நடைவழி நினைவுகள் 3

 நடைவழி நினைவுகள் 3 

சி.மோகன் 

மின்நூல் 

87 பக்கங்கள் 


எண்பதுகளின் மத்தியில் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி கதிரில் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைகளும், தேசப் பிரிவினையின்போது ஹைதராபாத் இணைப்பின் நெருக்கடியான காலகட்டங்களை பின்னணியாகக் கொண்ட எளியமொழியில் அமைந்த கதைகளையும் வாசித்திருக்கிறேன்.


 அசோகமித்திரன் என்ற பெருங்கலைஞன் எவ்வித பிரயத்தனமும் இன்றி வெகு இயல்பாகவே மனதில் வந்தமர்ந்த அழகிய தருணங்கள் அவை.


 272 சிறுகதைகள், 9 நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள் எழுதிக் குவித்திருக்கும் அப்படைப்பாளியின் இறப்புச்செய்தி அதே நாளிதழில் சிறிய அளவிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது ஏற்கவே முடியாத பெரும் சோகத்தை அளித்தது.


 மோகனின் நான்கு கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது அசோகமித்திரனின் நினைவுகளில் நம்மை சற்றுநேரம் பிணைத்துக் கொள்ள இயலுகிறது.


 சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நற்றிணை பதிப்பக ஸ்டாலில் பச்சை வண்ணத்தில் செம்பதிப்பாக வெளியிடப்பட்டிருந்த அழகியதொரு முழுத்தொகுப்பு நூலை கையில் ஏந்தியபோது பூரிப்பாக இருந்தது. அன்று அந்நூலை வாங்க இயலவில்லை.


 இணையம் மூலமாக பின்பொருமுறை நூலினை வாங்கி ஒரு மாதத்தில் வாசித்து முடித்தேன். நூலின் பெயர் 'மா.அரங்கநாதன் படைப்புகள்'.


 முத்துக்கறுப்பன் கதைகளை வாசித்தவர்களால் எப்படி அவற்றை மறக்க இயலும்? 50 வயதிற்குப் பின்னர் தனது முதல்நூலை அச்சில் கண்டு மகிழ்ந்தவர், தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்புகளை மோகன் மிகஅழகாக எழுதிச் செல்கிறார்.


 வேறொரு சமயம் நூலகத்தில் புத்தகங்களை இரவல் பெற்று மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த நாட்களில், 'வியப்பளிக்கும் ஆளுமைகள்' என்ற நூல் கண்ணில்பட்டது. உடனடியாக வாசித்துவிடவும் முடிந்தது.


 ஆழமான நீண்ட கட்டுரைகளின் தொகுப்பான அந்நூலின் ஆசிரியர் வெங்கட் சாமிநாதன் சமரசமற்ற கூர்மையான விமர்சனங்களுக்கு முன்னோடியாக குறிப்பிடப்படும் எழுத்தாளர். வெங்கட் சாமிநாதன் உடனான மோகனின் நாட்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தின.


'அன்று பூட்டிய வண்டி' என்ற ந.முத்துசாமியின் ஒரேயொரு நூலை மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறேன்.


 சிறுகதைகள், நாடகங்கள் போன்ற வகைமைகளில் மிகச்சிறந்த கலைஞனாக கொண்டாடப்படும் ந.முத்துசாமி குறித்த மோகனின் கட்டுரைகளும் மிகவும் சிறப்பானவை.


 16 கட்டுரைகளையும் வாசித்து முடித்தபின் மனம் கனப்பதையும், நிறைவான ஒரு உணர்வு அடைந்து விடுவதையும் ஒருங்கே உணரமுடிகிறது.


 மோகனின் எழுத்துக்களின் வெற்றியும் அதுவென்றே தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்