல்களில் படைத்தளித்த தி.ஜா, குறித்த கட்டுரைகள் அப்படைப்பாளியுடன் அமைந்துவிட்ட சி.மோகனின் பரிச்சயங்களை வாசகனுக்கு விளக்குபவை.
இந்நூலினை வாசித்து நிறைவு செய்கையில், இனி வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் நீள்வதை உணரமுடிகிறது.
அருமை.
ReplyDeleteமிக்க நன்றி மேடம்
ReplyDelete