நடைவழி நினைவுகள் 4
நடைவழி நினைவுகள் 4
சி மோகன்
மின்நூல்
88 பக்கங்கள்
#தருமு_சிவராம்
'உத்வேகத்தின் எக்காளம்' என்று மோகனால் குறிப்பிடப்படும் பிரமிளை, சுயமதிப்பை நிலைநிறுத்திக் கொண்ட, பெருமிதத்துடன் படைப்பியக்கத்தில் முன்னின்ற கலைஞனாகக் கொள்ளலாம்.
படைப்பின், படைப்பாளனின் மேதமையை அறிந்து கொள்ளாத சமூகத்தின் மீது வருத்தம் கொள்வது ஒரு நிலை. அத்தகைய உணர்வின்றி, தன் சுயத்தை அறிந்துணர்ந்து, மிடுக்குடன் படைப்பு மன நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுதல் மற்றொரு நிலை. இரண்டாம் நிலையின் பெரும் அடையாளமாக அறியப்பட்டிருக்கிறார் 'நட்சத்திரவாசி'.
#சம்பத்
'இடைவெளி' நாவல் குறித்து பேசும் மோகன், 'இன்றும்கூட மேலதிகமான புரிதலுடன் இந்நாவல் மேலும் மேலும் கிளர்ச்சியை அளித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாசிப்பின் போதும் திகைப்பூட்டுவதாகவும், ஒரு ரகசிய இதழை விரிப்பதாகவும் இருந்துகொண்டிருக்கிறது'. என்றவாறு பதிவு செய்யும் சொற்கள் நாவல் குறித்த புரிதல்களுக்கு இட்டுச் செல்பவை.
மரணம், 'இடைவெளி' எனில், நாம் அறிந்த வாழ்வு முதல்பாகம் ஆகவும், மரணத்துக்கு பிந்தையநிலை, புதிர்மிகுந்த, அவரவர் நேரிடையாக எதிர்கொண்டே ஆகவேண்டிய இரண்டாம் பாகமாகவும் அமையும் போலும்.
#பிரபஞ்சன்
'தினமும் இருவேளை உணவு தொடர்ச்சியாக கிடைத்திருந்தால் இன்னும் நிறைய எழுதி இருப்பேன்' என்ற பிரபஞ்சனின் வரி தமிழ் இலக்கியச் சூழலினை சுருக்கமாக விளக்கி விடுகிறது.
'காலத்தில் கணிந்து மெருகேறிய படைப்பாளுமை பிரபஞ்சன். மனிதமன சுழிப்புகளின் மாயவசீகரங்களை வசப்படுத்தியவர்' என்ற மோகனின் வரிகள், பிரபஞ்சனை வாசித்து அறிந்தவர்களுக்கு நினைவலைகளையும், இன்னமும் வாசிக்காதவர்களுக்கு தேடலையும் ஏற்படுத்துபவை.
புதுவை அரசு அக்கலைஞனுக்கு அளித்த கௌரவங்கள் ஆறுதல் அளிப்பவை.
#கோபிகிருஷ்ணன்
நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் 'கோபிகிருஷ்ணன் படைப்புகள் முழுத்தொகுப்பு' ஒரு அற்புத நூல். வணிக சமரசங்களற்ற, மனித மனங்களின் ஊடான உள்முக பயணங்களை முன்னெடுக்கும் அரியவகை நூல் அது.
'துயர்கவிந்த வாழ்வினூடாகத் தன் எழுத்தை கலை நம்பிக்கையோடு பேணியவர் கோபிகிருஷ்ணன்' லௌகீக வாழ்வை சிரமமின்றி அமைத்துக் கொள்ளும் திறன்கள் வாய்க்கப்பெற்று இருந்தும், தவிர்க்க முடிந்த சவால்களை, ஆர்வமுடன் எதிர்கொண்டு, தன்னை கடினமான சூழல்களிலேயே பிணைத்துக் கொண்ட பெரும் கலைஞனின் வாழ்வுகுறித்த மோகனின் குறிப்பு அது.
'நடைவழி நினைவுகள்' நான்கு தொகுதிகளிலும் இடம்பெறும் 16 ஆளுமைகள் குறித்த 64 கட்டுரைகளும் கொண்டாடப்படவேண்டிய மோகனின் செழுமையான படைப்புகள்.
Comments
Post a Comment