மொழிபெயர்ப்பு பார்வைகள்

 மொழிபெயர்ப்பு நூல்கள் 2000 - 2020


'மொழிபெயர்ப்பு வெவ்வேறு மொழிகளுக்கிடையே அமைந்திருக்கும் உறவின் வெளிப்பாடு' - வால்டர் பெஞ்சமின்.


'இருவேறு மொழிகள் சந்திக்கும் ஓர் இடமாக மொழியாக்கங்கள் இருக்கின்றன' - பிரபஞ்சன்


சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது படைப்பாளி ஒருவர் தீவிரமான முகபாவத்துடன் குறிப்பிட்ட நூல் ஒன்றின் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவு செய்யும் காட்சி அது. உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிட்டவர் நூலினை நிறைவு செய்த விநாடியில் எழுதுபலகையுடன் கூடிய தாள்களை தனது நெற்றியில் வைத்து முழுமையின் நிறைவில் லயித்தது மெய்சிலிர்க்க வைத்தது. எழுதுகையில் அவரது முகத்திலும் கண்களிலும் துல்லியமான அதிர்வுகளை காணமுடிந்தது. அவரது அனுமதியின்றி அக் காணொளி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி. அவர் நிறைவு செய்த படைப்பு அருந்ததி ராயின்  இரண்டாவது நாவல் 'பெருமகிழ்வின் பேரவை'(Ministry of atmost happiness). ஜனவரி 2020 புத்தகக் காட்சியில் காலச்சுவடு வெளியீடாக அந்நூல் வெளிவராமல் தாமதமாகியது மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தீவிர வாசகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்திருக்கும்.


2000ல் இருந்து 2020 வரை பெரும் எண்ணிக்கையில் காத்திரமான மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன அயல் மொழி நூல்களைப் போன்றே இந்திய மொழி நூல்களும் பெரும் கவனத்துடன் சிரத்தையாக மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்கு கிடைத்திருக்கின்றன.


மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பு எந்த வகையிலும் மூலமொழி படைப்பாளிகளின் உழைப்புக்கு குறைந்தது அன்று. கூடுவிட்டு கூடு பாய்வது போன்று மற்றவரின் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு தனது மொழிக்கு அப்படைப்பை கொண்டுவர கடும் பிரயத்தனத்துடன் தீவிரமாக உழைக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.


கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுக்கு நான்கு நூல்கள் என்ற வீதத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேரடி தமிழ் நூல்களின் வீச்சிற்கு சற்றும் குறைவின்றி அமைந்தவை அந்நூல்கள்.


பனி

ஓரான் பாமுக்

ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


 இஸ்தான்புல் நகரிலிருந்து கார்ஸ் நகருக்கு 'கா' என்ற பத்திரிகையாளன் பயணிக்கிறான். முக்காடு அணியும் பெண்களின் தற்கொலைகளை ஆராயும் பொருட்டு அமைகிறது அப்பயணம். தனது முன்னாள் காதலி 'இபெக்'கை சந்திக்கிறான். அடிப்படைவாதிகளுக்கும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கும் இடையேயான எண்ணங்களின் மோதல்களை துல்லியமாக பதிவு செய்கிறது நாவல். 'கா' தலையில் சுடப்பட்டு மரணிக்கிறான். சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை 500க்கும் மேற்பட்ட பக்கங்களில் தொய்வின்றி நீட்டித்து புதியதொரு வாசிப்பு அனுபவத்தை அளித்த நாவல் இது.


தனிமையின் நூறு ஆண்டுகள்

காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்

ஞாலன் சுப்பிரமணியன் சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகம்


 முழு சுதந்திரத்துடன் வாசகனாக நாவலை அணுகி வாசித்த சுகுமாரன், நாவலின் அகச்சிக்கலுடனும், உட்கூறுகளுடனும் பயணித்து தமிழுக்கு கொண்டுவந்திருக்கும் படைப்பு இது. மாய யதார்த்தவாதத்தை எளிய தமிழ் வாசகனுக்கு கொண்டுசேர்க்கும் இந்நாவல், மகோந்தா கிராமத்தின் நூறாண்டு தனிமையை பதிவுசெய்கிறது. உர்சுலா கிழவி மறக்க இயலாதவளாக ஆகி விடுகிறாள்.


இரண்டாமிடம்

எம்.டி.வாசுதேவன் நாயர் குறிஞ்சிவேலன்

சாகித்திய அகாதமி வெளியீடு


பீமனின் பார்வையில் மகாபாரதத்தை அணுகும் வகையில் எழுதப்பட்ட நாவல். பெரும் உழைப்பை அளித்து பாண்டவர் தரப்பின் வெற்றிக்கு காரணமான பீமன் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறான். யுதிர்ஷ்டிரனை கடுமையாக பல தருணங்களில் கண்டிப்பவன், மனைவி திரவுபதியின் அன்பு வார்த்தைகளுக்கு கட்டுண்டு கிடக்கிறான். கௌரவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை அளித்த பீமன் பாண்டவர்களுள் நற்குணம் மிகுந்தவனாக பரிணமிக்கிறான்.


என் பெயர் சிவப்பு

ஓரான் பாமுக்

ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


 பாழடைந்த கிணற்றில் கிடக்கும் சடலத்தின் எண்ணவோட்டத்துடன் துவங்கும் நாவல், நடந்த கொலை குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. வசீகரன் எஃபெண்டி உள்ளிட்ட  நுண்ணோவியர்களின் இருப்பு நாவலை அழகு படுத்துகிறது. தமிழில் வெளிவந்த ஓரான் பாமுக்கின் முதல் படைப்பு என்ற சிறப்பும் இந்நூலுக்கு உண்டு. பதினாறாம் நூற்றாண்டின் துருக்கி ஆட்டமன் சாம்ராஜ்ய நிகழ்வுகளை வாசகனுக்கு காட்சிப்படுத்துகிறது.


கரமாஸவ் சகோதரர்கள் 

தஸ்தயேவ்ஸ்கி

அரும்பு சுப்ரமணியன்

காலச்சுவடு பதிப்பகம்


ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு. யயாதி மன்னனைப் போன்ற மனநிலை கொண்ட ஃபியோதர் பாவ்லவிச் கரமாஸவ், தனது மகன்கள் திமித்ரி, இவான், அலெக்ஸெய் ஆகியோருடன் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறான். முறையற்ற வழியில் பிறந்த தனது மற்றொரு மகன் ஸ்மெர்தியாக்கவினால் கொல்லப்படுகிறான். கொலைப்பழி உணர்ச்சிவசப்பட்ட மனநிலை கொண்டவனான திமித்ரி மீது விழுகிறது. கடவுளின் இருப்பு குறித்த விவாதங்கள் இந்நூலின் பெரும் சிறப்புகளில் ஒன்று. வலிகளுடனேயே வாழ்ந்த தஸ்தயேவ்ஸ்கி, தமிழுக்கு மொழிபெயர்த்த 'அரும்பு' அவர்களுக்கு தன் வலியில் ஒரு பங்கினை மொழிபெயர்ப்பின் போது அளித்ததாக ஒரு குறிப்பும் நூலில் இருக்கிறது.


மார்க்சிய மெய்ஞானம் 

ஜார்ஜ் பொலிட்ஸர்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்


 மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்களை பெரும் ஆர்வத்துடன் வாங்கி விட்டு வாசிக்க துவங்குகையில் குழப்பமே மிஞ்சியது. புத்தகக் காட்சியில் சந்தித்த நண்பர் ஒருவரின் ஆலோசனையின்படி மேற்கண்ட நூலினை வாங்கினேன். மிகவும் இளம்வயதில் மரண தண்டனைக்கு உள்ளாகி உயிர் துறந்த ஜார்ஜ், இந்நூலில் மார்க்சியத்தை எளிமையாக விளக்குகிறார். குறைந்தபட்சம் புதிய, குழப்பம் ஏற்படுத்தும் வார்த்தைகளுக்காவது இந்நூலினை வாசிப்பதன் மூலம் தெளிவுபெற முடியும். அவ்வகையில் இந்நூல் மார்க்சிய வாசிப்புக்கான நுழைவு வாயிலாக விளங்குகிறது.


உடைந்த குடை

தாக் ஸூல்ஸ்தாத்

ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


 இப்சனின் நாடகத்தை மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்பிக்கத் தொடங்குகிறார் ஆசிரியர் எலியாஸ் ருக்லா. வகுப்பில் துவங்கும் சலசலப்பு அவரை சமநிலை இழக்கச் செய்கிறது. நிலவும் எதிர்ப்பு தாங்க முடியாத நிலையில் வகுப்பில் இருந்து வெளியேறிச் செல்கிறார். மழை பெய்யத்துவங்குகிறது. குடையை விரிக்க இயலாது கோபமுடன்  ஓங்கியடிக்கிறார். சுற்றி நிற்பவர்கள் தன்னைக் கூர்ந்து நோக்குவதை உணர்ந்து மெதுவாக அவ்விடம் விட்டு தனது நினைவுகளுடன் பயணிக்கிறார். 600 நாட்களுக்கும் மேலாக உழைத்து தமிழுக்கு இப்படைப்பை கொண்டு வந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். 'அவர் நடந்து கொண்ட விதம் மெதுவாக உறைக்கத் துவங்கியபோது மனம் கலங்கியது' மறக்கவே இயலாத சொற்கள் இவை.


மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒருநாள்

 டயான் ப்ரோகோவன் ஆனந்த்

காலச்சுவடு பதிப்பகம்


அதிகாலை நேரம் படுக்கையிலேயே இறந்துவிட்ட கணவருடன் நாள் முழுவதும் தனது நினைவுகளை மீட்டெடுக்கிறார் மனைவி. மரணச் செய்தியை அறிவித்து விட்டால் தனது கணவரின் உடலை மயானத்திற்கு விரைவாக அடக்கம்செய்ய எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சஉணர்வு அவரை ஆட்கொள்கிறது. கணவரின் உடலுடன் இயல்பாக உரையாடுகிறார். மனவளர்ச்சி குன்றிய சிறுவன் வீட்டிற்குள் நுழைகையிலும், தன்னுடன் வழக்கமாக விளையாடி மகிழ்பவர் மரணித்து விட்டிருப்பதை அச்சிறுவன் அறிந்து விடும்போதும் பெரும் பதற்றம் அடைகிறார். கவிஞர் ஆனந்த் தமிழுக்கு அளித்திருக்கும் காத்திரமான நாவல் இது.


குற்றமும் தண்டனையும்

தஸ்தயெவ்ஸ்கி

எம் ஏ சுசீலா

நற்றிணைப் பதிப்பகம்


 வறுமையின் கொடுங் கரங்களில் சிக்கித் தவிக்கும் ரஸ்கோல்நிகோவ்  சாகசமாக வட்டிக்கடை கிழவியை கொன்றுவிட்டு அதிர்ஷ்டவசமாக தப்பிவிடுகிறான். விசாரணை அதிகாரி அவனது குற்றத்தை ஊகித்துவிட பெரும் மனப் போராட்டத்திற்கு ஆளாகிறான். மொழிபெயர்ப்பாளர் எம் ஏ சுசீலா தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களை அதன் தீவிரத்துடன் தமிழுக்குக் கொண்டு வருவதில் வெற்றி அடைந்திருக்கிறார். வறுமை, காதல், காமவேட்கை, மனம் திருந்துதல்கள் என ஆழ்மன இருட்குகை பயணங்களை வாசிப்பினூடே சாத்தியப்படுத்தும் காலத்தால் நிலைபெற்ற படைப்பு இது. ரஸ்கோல்னிகோவ்,ஸ்விட்ரிகைலவ் ஆகியோரின் மனமாற்றங்கள் இந்நூலின் ஆகச் சிறப்பான பதிவுகள்.


வெண்ணிறக் கோட்டை 

ஓரான் பாமுக் 

தமிழில் ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


 பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரை கண்முன்னே கொண்டு வந்த படைப்பு.நடுக்கடலில் விறுவிறுப்பாக துவங்கும் நாவல் புதிய வாசிப்பனுபவத்தை வழங்கத் தவறவில்லை.

கப்பலில் பிடிபட்ட 'அவன்' அடிமையாக நடத்தப்படுகிறான். மதமாற்றத்திற்கு மறுக்கிறான்.தன்னைப் போன்ற தோற்றமுடைய ஹோஜா என்பவனிடம் ஒப்படைக்கப்படுகிறான்.

இளம்வயது சுல்தானுடன் நெருக்கமாகிறான் ஹோஜா.'அவனது' அறிவார்ந்த திறன்களை கொண்டு அரசனிடம் செல்வாக்கை உயர்த்திக்கொண்டு தலைமை ஜோதிடராக உயர்கிறான்.நகரில் பிளேக் பரவுகிறது. ஹோஜாவிடம் இருந்து தப்பிச் செல்லும் 'அவன்' சில காலம் கழித்து பிடிபடுகிறான்.போலந்துக்கு எதிரான யுத்தத்தில் பெரும் ஆயுதம் ஒன்று தயாரிக்கும் பணி சுல்தானால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.வீரர்களின் அவநம்பிக்கைகளையும் மீறி சுல்தானின் ஆதரவு அவர்களுக்கு சாத்தியப்படுகிறது.அடிமை அங்காடியில் 'அவன்' ஹோஜாவால் விற்கப்படுகிறான்.

சுல்தானின் வீழ்ச்சிக்கு முன்னரே ஹோஜா பதவியிலிருந்து விலகி விட்டு பாதுகாப்பாக வெளியேறுகிறான்.

நாவலின் முடிவில் 'அவன்' மாய நிழலாக வெளியேறுகிறான்.

நாவலில் மிகவும் ஈர்த்த வரிகள் இவை."நம் மனதை திசை திருப்பும் கதைகளை கண்டுபிடிப்பதும், கேட்பதும் தானே வாழ்வின் சுவையான அம்சம்?" "வினோதமும் வியப்பும் கொண்ட விஷயங்களை நாம் தேடிச் செல்லத்தான் வேண்டும் அவைதான் இவ்வுலகம் நமக்கு உண்டாக்கும் மன சலிப்பை ஒழிப்பதற்கு மருந்து"

"இஸ்தான்புல் ஒரு அழகான நகரம்தான் என்று உணர்வேன். ஆனால் இங்கே ஒருவன் எஜமானாகத்தான் வாழ வேண்டும்".

"அந்த முட்டாள் கூட்டத்திலிருந்து தான் வேறுபட்டவன் என்பதையே இப்போதுதான் அவன் உணர்ந்திருப்பதால் அறிவியலை நுட்பமாக ஆராய்வதற்கு அவனிடம் பலமோ, ஊக்கமோ இல்லையென்றும் சொல்லலாம். ஆனால் மற்றவர்களைவிட தான்  மிகவும் வித்தியாசமானவன் என்று மட்டும் திடமாக நம்பத் தொடங்கி விட்டிருந்தான்".


சோபியின் உலகம்

யொஸ்டைன் கார்டர்

ஆர்.சிவக்குமார் 

காலச்சுவடு பதிப்பகம்


தமிழ் வாசகப் பரப்பில் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கிலாவது விற்று தீர்ந்திருக்க வேண்டிய நூல் இது. பதின்மவயது குழந்தைகளுக்கு தத்துவங்களை எளிய முறையில் புரியவைக்க இந்நூல் முயல்கிறது. சாக்ரடீசிலிருந்து துவங்கும் தத்துவமரபு குறித்து விளக்குகிறார் மர்மமாகவே நடமாடும் தத்துவவாதி. தாயறியாமல் தத்துவங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருக்கிறாள் சோபி.தாம் கதாபாத்திரங்களாக இடம்பெறும் நூலினை கண்டெடுக்கிறார்கள் சோபியும், அவளது தோழியும். யொஸ்டைன் கார்டரின் புனைவின் வெற்றி இங்குதான் துவங்குகிறது. மொழிபெயர்ப்பாளர் சிவக்குமார் தமிழுக்கு சிரத்தையுடன் அளித்திருக்கும் உயரிய படைப்பு இது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி நூலகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டிய இதுபோன்ற நூல்கள் சலுகை விலையில் விற்கப்படுவதை காணும்போது பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


திரௌபதியின் கதை

ஒரிய மூலம் பிரதீபா ராய் ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சாரியா

தமிழில் இரா.ரவிச்சந்திரன்


 மகாபாரதத்தை பின்னணியாகக் கொண்டு திரௌபதியின் கோணத்தில் புனையப்பட்ட நூல். பாண்டவரின் ஒற்றுமைக்குத் தான் பலியிடப்பட்டதாக உணரும் திரௌபதி, கிருஷ்ணன், கர்ணன் மீதான தனது காதலையும் எண்ணுகிறாள். பாண்டவர் ஆட்சியை முடித்துக் கொண்டு தமது வாரிசு பரீட் சித்திடம் நாட்டினை ஒப்படைத்துவிட்டு மனைவியுடன் சொர்க்கம் நோக்கிச் செல்கையில், தடுமாறி விழுந்துவிடும் அவளை திரும்பிக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. கடினமானதொரு வாழ்க்கையை கண்ணீருடன் விரும்பியேற்ற முதல் பெண் திரௌபதியாகத்தான் இருப்பாள் என்றென்றும்.


சின்ன விஷயங்களின் கடவுள்

அருந்ததி ராய்

தமிழில் ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


நேர்கோடல்லாத வடிவில் எழுதப்பட்டிருக்கும் நாவல். இருகரு இரட்டையர் எஸ்தா, ராஹேலிடம் இருந்து ஆரம்பிக்கிறது கதை. எஸ்தாவை பார்ப்பதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து தனது சொந்த கிராமம் அய்மனத்திற்கு வருகிறாள் ராஹேல்.அவளது நினைவுகளின் ஊடாக பயணிக்கிறது கதை.

கணவனைப் பிரிந்த  அம்மு தனது இரட்டைக் குழந்தைகளுடன் தாய் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். சகோதரன் சாக்கோவின் புறக்கணிப்பிற்கிடையே அங்கு வாழ்கிறாள். சாக்கோ தனது வெளிநாட்டு மனைவி மார்கரெட்டால் புறக்கணிக்கப்படுவதும், அவனது வியாபாரத் தோல்வி நடவடிக்கைகளும் நாவலில் விரிவாக வருகின்றன. தனது மகள் சோபியுடன் அய்மனத்திற்கு வரும் மார்கரெட் அவளை இழக்கும் துயருக்கு ஆளாகிறாள்.சாக்கோ நடத்திவரும் ஊறுகாய் கம்பெனியில் பணியாற்றும் வெளுத்தாவுடன் அம்முவுக்கு ஏற்படும் தொடர்பு அவனது உயிரைக் குடித்து விடுகின்றது.அபிலாஷ் டாக்கீஸில் ஆரஞ்சு drink lemon drink ஆசாமி எஸ்தாவை நடத்தும் விதம் குழந்தைகள் மறைமுகமாக நமது சமூகத்தால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு சான்று.தோழர் பிள்ளை, காவல் ஆய்வாளர் தோமஸ் மேத்யூ ஆகியோரின் இரட்டை குணங்கள் சாதியம் எந்த அளவுக்கு வேரூன்றி உள்ளது என்பதை அறிய வைப்பவை. "யாருக்கு வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் எப்போதும் நிகழலாம் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருப்பதே நல்லது", 'எக்ஸிட்டின் வழியாக எஸ்தா எக்ஸிட்டினான்' போன்ற வரிகள் புதுமையாக இருந்தன.

சாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் வலுவாக கட்டுடைக்கும் அருந்ததி ராயின் துணிச்சலான படைப்பு இது.


ஓநாய் குலச்சின்னம்

ஜியாங் ரோங்

சி.மோகன்


 மங்கோலியாவின் மேய்ச்சல் புல்வெளி என்னும் பேருயிர், மனிதர்கள், மான்கள், ஆடுகள், மர்மோட்டுகள் ஓநாய்கள் உள்ளிட்ட சிற்றுயிர்களை பல ஆயிரம் ஆண்டுகளாக காத்து வருகிறது. மங்கோலிய மக்கள் மேய்ப்பர்களாகவும், வேட்டைக்காரர்களாகவும் தன்னிறைவு பெற்ற வாழ்வினை 'டெஞ்ஞர்' என்ற தம் இறைநிலைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.எந்த உயிரினமும் அபாய எண்ணிக்கையில் உயரும்போது மட்டுமே தீவிரமாக அவர்களால் வேட்டையாடப்படுகின்றன.ஒவ்வொரு உயிரினமும் இயற்கை வட்டத்தில் தம்பங்கினை நியாயமான முறையில் ஆற்றி வருகின்றன.ஓநாய் மங்கோலிய மக்களின் குலச்சின்னமாக மான்களிடமிருந்து பேருயிர் மேய்ச்சல் புல்வெளியை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இனமாக கருதப்படுகிறது.

ஓநாய்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரிக்கும்போதோ,மற்ற உயிரினங்களுக்கு அவை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்போதோ மட்டுமே அவை சிறிய அளவில் வேட்டையாடப்படுகின்றன.ஓநாய்கள் இருளை, சுதந்திரத்தை விரும்புபவையாகவும் சமரசமற்ற நாயகர்களாகவும் மேய்ச்சல் பகுதிகளில் வலம் வருகின்றன.

பொறுமையான வேட்டைக்காரர்களாக மான்கள் கூட்டத்தை கொன்று குவிக்கின்றன. அழுகிய இறைச்சியை விரும்பி உண்கின்றன.

பனிச்சிகரங்களில் ஓநாய்கள் விட்டுச்சென்ற மான்களின் உடல்களை மேய்ப்பர்கள் கைப்பற்றி விடுகின்றனர்.

ஆத்திரமடைந்த ஓநாய் கூட்டம் மேய்ப்பர்களின் குதிரைகளை தாக்கி அழிக்கிறது.

 தொழிற்புரட்சி காரணமாக சீனாவில் இருந்து மங்கோலியாவுக்கு செல்லும் மாணவர்கள் மேய்ச்சல் நில வாழ்வினையே மாற்றி விடுகின்றனர்.

அவர்களில் ஒருவனான ஜென்சென் மேய்ச்சல் நில வாழ்வினை மதிக்கிறான். பெரியவர் பில்ஜியின் ஆலோசனைகளுக்கு செவி சாய்க்கிறான்.ஓநாய்க்குட்டி ஒன்றினை வளர்த்து அதன் இயல்பை அறிந்து கொள்ள விழையும் அவன், குகை ஒன்றிலிருந்து 7 குட்டிகளை தன் நண்பனின் துணையுடன் திருடிச் செல்கிறான்.

சிறிது நேரத்தில் அவற்றுள் 5 குட்டிகள் கண்கள் திறவாத நிலையிலேயே கொல்லப்பட்டு விடுகின்றன.

எஞ்சிய இரண்டு குட்டிகளில் ஒன்று வளர்ப்பவனை கடித்துவிட அதுவும் கொல்லப்பட்டு விடுகிறது.ஜென்சென் தன்னிடமுள்ள குட்டியினை பல்வேறு சிரமங்களுக்கிடையே வளர்க்க தொடர்ந்து முயற்சிக்கிறான்.தனது இயல்புகளை மாற்றிக் கொள்ள இயலாத ஓநாய்க்குட்டி சிறிது காலத்திற்குப் பின் அவனாலேயே கொல்லப்பட்டு விடுகிறது.அதிகாரி பாவோ ஓநாய்களை மிகத்தீவிரமாக வேட்டையாட உத்தரவிடுகிறான்.இயந்திரத்தனமாக அவை கொல்லப்பட்டு விடுகின்றன.பல ஆயிரம் ஆண்டுகளாக அப்பகுதிகளை காத்துநின்ற ஓநாய்கள் இவ்வாறாக சோகமுடிவினை எட்டுகின்றன.மேய்ச்சல்நில புல்வெளி அழிகிறது. பனிப்புயலும், புழுதிப்புயலும்  அப்பகுதியைத் தாக்குகின்றன.வெறும் முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வாழ்முறையைக் கொண்ட அம்மக்களின் வாழ்வு சிதைக்கப்படுகிறது.

மான்கள், ஓநாய்கள் மீதான நமது முன்முடிவுகளை, பார்வைகளை வெகுவாக மாற்றிவிடக் கூடிய பெரும் நாவல் இது.



விழுந்து கொண்டிருக்கும் பெண் 

மொழியாக்கச் சிறுகதைகள் 

தமிழில் எம்.எஸ்

காலச்சுவடு பதிப்பகம் 


'கோவிலில் ஒரு நீண்ட இரவு காவல்'

கோவிலின் பொறுப்பாளர், பூஜையில் ஈடுபட்டிருக்கும் பணியாளரை இரவு நேரம் ஒன்றில் கோயிலுக்கு அருகாமையில் இருந்து அதன் மூலஸ்தானத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சுரங்க பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

இருண்ட பாதையில் டார்ச் ஒளியுடன் செல்லும் அந்த இருவர் மனித எலும்புக்கூடுகள் கொண்ட பெட்டிகளை காண்கின்றனர். பூஜை செய்பவர் அவ்விடத்திலேயே இரவு முழுவதும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் பொருட்டு பொறுப்பாளரை திரும்பிச்செல்ல பணிக்கிறார்.

இரவு முழுவதும் எலும்புக்கூடுகளுடன் அவரது உரையாடல் நிகழ்கிறது. காலையில் பொறுப்பாளர் அவரை அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்கிறார்.


'விழுந்து கொண்டிருக்கும் பெண்'

பல மாடிக் கட்டிடத்தின் உயர்ந்த பகுதியிலிருந்து இளம்பெண் ஒருத்தி தரையை நோக்கி விழுகிறாள். தரையை நோக்கி அவளது குறும் பயணத்தை விளக்கும் கதை. ஒவ்வொரு தளங்களையும் அவள் கடந்து செல்லும்போது அங்கு இருப்பவர்களுடன் சிறுசிறு உரையாடல்களை அதிவேகமாக நிகழ்த்துகிறாள்.


'சாவி'

தனிமையில் வாழும் வயது முதிர்ந்த பெண் 'பெஸ்ஸி பாப்க்கின்' அருகில் வசிப்பவர்களுடன் நம்பிக்கையற்ற, தொடர்பற்றவளாக இருக்கிறாள்.அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே செல்லும் அவள், தனது பணியை முடித்துக் கொண்டு திரும்பி வீட்டிற்குள் நுழையும்போது சாவி அதன் துவாரத்தினுள் நுழைந்து ஒடிந்துவிடுகிறது.

அவளது அவநம்பிக்கைக்கு ஆளான குடியிருப்பின் மேலாளர், அதிசயமாக அவளுக்கு உதவுகிறார். மனிதர்களை பற்றிய தனது எண்ணங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாள் அவள்.

ப்ளேக் பரவிக் கொண்டிருக்கும் ஊரில் பசியால் அலைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை,  'ஆதியில் பெண் இருந்தாள்' போன்ற கதைகளும் இத்தொகுப்பில் குறிப்பிடப்பட வேண்டியவை.

17 சிறுகதைகளையும் சரளமாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் எம்.எஸ். 

வெவ்வேறு நிலப்பகுதிகள், கதைமாந்தர்கள் என தீவிரமான வாசிப்பைக் கோரும் நூல் இது.


கடல்

ஜான் பான்வில்

ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்


 கடலோர கிராமத்தில் நிகழும் கதை. வயது முதிர்ந்த நாயகன் அலைக்கழிக்கும் நினைவுகளுடன், மனைவியின் மறைவுக்குப் பிறகு பிள்ளைப் பிராயத்தில் கோடை விடுமுறையை மகிழ்வுடன் கழித்த கடலோர கிராமத்துக்கு வருகிறான். "வெடுக்கென்று ஒரு பதிலளிக்க யத்தனித்து அடக்கிக் கொண்டேன். அவள் சொல்வது உண்மைதானே. வாழ்க்கை, மெய்யான வாழ்க்கை என்பது போராட்டங்களும், சோர்வுறாத செயல்பாடுகளும், உடன்பாடுகளும், மழுங்கிய தலையை உலகத்தின் சுவரில் முட்டிக் கொள்வதும், இதைப்போல இன்னபிற வியர்த்தங்களும் என்பதாகத்தானே கருதப்பட்டு வருகிறது?" "இறந்த காலத்திலேயே வாழ்கிறீர்கள்?" என்ற கூற்றுக்காண நாயகனின் எதிர்வினை மேற்கண்ட வரிகள்.


அசடன் 

பியோதர் தஸ்தயேவ்ஸ்கி

 தமிழில் எம்.ஏ.சுசீலா

 நற்றிணைப் பதிப்பகம் 


பரந்துவிரிந்த கதைக்களம், எண்ணற்ற  மனிதர்கள், மிக நீண்ட உரையாடல்கள், ஆழ்ந்த வர்ணனைகள், பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ச்சூழலில் மிகப் புதிதாக இருப்பினும் வாசிக்கும்போதே நன்கு பரிச்சயம் ஆகிவிடுகிறது.

 நாம் ஒவ்வொருவரும் எப்போதும் மிகவும் தெளிவாகவும்,விவரமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் நாம் எதிர்ப்படும் மனிதர்கள் மிகவும் அப்பாவிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருக்கவே நமது மனம் எப்போதும் விழைகிறது.

இந்நாவலின் நாயகன் மிஷ்கின் அதுபோன்ற அப்பாவித்தனமானவன்தான் சமவயதினர் உடனான உரையாடல்களில் சிக்கித்தவிக்கும் மிஷ்கின் குழந்தைகளுடன் உரையாடும்போது மிகவும் சுவாரசியமாக ஆழ்ந்து விடுகிறான்.

 அசடன் என்றும் முட்டாள் என்றும் அனைவராலும் பரிகசிக்கப்படுகிறான். தூய்மையாக ஒரு பெண்ணை நேசிக்கும் அவன், தன்னை  வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டுகிறான். சிறு துணிமூட்டை ஒன்றுடன் ரயிலில் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வரும் அவன், பெரும் சொத்துக்கு அதிபதியாகி,நாவலின் இறுதியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுகிறான்.


 தாய் தந்தையரை, சகோதரனை ஏககாலத்தில்  இழந்துவிடும் நஸ்டாசியா, வயது முதிர்ந்த ஒருவனின் அரவணைப்பில் வளர்ந்து, அவனது காம வேட்கைக்கும் பலியாகி, வேறொரு இளைஞனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அது நடைபெறாமல் தொடர்ச்சியான அலைக்கழிப்புகளுக்கிடையே நாவலின் இறுதியில் கொல்லப்பட்டு இறப்பது பெரும் சோகம்.


 'தனிப்பட்ட குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கியும் விவரித்தும் காட்ட முடியாதபடி பல மனிதர்கள் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்கள் தான் பொதுவாக சராசரியானவர்கள் என்றும் பெரும்பான்மையானவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள்.

மனித இனத்தில் பெரும் பகுதியாக இருப்பவர்கள் அவர்கள்தான். கதைகளையும் நாவல்களையும் எழுதும் எழுத்தாளர்கள் நடப்பியல் வாழ்வில் அரிதாகக் காணக்கூடிய தனித்தன்மை பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை முழுமையாகவும் விளக்கமாகவும் கலை நயத்தோடும் தங்கள் படைப்புகளில் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனாலும்கூட நிஜவாழ்வில் காண்பதை விட உண்மையானவர்களாகவே அந்த பாத்திரங்கள் வெளிப்படுகிறார்கள்' என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.


கசாக்கின் இதிகாசம்

 ஓ.வி.விஜயன்

 தமிழில் யூமா வாசுகி


 கசாக் கிராமத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வருகை தருகிறார். கிராமத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பெரும் தடைகளை சந்திக்கிறார். பிற்போக்குத் தனமாக நடந்து கொள்ளும் மக்கள் ஆசிரியருக்கு தொல்லைகள் அளிக்கத் தவறுவதில்லை. சுய சிந்தனையற்ற, சித்தாந்தங்களால் ஆட்டுவிக்கப்படும் மக்கள் அளிக்கும் இன்னல்களை அப்பள்ளியின் ஆசிரியர் எதிர்கொள்கிறார். பிடிக்காதவர் வாசலில் மலம் கழிந்துவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் அம்மக்கள். யூமா வாசுகி பெரும் முனைப்புடன் தமிழுக்கு அளித்திருக்கும் படைப்பு இது.


இஸ்தான்புல்

 ஓரான் பாமுக்

 ஜி குப்புசாமி

 காலச்சுவடு பதிப்பகம்


'பாஸ்பரஸ்' என்றழைக்கப்படும் கடலோரம் இஸ்தான்புல் நகரில் துடிப்பான சிறுவனாக சுற்றித்திரிந்த ஓரானின் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடும்ப பின்னணி, தந்தையின் தொழில்வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், பால்யகால நினைவுகள் வெளிப்படையாக பகிரப்படுகின்றன. இஸ்தான்புல் நகரைப் பற்றிய தெளிவானதொரு புரிதலுக்கு இட்டுச் செல்பவை இக்கட்டுரைகளும், நூலில் வெளியாகியுள்ள புகைப்படங்களும். கல்வி கற்றுமுடித்தபின் எழுத்தாளராகத்தான் ஆக விரும்புகிறேன் என்று உறுதியாக முடிவெடுத்ததும், சாதிக்க முடிந்ததும் பாமுக்கிற்கு சாத்தியமாகியிருக்கிறது.


என் கதை

கமலா தாஸ்

தமிழில் நிர்மால்யா


உறுதியும் தைரியமும் நேர்மையும் கொண்ட தன் வரலாற்று நூல். இந்நூலிற்கு குறிப்புகளாக என்ன எழுதிவிட இயலும்? கமலா தாஸ் அவர்களின் வரிகளையே கீழே தருகிறேன்.


" சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒழுக்க விதிகளை நான் பொருட்படுத்தாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அழியக்கூடிய மனிதஉடலே இந்த ஒழுக்கத்தின்  அடிக்கல். அழிவற்ற  மனித ஆத்மாவில் அதைக் கண்டறியக்கூடிய திறன் இல்லை என்றால் மனித மனத்திலாவது உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும், வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்".


" ஒழுக்க நெறி என்ற பெயரில் நம்மிடையே விவாதிக்கப்படுவதை புறக்கணிக்கவும் ஏற்க மறுக்கவும் தீர்மானித்ததற்கு  காரணம் உண்டு. அழுகிப்போகும் உடலே அதனுடைய அடித்தளமாக இருந்தது. மனிதனின் மனமே உண்மையான ஒழுக்க நெறிக்கு ஆதாரமாக விளங்குகிறது. சமுதாயத்தையும் அதனுடைய ஒழுக்க நெறியையும் அகோரத் தோற்றமாகவே காண்கிறேன்".


" சமுதாயம் என்ற திருட்டு கிழவி உருவாக்கிய கசாப்புக் கூடமே ஒழுக்கநெறி".


இப்படியொரு தன்வரலாற்று நூல் தமிழில் வெளியாகியிருப்பது ஒரு அதிசயம்தான்.

பெரும்பாலும் நுகர்வுப் பொருளாக மட்டுமே பெண்மை ஒடுக்கப்பட்டிருக்கும் இச்சமுதாயத்தில் இது போன்ற ஒன்றிரண்டு எதிர்வினைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.


காட்டில் உரிமை 

மகாஸ்வேதா தேவி 

சு.கிருஷ்ணமூர்த்தி 

சாகித்திய அகாடமி


பீர்ஸா முண்டாவின் வாழ்வை நாவலாக வடித்துள்ளார் மகாஸ்வேதா தேவி. 25 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பீர்சாவின் தியாகவாழ்வு முண்டாஇன மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.

 சர்க்காரால்,ஜமீன்தார் களால், திக்குகள் எனப்படும் பிரிவினரால் சுரண்டப்படும் முண்டா இன மக்கள் பீர்சாவின் தலைமையில் ஒருங்கினைகிறார்கள்.


 ஆரம்பக்கல்வியைக் கற்று முடிக்கும் பீர்சாவுக்கு தனது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஆர்வம் ஊற்றெடுத்து அவனது மரணத்தில் அது முடிவடைகிறது.

உல்குலான் என்றழைக்கப்படும் போராட்டம் தொடங்குகிறது. பகவான் என்றும் தர்த்தி ஆபா என்றும் அழைக்கப்படுகிறான் பீர்சா.


 முண்டா இன மக்களின் அன்றாடத் துயரார்ந்த வாழ்வை விளக்கும் வரிகள் மனதை கனக்கச் செய்பவை 

"வாழ்வும் சாவும் பற்றிய விஷயங்களைக் கூட உணர்ச்சியின்றி விவாதிப்பது அவர்களுடைய வழக்கம். விதியால் அடிபட்டு அடிபட்டு ஒரு சோர்வு அவர்களிடையே பரவியிருந்தது". 

கல்வி கற்க பீர்சா வீட்டை விட்டு செல்லும் போது நாவலில் இடம் பெறும் வரி. 

"தொலைவு என்பது மனதைப் பொறுத்த விஷயம் சில சமயம் சிறு தொலைவு வெகுதொலைவாகத் தோன்றும். வேறு சமயம் மிகத் தொலைவு அண்மையாகத் தோன்றும்"


முண்டா இன மக்களை காட்டிலிருந்து விரட்டும் போது பீர்சா கோபத்தில் முழங்குகிறான்.

" காட்டில் உரிமை கருப்பு இந்தியாவின் முதல் உரிமை. வெள்ளைத்தோல் மனிதர்களின் நாடு கடலின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே கருப்பு இந்தியாவின் கருப்புத்தோல் மனிதர்கள் காட்டை தங்கள் தாயாகவே கருதி வந்திருக்கிறார்கள்".


 வெவ்வேறு பகுதிகளிலிருந்து உல்குலான் போராட்டத்திற்கு ஒருங்கிணையும் மக்கள் தரும் சமிக்ஞை ஆச்சரியமானது. 

"காட்டு வழியா வருவாங்க  இரண்டு பக்கத்திலும் மரக்கிளைகளை வெட்டி கிட்டே வராங்க பின்னாலே வரவங்க அந்த வழியை அடையாளம் கண்டு கொண்டு வந்து விடுவாங்க"


விசாரணைக்கு வரும் போலீஸ்காரர் பிள்ளைத் தாய்ச்சியாய் நடிக்கும் முண்டா பெண் சாலியைப் பார்த்து "முண்டா பொம்பளைங்க கருப்பு நெருப்புன்னு சும்மாவா சொல்றாங்க"என்று வியக்கிறார்.

" வயிற்றுக்கு சோறு, உடுக்க துணி, தலைக்கு எண்ணெய் இதெல்லாம் கிடைப்பது பெரியவிஷயம் தானே. ஆகையால் கிழட்டு கணவனால் ஏற்பட்ட துக்கத்தை மறந்து போய்விட்டாள் சாலி".

காவல் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள் முண்டா குழுவினர். டோன்கா, மாஜியா இருவருடைய கைகளும் உயர்ந்தன,தாழ்ந்தன,அதன்பின் பீர்சாயித்துக்கள் ரகுநிராமின் ரத்தத்தையும் தசை துண்டங்களையும் வழியில் இறைத்துவிட்டு குதித்தார்கள்".


முண்டாமக்கள் மனஉறுதியோடு அதிகாரவர்க்கத்தை  எதிர்த்துப் போராடுகின்றனர்.

" கருப்பு உடல்களில் இருந்து பீறிட்ட சிவப்பு ரத்தம் கருப்பு பாறைகளின் மேலே பரவுகிறது".


வில்லம்புகளோடு முண்டாக்களும், துப்பாக்கிகளோடு எதிர் தரப்பினரும் மோதும் தருணமிது.முதுகில் குழந்தைகளை சுமந்துவரும் முண்டா பெண்களும் சமரில் பலியாகின்றனர்.

"துப்பாக்கி சனியன் குழந்தையின் உடலை ஊடுருவிக் கொண்டு தன் முதுகில் நுழைவதை உணர்ந்தாள் கௌரி. அவளது நெஞ்சுக்குள் குண்டு பாய்ந்த பின் அவளுக்கு நிம்மதி கிடைத்தது".


உல்குலான் கசப்பான முடிவை நெருங்குகிறது.

 "அவன் காட்டின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.காடு இலைகளின் சலசலப்பில்,காற்றின் ஓலத்தில்,புலியின் துரிதமான நடமாட்டத்தில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தது.தனக்கு எல்லாம் தெரியும் என்று அது அவனிடம் சொல்லிற்று. எல்லா முண்டாக்களையும் காட்டின் அரவணைப்பில் மறுபடி கொண்டுவர அவன் விரும்பினான் என்று அதற்குத் தெரியும். இதை சாதிக்க அவனால் முடியவில்லை என்பதும் அதற்கு புரிந்தது".


நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜேக்கப் உணர்வுபூர்வமாக வாதிட்டும் அவர்களுக்கு பயனேதுமில்லை.

" உல்குலானுக்கு முடிவில்லை பகவானுக்கு சாவில்லை" என்ற பீர்சாவின் முழக்கம் முண்டாக்களை எழுச்சி அடைய வைக்கிறது.


பீர்சாவின்  சாவுடன் துவங்கும் இந்நாவல் பின்னோக்கி பயணித்து முண்டாக்களின் துயரார்ந்த நிலை, போராட்டங்களை விவரித்த பின் பீர்சாவின் நண்பனின் கடிதத்தோடு  நிறைவடைகிறது.


 பூனைகள் நகரம்

ஹாருகி முரகாமி

தமிழில் ஜி.குப்புசாமி

வம்சிபுக்ஸ் வெளியீடு


 ஹாருகி முரகாமியின் 8 கதைகள் கொண்ட தொகுப்பு. நம்பி வந்த காதலனை கைவிட்டுச் செல்லும் 'இசுமி' இடம்பெறும் 'ஆளுண்ணும் பூனைகள்' கதை, பால்யகால காதலை நினைவுபடுத்தும் 'என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்'கதை, மாய எதார்த்த வாதங்கள் நிறைந்த 'தேடுதல்'மற்றும் 'ஷினாகவா குரங்கு' கதைகள் அனைத்தும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தந்தவை.

' பூனைகள் நகரம்' மற்றும் 'வினோத நூலகம்' கதைகளிலும் மாயஎதார்த்த வாதம் நிறைந்திருக்கிறது. தந்தையைக் காணச்செல்லும் டோங்கோ ரயிலில் செல்லும்போது வாசித்துக் கொண்டிருக்கும் பூனைகள் நகரம் கதை இந்நூலின் சிறப்பு.


 வினோத நூலகம் கதையில் வரும் கிழவரும்,ஆட்டுமனிதனும், இளம்பெண்ணும், நூலகத்தில் மாட்டிக்கொள்ளும் சிறுவனும் முரகாமியால் அழகாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நூலகம் எங்காவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சாம்சாவின் காதல் கதையை இரண்டுமுறை வாசித்தேன். முதுகு வளைந்த பெண்ணுடன் சாம்சா நிகழ்த்தும் உரையாடல் மிகவும் நுட்பமாக இருந்தது.

 பூகம்பசெய்தியை தொடர்ந்து மனைவி தன்னை நீங்கிச் சென்றபின் கோமுரா அனுபவிக்கும் மன உளைச்சலும், அவன் செல்லும் பயணமும் அங்கு சந்திக்கும் இரண்டு இளம்பெண்களும் அவர்களுடனான அவனது உரையாடல்களும் கதையின் அழகியல் காட்சிகள்.


இரட்டையர்

தஸ்தயேவ்ஸ்கி 

எம்.ஏ.சுசீலா

நற்றிணைப் பதிப்பகம்


 தன்னைப் போன்ற ஒருவன் இருக்க சாத்தியம் உண்டா?, குறைகள் என்று அறியப்படும் கூறுகள் நிரம்பப்பட்ட, ஒத்திசைவற்ற நபரைக் காண இயலுமா? தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல் கையாளும் கதைக்களம் இதுதான். 'அவனை' மிகவும் அலைக்கழிக்கிறான் ஒத்த தோற்றமுள்ள அந்த நபர். எங்கு சென்றாலும் அவனிடமிருந்து தப்பிக்க இயலுவதில்லை. அந்த நபரின் இருப்பும் நாவலில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆழ்மன சிக்கல்கள் நிறைந்த ஆய்வில் நாவல் பேராசான் தஸ்தயேவ்ஸ்கி சுழன்று அடிக்கிறார். எம்.ஏ. சுசீலா மொழிபெயர்த்து அளித்திருக்கும்  மற்றுமொரு உளப்பகுப்பாய்வு ஆவணம் இது.



முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் 

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

தமிழில் அருமைசெல்வம் அசதா

காலச்சுவடு பதிப்பகம் 


 சந்தியாகோ நாஸார் கொல்லப்படுகிறான். இரட்டையர்கள் பெத்ரோ விகாரியோ பாப்லோ விகாரியோ அவனை பன்றியைக் கொல்லும் கத்திகளால் சரமாரியாக குத்திக் கொன்று விடுகிறார்கள். தமது சகோதரி கற்பை இழக்க காரணமானவன் என்ற சந்தேகத்தினடிப்படையில் அவர்கள் இவ்வாறு செய்து விடுகிறார்கள்.

 நாவலின் எந்த இடத்திலும்  சந்தியாகோ அந்த குற்றத்தை செய்தவன் என்பதற்கான தகவல்கள் ஏதுமில்லை.நாவலின் துவக்கத்திலேயே அவன் கொல்லப்பட்டு விடுவான் என்ற செய்தி உறுதியாகிவிடுகிறது. ஆங்கெலா விகாரியோ என்ற அந்தப் பெண் சந்தியாகோ மீது குற்றம் சாட்டியதுதான் பெரும் புதிராக நாவலில் உள்ளது.


 பெரும் வசீகரம் உடைய சந்தியாகோ பெண்களைக் கவரும் இயல்பினனாக உள்ளான்.இந்த அம்சம் அவன் மீதான குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. ஆங்கெலாவின் திருமணம் முடிந்த சிறிதுநாட்களில் அவளது கணவன்  அவளை பிறந்த வீட்டிற்கு விரட்டிவிடுகிறான்.

கோபமடைந்த விகாரியோ சகோதரர்கள் சகோதரியிடம் விசாரணை நடத்த, சந்தியாகோவின் பெயரை அவள் கூறிவிடுகிறாள்.'ஒரு பட்டாம்பூச்சியை அறைவது போலத் துல்லியமாகக் குறி பார்க்கப்பட்ட அம்பைக் கொண்டு அந்தப் பெயரை அவள் சுவரோடு அறைந்தாள்' என்கிறார் மார்க்கேஸ்.

தனது மகன் கொல்லப்பட இருக்கிறான் என்ற தகவலை அறிந்தும் உறுதியாகவே இருக்கிறார் சந்தியாகோவின் தாய். வீட்டு வாசலில் விகாரியோ சகோதரர்கள் சந்தியாகோவை மடக்கிப்பிடிக்க அவனது தாய் தற்செயலாக வீட்டின் வெளிவாசல் கதவை பூட்டி விடுகிறாள்.


 சகோதரர்கள் இருவரும் குரோதத்துடன் சந்தியாகோவை வெட்டிச் சாய்க்கின்றனர். தேவாலயத்தில் அதுகுறித்து பாவ மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிடுகின்றனர்.

மிகவும் சிறிய இந்நாவலின் வேகம் அசாத்தியமானது. மார்க்கேஸின் மாய யதார்த்தவாதம்  வசீகரம் நிறைந்தது.


அயல்மகரந்தச் சேர்க்கை

ஜி.குப்புசாமி

வம்சி பதிப்பகம்


 அயல் இலக்கியங்களை வாசிக்க விரும்புபவர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய நூல் இது. ஹாருகி முரகாமியில் இருந்து எடுவார்டோ காலியானோவரை  10 எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள், நேர்காணல்கள், படைப்புகள் என முச்சுவை நிரம்பிய நூல் இது.  ஆளுண்ணும் பூனைகள் பிரமிப்பை ஏற்படுத்திய கதை. உலகத்தின் புகலிடம் என்ற சல்மான் ருஷ்டியின் கதையில் வரும் வரிகளை சாருவின் நூல் ஒன்றில் வாசித்திருக்கிறேன். "பேரரசர் அபுல் ஃபாத்   ஜலாலுதீன் முகமது என்ற மன்னருக்கெல்லாம் மன்னரும், சிறுவயதிலிருந்தே மகத்தான என்ற பொருளுடைய அக்பர் என்றும், பின்னர் அது சொல்லடுக்காக இருந்தாலும் மகத்தானவற்றிலும் மகத்தான தன் மகத்துவத்தில் மகத்தான பன்மடங்கு மகத்தான மாமன்னர் அக்பர் என்றும், அவரது பட்டத்தின் அடுக்குமொழியில் மகத்துவத்தில் அவரது வீறார்ந்த வெற்றிகளை வெளிப்படுத்துவது பொருத்தமானது மட்டுமல்ல அவசியமானது".


 டோபியாஸ் உல்ஃப் அவர்களின் பிரமாணம் கதையும் வாசிப்பதற்கு இலகுவாக இருந்தது. நைஜீரிய எழுத்தாளர்கள் சினுவா ஆச்சிபி, சீமமாண்டா என்கோஸி அடீச்சி ஆகியோரது கதைகளும் அருமை. ரேமண்ட் கார்வரின் 'ஒரு சின்ன நல்ல விஷயம்' கதையை மூன்றுமுறை வாசித்தேன். மனதை கனக்க வைத்த கதையது. உலகம் முழுவதும் மனிதரின் உணர்வுகள் ஒன்று போலவே தான் இருக்கின்றன என்பதை உணரவைத்த படைப்பு அது.  லெ கிளேசியோவின்  'கடலையே பார்த்திராத சிறுவன்'கதை மிகவும் பிடித்திருந்தது. ஓரான் பாமுக் பற்றிய குறிப்புகளும் அவரது நேர்காணலும் 'பனி' நாவலிலிருந்து இடம்பெற்ற அத்தியாயமும் இந்த நூலின் மற்றுமொரு சிறப்பு. குந்தர் கிராஸின் வரிகள் மனதைத் தொட்டன.எடுவார்டோ காலியானோவின் எழுத்தாளர்நேர்மை போற்றுதலுக்குரியது.



பட்டு 

அலெக்ஸாண்ட்ரோ

பாரிக்கோ 

தமிழில் சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகம்


பரிச்சயமான தொழில் தரும் பாதுகாப்பையும், மகிழ்வையும் புறக்கணித்து புதிய தொழிலின்  சாகசத்தையும், அதனூடான அபாயத்தையும் தேர்வு செய்கிறான் ஹெர்வே ஜான்கர்.

பிரான்சில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடல்வழி, சாலை வழியில் பயணித்து உலகின் மறுகரையான ஜப்பானையடைகிறான் பட்டுப்புழு வாணிபத்தின் பொருட்டு.

மனைவி ஹெலன் பெருந்துயருடன் அவனைப் பிரிகிறாள். ஜப்பானிய பெண்ணின் காதலுக்காக ஒவ்வொருமுறையும் பயணிக்கிறான்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழும் கதை. பட்டு விற்பனை மேற்கொள்ளும் ஜப்பானியர்கள் பட்டுப்புழு முட்டைகளின் விற்பனைக்கு தடை விதிக்கின்றனர்.ஜப்பானில் பட்டுப்புழு முட்டை வாங்கும் ஆபத்தான பணியில் ஈடுபடுகிறான் ஜான்கர்.அவனது நான்கு பயணங்களிலும் இடையே அவன் சந்திக்கும் 'பைகல்' ஏரி நான்கு வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.


போர்ச்சூழலில் நான்காம் முறையாக ஜப்பான் செல்லும் ஹெர்வே, ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறான். 'திரும்பி வா இல்லையென்றால் இறந்து விடுவேன்' என்ற வார்த்தைகள் அவனை அலைக்கழிக்கின்றன.

சிறுசிறு அத்தியாயங்களில், எளிய மொழியில் இந்நாவல் வாசிப்பை எளிமையாக்குகிறது.


சூறாவளி 

லெ கிளெஸியோ

சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

காலச்சுவடு பதிப்பகம் 


இரு குறுநாவல்கள் - இரு பெண்கள்- இரு துயரங்கள்

'சூறாவளி'

 தந்தையால் கைவிடப்பட்டு தாயுடன் வாழும் பெண் ஜூன், வயது முதிர்ந்த நபருடன் தோழமையுடன் இருக்கிறாள். அவரது அருகாமையில் தந்தையின் இருப்பினை உணர்கிறாள். அதேவேளையில் அவரிடம் ஒரு ஈர்ப்பும் அவளுக்கு உண்டு.

ஃபார்மசி பெண்ணுடன் கியோவுக்கு உள்ள தொடர்பை அறியும் ஜுன், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறாள்.

அலைக்கழிக்கப்படும் ஜுனின் மனம் சூறாவளியில் அழகாக பதிவாகிறது.


'அடையாளத்தை தேடி அலையும் பெண்'

தாயால் கைவிடப்பட்டு தந்தையுடனும் அவரது மனைவி, மகளுடனும் வாழ நேரிடும், புறக்கணிப்புக்கு ஆளாகவும் நேரிடும் பெண் ரஷேல்.

தனது தாயை சந்திக்க நேரிடும் ரஷேல், அவரிடம் பெரிதாக ஈடுபாடு கொள்ளவில்லை. தங்கையிடம் (தந்தையின் மற்றொரு மனைவியின் மகள்) அன்புகாட்டுகிறார்.

ஜூனின் துயரைவிட, ரஷேலின் துயரங்கள் துல்லியமாக பதிவாகியுள்ளது.

தஞ்சைபிரகாஷ் போன்று பெண்ணின் மனதை அருகாமையில் சென்று உணர முயல்கிறார் லெ கிளெஸியோ.


தென் அமெரிக்க பயணக் குறிப்புகள்

அல்பெர்த்தோ கிரனாடோ ஜி.குப்புசாமி

வஉசி நூலகம்


 நாட்குறிப்புகளின் தொகுப்பு எளிய ஆவணமாகவும்,நல்இலக்கியமாகவும் ஆகி விடுவதற்கு மேலும் ஒரு சான்று இந்நூல்.

இருபதாம் நூற்றாண்டின் பெரும் புரட்சிக்காரன் எர்னஸ்டோ சேகுவேரா தனது நண்பர் அல்பெர்த்தோ கிரனாடோவுடன் தென்னமெரிக்க நாடுகளில் 1952 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மேற்கொண்ட சவால் மிகுந்த பயணங்களைப்பற்றிய கிரனாடோவின் நாட்குறிப்புகளின் தொகுப்பு இது.


 மோட்டார் சைக்கிளில், லாரிகளில், கப்பலில், விமானத்தில் பயணம் செய்கிறார்கள் இருவரும்.

அபாயங்களுக்கும், சாகசங்களுக்கும் குறைவில்லாத நாட்களாக அவை அமைகின்றன.

ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டாலும் சிறிதும் தன்னிரக்கமற்ற துணிச்சல்காரன் 'சே'வுக்கு நல்துணையாக வாய்க்கிறார் கிரனாடோ.

அட்ரினலின் ஊசியை தேவையின்போதெல்லாம் செலுத்தி நண்பனை காக்கிறார் அவர்.


 தங்குமிடம், உணவு, வழிச் செலவுக்குப் பணம், சிபாரிசு கடிதம் அளித்த போதும் தனது புரவலரின் இலக்கிய பாசாங்கினை ஏற்க மறுக்கிறார் சே.

தனது நண்பனால் 'பெலாவ்' (வழுக்கைத் தலையன்) என்றும், ஃபியூசர் (முரட்டுத்தனமாக ரக்பி விளையாடுபவர்) என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார் சே.

சரக்கு விமானத்தில் அவர்கள் பயணிக்கும் குறிப்புகளும், கத்தியை பறித்துக் கொண்டபின் உறுதியை வெளிப்படுத்தி வாதிடுவதும் வியப்பை அளிப்பவை.


மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் முன்னுரையிலிருந்து.

//நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேறிய புத்தனின் பயணம்தான் அவனுக்கு ஞானத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது. புத்தனைப் போல் சேவும் ஒரு வனவாசி.//


"ஒரு புரட்சிக்காரனின் தேவைகள் என்ன?

வலிய கால்கள்

எளிய சுமை பிச்சைக்காரனின் வயிறு"

இது சே அவன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் உள்ள சில வரிகள்.


நிலவறைக் குறிப்புகள்- தஸ்தயேவ்ஸ்கி

எம் ஏ சுசீலா

நற்றிணைப் பதிப்பகம்.


 இரண்டு பகுதிகளாக அமைந்துள்ள நாவல்.

'எலிவளை' என்ற முதல் பகுதியில் நுண்ணுணர்வு மிகுந்த அந்த மனிதன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.

" பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்முடைய விருப்பங்கள் நமக்கு நன்மை செய்யக் கூடியவையாக இருக்கும் என்று நாம் தவறாக முடிவு செய்து கொள்கிறோம். சிலசமயம் எதற்குமே உதவாத ஒன்றைக் கூட நாம் விரும்புகிறோம். காரணம் நம்முடைய முட்டாள்த்தனம். உருப்படியில்லாத அந்த விருப்பம் நாமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு பயனை அளித்துவிடும் என்று நாம் கற்பனை செய்து கொண்டுவிடுவதுதான் அதற்கு காரணம்" எலி வளையிலிருந்து கேட்கும் குரல் இது.


' ஈரப் பனிப்பொழிவின் பொருட்டு' என்ற இரண்டாவது பகுதியில் அந்த மனிதன் தனது நண்பர்களால் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறார். அவனது மூன்று நண்பர்களும் பதவிஉயர்வு பெற்றுச் செல்லும் மற்றொரு நண்பனுக்கு பிரிவு உபச்சார விழா எடுக்க தீர்மானிக்கின்றனர். அது பற்றிய விவாதத்தில் இவனது குரல் புறக்கணிக்கப்படுகிறது. வலுக்கட்டாயமாக தானும் விருந்தில் பஙகெடு்ப்பதாக கூறும் இவன், விருந்து நடைபெறும்நாளில் சரியான நேரத்தி்ல்அந்த இடத்திற்கு சென்று விடுகிறான்.

ஒரு மணி நேரம் கழித்துத்தான் விருந்து நடைபெற இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறான். நண்பர்களுடன் ஏற்படும் காரசார விவாதத்திற்கு பிறகு  வேசியர் விடுதியை நோக்கிச் செல்கிறான். அங்கு சந்திக்கநேரிடும் இளம்பெண்ணுடன் அவளது நிலைகுறித்து அக்கறையுடன் புத்திமதி சொல்கிறான்.

அதே பெண் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்ததும் தனது ஏழ்மை நிலையை அறிந்து கொள்வாளோ என்று உணர்ந்து அவளிடம் எரிந்து விழுகிறான் முடிவில் அவள் அவ்விடத்தை நீங்கி செல்கிறாள்.

கோபிகிருஷ்ணன் இந்த நாவலினை மனித இயல்புகளை பற்றிய ஓர் அரிதான ஆவனம் என்று கூறுகிறார்.


என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி

சீனத்துச் சிறுகதைகள் 

ஜெயந்தி சங்கர் 

காலச்சுவடு பதிப்பகம்


 13 சிறுகதைகள் வெவ்வேறு சீன எழுத்தாளர்கள் எழுதியவை.வெவ்வேறு களங்கள்  வெவ்வேறு வாசிப்பு அனுபவங்கள்.சிறு வயதில் தனது தாத்தாவின் தூண்டில் கழியை உடைக்க நேர்ந்தவன் பிறிதொரு தருணத்தில் கால்பந்தாட்ட பந்தயத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே தனது தாத்தாவை  சந்திப்பது போலவும் புதிய தூண்டில் கழியை அவரிடம் தருவது போலவும் செல்லும் கதை.

ஒரு பூனையை பரிதாபப்பட்டு வீட்டிற்குள் அனுமதித்து விட்டு அது செய்யும் அட்டகாசங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல்  விரட்டி விட்ட நிலையிலும் அது மீண்டும் அதே வீட்டிற்கே வந்துவிடுகிறது 'என் இருத்தலின் நஞ்சு' கதையில்.


 இத்தொகுப்பில் மிகவும் அதிரவைத்த கதை 'சிறு வியாபாரி கூட்டத்திலிருந்து ஒருவன்' கதைதான். வீதியில் கொழுக்கட்டை விற்கும் ஒருவனை சட்டத்தை மீறியவன் என்று முத்திரை குத்தி அவனது வீட்டில் சோதனையிட்டு அவனது வாழ்வாதாரத்தைப் பறித்து ஊரைவிட்டு விரட்டி விடுகிறார்கள்.சீனர்களின் ஒழுக்கத்தைப்பற்றி பேசி அவர்களை கொண்டாடுகிறோம். ஆனால் ஜனநாயகமற்ற சூழலில் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் சமூகமாகத்தான் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.


 'எலியைப் போன்ற பயங்கொள்ளி' என்று ஒரு கதை. நேர்வழியில் நியாயமாக உழைப்பவன் புறக்கணிக்கப்படும், வஞ்சிக்கப்படும் சூழலை விவரிக்கிறது. அவமதிக்கப்படும் அவனது தந்தையான லாரி ஓட்டுனர் மரணிப்பதும் துயரமான நிலை.அகமுகன் ஒருவன் சந்திக்கும் பிரச்சனை பற்றி பேசுகிறது 'கருஞ்சுவர்' சிறுகதை.மூடநம்பிக்கைகளும் போலியாக கட்டமைக்கப்படும் ஆன்மீக பிம்பங்களும் உலகம் முழுமைக்கும் உரியன போல் இருக்கிறது.


'பால்ய நினைவுகள்' சிறுகதை நமது கல்வி சூழலுக்கும் பொருந்துவது போலவே உள்ளது.சற்றேறக்குறைய உலகம் முழுவதிலும் மனித சமூகம் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் சிறுகதைத்தொகுப்பு.



100 சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது 

ஹாருகி முரகாமி

தொகுப்பு ஜி.குப்புசாமி 

வம்சி புக்ஸ்


ஹாருகி முரகாமியின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

100 சதவீதம் பொருத்தமான யுவதி 

நாம் ஒவ்வொருவரும் பெரும்பாலும் எதிர்வரும் நபர் நமக்கு 100% பொருத்தமாக இருப்பாரா என்று தான் எண்ணுகிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் நூறு சதவீதம் பொருத்தமான நபராக இருக்கிறோமா என்று எப்போதும் சிந்திப்பதே இல்லை.

அப்படியொரு புதுசிந்தனையை ஏற்படுத்திய கதை இது.


'குடும்ப விவகாரம்'

சகோதரனுடன் அடுக்ககத்தில் குடியிருக்கும் பெண் அவனை கடுமையாக விமர்சிக்கிறாள். தான் மணந்து கொள்ளவிருக்கும் நபரை அழைத்து வந்து அறிமுகம் செய்கிறாள்.

நமது பண்பாட்டுச் சூழலில் அவர்களின் நெருக்கமும், வெளிப்படையான பேச்சும் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

முதல் காதல் எல்லோர் மனதிலும் பசுமையாக நீடித்திருக்கும் நினைவு. பிற்கால  சந்திப்புகளின் போது நிச்சயம் உண்மையாக காதலித்த அவர்களால் உடல் ரீதியாக அணுகமுடியாது என்பது தெளிவு. இத்தொகுப்பின் மூன்றாம் கதை அந்நிலையை உறுதி செய்கிறது.


'தேடுதல்'

24ஆம் தளத்திற்கும் 26ஆம் தளத்திற்கும் இடையில் 

காணாமல் போய்விட்ட தனது கணவரை தேடுகிறாள் ஒரு பெண்.

அடுக்ககத்திலிருந்து தொலைவில் வேறு ஒரு இடத்தில் இருந்து கண்டறியப்படுகிறார் அந்த நபர்.


'ஷினாகவா குரங்கு'

பெயர் அட்டைகளை  திருடிச் செல்கிறது ஒரு குரங்கு. அட்டையை தவறவிட்ட ஒரு பெண் தனது பெயரை மறந்துவிட்டு மனப்பிறழ்வு அடைகிறார்.

பலகட்ட ஆற்றுப்படுத்துதல் நிகழ்வுகளுக்குப் பிறகு குரங்கு கண்டறியப்படுகிறது.

குரங்கைக் கொல்லாமல் மன்னிக்கிறாள் அவள்.


பருவம்

எஸ்.எல்.பைரப்பா

பாவண்ணன்


பாரதப்போர் உறுதியாகிவிட்டத் தருணத்தில் முதன்மைப் பாத்திரங்கள் தமது நினைவுகளுடன் பின் நோக்கிச் செல்வதும் போர்ச்சூழலுக்கு திரும்புவதுமாக புனையப்பட்ட பெரும் நாவல். அவ்வகையில் 'பருவம்' என்ற பெயர் நாவலுக்கு மிகவும் பொருத்தம்.


#சல்லியன் 

பாண்டவருடன் இணைய விரும்புபவன் துரியோதனனின் சாதுரியமான பேச்சில் மயங்கி எதிர்தரப்புக்கு ஆதரவளித்து படைகளையும் மகன்களையும் போரில் இழந்தபின் யுதிஷ்டிரனால் கொல்லப்படுகிறான்.

 போரில் வெல்லும்பட்சத்தில் தனது தங்கையின் மகன்களை (நகுலன் சகாதேவன்) அரியாசனத்தில் அமர்த்துவதாக அளிக்கப்படும் வாக்கினை நம்புகிறான் அவன்.


 #குந்தி

நியோக முறையில் மூன்று புதல்வர்களை பெறும் குந்தி, கணவனுடன் ஒருவித அதிருப்தியிலேயே வாழ்ந்திருக்கிறாள்.

இவ்வகையில் பிறந்த பாண்டவர்கள் ஆட்சிபீடமேற தகுதியற்றவர்கள் என்று துரியோதனன் கூறுவதை அறிந்து வருந்துகிறாள்.

திருதராஷ்டிரனும் பாண்டுவும்கூட இவ்வகையில் பிறந்தவர்கள்தானே என்பதை எண்ணுகிறாள்.

தனது புதல்வர்களின் ஒற்றுமைக்காக ஒரு பெண்ணின் வாழ்வை அவலமாக்கியது குறித்த எந்த வருத்தமும் அவளுக்கு இல்லை.


#பீமன் 

பாண்டவர்களின் வெற்றிகளில் பெரும் பங்காற்றும் பீமன் (எம்.டி வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம் நாவலில் விரிவாக காண இயலும்) பல தருணங்களில் யுதிஷ்டிரணை கண்டிக்கிறான்.

திரௌபதியுடன் உணர்வுபூர்வமான நெருக்கம் கொண்டு இருக்கிறான். அவளுக்கு இழைக்கப்படும் அநீதியின்போது சகோதரர்களைக் காட்டிலும் அவனே பொங்கி எழுகிறான்.

எங்கிருந்தோ அம்புகள் எய்து கொல்வதைவிட நேருக்குநேர் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டு வெல்வதே வீரம் என்று கருதுகிறான்.


 #அர்ஜுனன் 

வில்லாற்றலால் சுயம்வரத்தில் வென்ற திரௌபதியை சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான்.

மூத்தவன் என்ற முறையில் தானே மணந்து கொள்வேன் என்ற யுதிஷ்டிரனின் கூற்றையும் சுயம்வர மண்டபத்தில் ஏற்பட்ட தாக்குதலில் தானே அனைவரையும் மீட்டேன் என்ற பீமனின் வாதத்தையும், திரௌபதியின் அழகில் மயங்கும் நகுலன் சகாதேவனையும் எதிர்க்கிறான். குந்தியின் நிலைப்பாடு  ஏற்கப்படுகிறது.அழகிய உடல் அமைப்பும், பேச்சாற்றலும் பிற மனைவியரை பெற்றுத் தருகிறது அவனுக்கு.தனது புதல்வர்களைக்காட்டிலும் அபிமன்யுவுக்கு அவன் முக்கியத்துவம் தருவதாக வருந்துகிறாள் திரௌபதி.


 #திரௌபதி 

போரின் இறுதியில் தனது புதல்வர்களும், தமையனும் மரணிக்க உயிரற்ற உடல்களை கையில் ஏந்தி நிற்கிறாள் திரௌபதி.கடோத்கஜன் இறந்தபோது பீமனும், அபிமன்யுவின் மரணத்தின்போது அர்ஜுனனும் பெருந்துயருடன் புலம்பியது தற்போது ஏன் நிகழவில்லை என்று வியக்கிறாள். (பிரதீபா ராயின் 'திரௌபதியின் கதை' அவளது நிலைப்பாட்டை விரிவாகப் பேசுகிறது) ஓடோடிச் சென்று அவளது துயரில் பங்கேற்கிறான் பீமன்.


#காந்தாரி 

போரின் முடிவில் சந்திக்கும் கிருஷ்ணன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். தனது புதல்வர்களின் உயிரற்ற உடல்களை பார்த்து விடுவோம் என்று கிளம்புகிறாள்.எதிர்ப்பினைத் தெரிவிக்க கண்களை மறைத்துக் கொள்ள எடுத்த முடிவு தியாகப்பட்டம் அளித்தமையை நினைவு கூர்கிறாள்.


 #பீஷ்மர் 

60 வயதிற்கு மேற்பட்ட தந்தையின் சுகத்திற்காக தனது ஸ்தானத்தை விட்டுக் கொடுத்தது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவாக ஆகிவிடுகிறது.

விசித்திரவீரியன் மறைவுக்குப்பிறகு அவன் மனைவியருடன் நியோக முறையில் இணையவேண்டும் என்ற சத்யவதியின் முடிவினை மறுக்கிறார்.போரின்போது நியோகமுறையில் பிறந்த பாண்டவர் உரிமை குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வியாசரை சந்திக்கிறார்.


 பெருங்காவியம் மகாபாரதத்தை எஸ்.எல் பைரப்பா தனது பார்வையில் விரிவான புனைவாக படைத்திருக்கிறார்.


மண்ட்டோ படைப்புகள்

சாதத் ஹசன் மண்ட்டோ

சீனிவாச ராமானுஜம்

பாரதி புத்தகாலயம்


தேசப் பிரிவினையின் போது நடைபெற்ற வன்முறைகளை, பாலியல் அத்து மீறல்களை பேசுகிறது கதைகள். கும்பல் மனப்பான்மையில் சாதுவான நபர்களுக்கும் வன்முறை உணர்வு தொற்றிக்கொள்ளும் போலும்.

சொற்சித்திரங்கள் பகுதியை மண்ட்டோ பின்வருமாறு சமர்ப்பணம் செய்கிறார்.

'அவன் செய்த தீய செயல்கள் பற்றி என்னிடம் விவரித்துக் கொண்டிருக்கும் போது "நான் அந்த வயதான பெண்மணியை கொன்றபோது ஏதோ கொலையே செய்துவிட்டது போல உணர்ந்தேன்" என்றான் - அவனுக்கு.


 ஓடும் ரயில் நிறுத்தப்பட்டு கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து தேடி வந்த நபரைக்கண்டு வந்த வேலையை முடிக்க நினைக்க தரை அசுத்தமாகி விடும் வெளியே கொண்டுசென்று நடத்துங்கள் என்று மற்றவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 43 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த மண்ட்டோ, 250 கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்று படைத்தவை அளப்பரியவை.ஹிந்தி திரையுலகின் அன்றைய நாயகன் அசோக்குமாருடன் அவர் காரில் செல்கையில் கும்பலொன்று காரை மறிக்கிறது. அசோக் அமைதியாக இருக்கிறார். அருகாமையில் வந்த நபர்கள் இருவரையும் தாக்காமல் அமைதியாக செல்கின்றனர்."நீ தேவையில்லாமல் பயந்துவிட்டாய். மக்கள் ஒருபோதும் கலைஞனுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை". சிரித்தபடி கூறுகிறார் அசோக்குமார்.

ஆபாச எழுத்தாளனாகவும், தேசவிரோதியாகவும் இப்படைப்பாளி அறியப்பட்டதும், தனது படைப்புகள் சார்ந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் அலைய நேரிட்டதும் பெரும்துயரம்.


'அங்கிள் சாம் கடிதங்கள்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள 9 கடிதங்களும் அன்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்த பகடிகள் நிறைந்தவை.


உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் மண்ட்டோ குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

"அவர் உண்மையில் விலைமாதர்களிடம் போயிருந்தாலும், சகதியில் புழுவைப் போல் மிதக்கும் அந்தப் பெண்களின் இதயத்தையும் அது வாழ்க்கையின் நல்லதை எல்லாம் நேசிப்பதையும் பார்த்திருப்பார். நல்லது, கெட்டது என்று அளந்து பார்க்கும் அளவுகோல்களை உருவாக்கிய மண்ட்டோ தன்னுடைய சொந்த அளவுகோலை உருவாக்கியிருந்தார்.


"எனக்கு ரொம்பக் குளிராக இருக்கிறது. என் சவக்குழியில் இருப்பதைவிட அதிகமான குளிரை உணர்கிறேன். நிறைய போர்வையை எடுத்துப் போர்த்துங்கள்"

இறக்கும் தருவாயில் மண்ட்டோவின் கடைசி வார்த்தைகள் இவை.

நமக்கு இவை 

ஜி. நாகராஜனை நினைவுபடுத்தும் வரிகளும் கூட.


கனவுகளுடன் பகடையாடுபவர்

ஜி.குப்புசாமி

நற்றினை பதிப்பகம்


 4 உலகச் சிறுகதைகள், கட்டுரைகள், நோபெல் உரைகளின் தொகுப்பு நூல். முன்னுரையில் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிடும் மொழிபெயர்ப்புப் பணியின் முக்கியத்துவம் மொழிபெயர்ப்பாளர்களின் பெரும் உழைப்பு கவனத்தில் கொள்ளத்தக்கது. 'இலக்கிய சமூகத்தில் நன்றிக்கு உரியவர் அல்லர் என்று ஒதுக்கப்பட்ட பிரிவினராக இந்தியாவில் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்களும் தங்கள் படைப்பை இன்னொரு மொழிக்குக் கொண்டு சென்ற மொழிபெயர்ப்பாளருக்கு எந்த அளவுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. பொதுவாக நன்றிக்குரியவர்கள் பட்டியலில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை.' முன்னுரையில் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிடும் வரிகள் இவை. எனக்கு ஏனோ 'கடல்' நாவலின் ஆசிரியர் ஜான் பாண்வில் நினைவுக்கு வந்தார்.


லடாக்கிலிருந்து கவிழும் நிழல்

பபானி பட்டாச்சாரியா

சா.தேவதாஸ்

சாகித்ய அகாடமி 


சீன எல்லைப்புற மாகாணம் சிங்கியாங்கிலிருந்து  திபெத்தை இணைக்கும் சாலை லடாக்கின் இந்தியப்பகுதிகளை கருணையின்றி விழுங்குகிறது.

தலாய்லாமாவிற்கு புகலிடம் அளித்தமைக்கான எதிர்வினையாக மட்டுமே இச்செயலை கருத முடியவில்லை.


 ஆளரவமற்ற மலைப்பகுதிகளை கவர்ந்து வன்மத்துடன் செயல்படும் சீனா, இவை அனைத்தும் உங்கள் நன்மைக்கே! பத்தாயிரம் ஆண்டுகள் நம்உறவு நீடிக்கும் என்று இந்தியாவிடம் நகைக்கிறது.

எல்லையை பாதுகாக்கும் நெருக்கடியில் இந்திய ராணுவத்துக்கு ஆயுத தளவாடங்கள் அவசியமாகிறது.


 சாந்திநிகேதனில் பணியாற்றும் சத்யஜித்-சுருச்சி தம்பதியர் எளிய வாழ்வுடன் காந்திகிராமைக் கட்டமைக்கின்றனர்.

ஆயுதத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும் எஃகுநகரின் விரிவாக்கம் காந்திகிராமை ஆக்கிரமிக்க நினைக்கிறது.தலைமை பொறியாளர் பாஸ்கர் எஃகு நகரின் தேவை மற்றும் பங்களிப்பில் உறுதியாக இருக்கிறார்.


 காந்தியவாதி சத்யஜித்தும், யதார்த்தவாதி பாஸ்கரும் தேசநலன் சார்ந்து தம்முள் முரண்படுகின்றனர்.

கிராமத்துடன் சுமுக உறவு வேண்டி கட்டப்படும் புல்வெளி இல்லம் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை.


 காலணி அணியாத, வெள்ளை உடைதரித்த சத்யஜித்தின் மகள் தந்தையின் லட்சிய வார்ப்பாக நீடிக்கிறாள். பாஸ்கர் உடனான அவளது காதல் சுருச்சியால் ஆதரிக்கப்படுகிறது.காந்திகிராமை மீட்கப்போராடும் சத்தியஜித் உண்ணாநோன்பு நிலைக்குச் செல்ல, அச்சூழலில் சீனா எல்லையில் இருந்து பின்வாங்குகிறது.


 கிராமத்தினர் மற்றும் எஃகு நகரின் தொழிலாளர் அனைவரின் எதிர்ப்பினால் காந்திகிராமை கைப்பற்றும் திட்டம் கைவிடப்படுகிறது.உளவாளியென சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படும் சீனரின் ஐந்து பெண் குழந்தைகளை நேசத்துடன் அரவணைக்கிறார் பாஸ்கர்.தந்தையின் மீள் வருகையால் மகிழும் அச்சிறுமியர் பாஸ்கரின் பிரிவினால் வாடுகின்றனர்.


காந்திகிராமில் எல்லை மீறும் ஜானக், சத்யஜித்தை வீழ்த்த முயற்சிக்கும் ரூபா, சுருச்சியை நேசித்த சத்யஜித்தின் நண்பர் பிரேஸ், மிக இளம் வயதில் துணிவுடன் போருக்கு சென்று காயமுறும் அசோக் அனைவரும் புனைவின் அழகிய பகுதிகள்.


பாலசரஸ்வதி

அவர் கலையும் வாழ்வும்

டக்லஸ் எம்.நைட்

டி.ஐ.அரவிந்தன்

க்ரியா பதிப்பகம்


கலையின் மீதான பேரார்வம், அர்ப்பணிப்பு, உடலின்  நலிவையும் பொருட்படுத்தாமல் கச்சேரிகளில் பங்கேற்று பார்வையாளர்களை வியக்க வைத்தல் - 'பாலா' கலையின் பெருவடிவம், பரதத்தின் அடையாளம்.

மிகுந்த யோசனைக்குப் பிறகு பாட்டி 'வீணை' தனம்மாளிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள அனுமதி பெறுகிறார்.குரு கந்தப்ப பிள்ளையின் கடினமான அணுகுமுறைகள், கொடும் தண்டனைகள் பாலாவுக்கு உரமேற்றுகின்றன.வீணை தனம்மாளின் பேத்தி பாலா என்ற நிலைமாறி, பாலாவின் பாட்டி தனம்மாள் என்ற நிலைக்கு காலம் இட்டுச் செல்கிறது.


 தாய் ஜெயம்மாளின் புறக்கணிப்புகளையும் இன்முகத்துடன் கடந்து செல்கிறார்.மேற்கத்திய நாடுகளில் தாய்நாட்டின் மேன்மையை கொண்டு சேர்க்கிறார்.அவரது கலை மகள் லட்சுமியை அடைந்து, பேரன் அநிருத்தன்வரை தொய்வின்றி செல்கிறது.கணவர் ஆர்.கே சண்முகம் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக, இராஜதந்திரியாக, தொழில் முனைவோராக இருப்பினும் அவரால் எவ்வகையிலும் பயன் அடையாதவராக வாழ்ந்திருக்கிறார்.தனது குருவால் கற்றலின் போது அடைந்த இன்னல்களை தனது மாணவர்களிடம் கொண்டு செல்லவில்லை அவர்.'நல்லது', 'கெட்டது' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் 'இப்படிச் செய்யுங்கள்' என்ற வார்த்தைகளில் வழிநடத்துகிறார்.வெளிநாட்டுக் கச்சேரி ஒன்றில் தனது மறுப்பை கண்டுகொள்ளாமல் வசூல் செய்யப்பட்டு திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான தொகையை உறுதியாக மறுக்க முடிகிறது அவரால்.


பாலா குறித்த ஆவணப்படத்தை இயக்க வந்த சத்யஜித்ராய், பாலா பூஜைசெய்வது போன்ற காட்சியை படமாக்க விரும்புகிறார். 'பூஜை செய்தல் படம் பிடிப்பதற்காக அல்ல' என்று அமைதியுடன் அம்மேதையிடம் கூறமுடிகிறது பாலாவால்.

சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடராஜரைக்காண நடன ராணி வந்திருப்பதாக ஆர்வலர் ஒருவர் கூற, கடுமையாக மறுக்கிறார்.

இசைக்கு எம்.எஸ்  போன்று பரதத்தின் பெரும் அடையாளம் பாலசரஸ்வதி.

உலகறிந்த பெரும் கலைஞர் எனினும் கீழ்ப்பாக்கத்தில் தனது இல்லத்தில் எளிய வாழ்வு வாழ்ந்து இருக்கிறார்.

பாலசரஸ்வதியை பெயரளவில் மட்டும் அறிந்துள்ள வாசகருக்கு இந்நூல் அளிக்கும் தரிசனம் அபரிமிதமானது.

பாலாவின் சமகாலத்து நிகழ்வுகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புகள்  என்று இந்நூல் பெரும் தொகை நூலாக பரிணமித்து நிற்கிறது.


மூன்று காதல் கதைகள் 

இவான் துர்கனேவ்

 பூ.சோமசுந்தரம் 

புலம் வெளியீடு


இவான் துர்கனேவின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.


'ஆஸ்யா'

பெரும் சிந்தனைகளுடன் ஆஸ்யாவின் விருப்பினை பரிசீலிக்கிறான்  அவன். உறுதியான முடிவுக்கு அவனால் வர இயலவில்லை. நீங்கா துயருடன், சகோதரனுடன் நகரை விட்டு நீங்குகிறாள் ஆஸ்யா.


'முதல் காதல்'

16 வயது நிரம்பிய  வலோத்யா 21 வயதான ஜினயீதாவின் மீது காதல் கொள்கிறான். பெருந்திணையாக இவர்கள் உறவு நீடித்து, எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிவுறுகிறது.


 'வசந்த கால வெள்ளம்'

வேறு ஒருவருடன் நிச்சயமான பெண் ஜெம்மாவிடம் காதல் கொள்கிறான் ஸானின்.

மயங்கிக் கிடக்கும் அவளது தம்பி எமீலியோவின் உயிரைக் காப்பாற்றுகிறான்.

இச்செயலால் ஜெம்மா, அவளது தாய்,பணியாள் ஆகியோருடன் நெருக்கமாகி விடுகிறான்.

ஜெம்மாவிற்கு நிச்சயமாகியுள்ள நபர், மற்றும் எமீலியோவுடன் சுற்றுலாசெல்லும் அவன் அங்கு ஜெம்மாவிற்கு ஏற்படும் அவமானத்திற்கு பழிதீர்க்க துணிந்து செயலாற்றுகிறான்.

சமாதானத்தைப் புறக்கணிக்கும் ஸானின், எதிரியுடன் 20 அடி தொலைவில் கைத்துப்பாக்கியால் இருமுறை சுட்டுக்கொள்ளும் போட்டிக்கு தயார் என்று அறிவிக்கிறான்.

சண்டையின் முடிவில் எதிரி மன்னிப்பு கேட்கிறான்.

தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு உயிரையே பணயம் வைத்த ஸானினின் செயலால் கவரப்பட்ட ஜெம்மா, நிச்சயிக்கப்பட்டவனை மறுத்து அவனையே மணந்துகொள்ள விரும்புகிறாள்.


இம்மூன்று குறுநாவல்களையும் வாசிக்கும்போது துர்கனேவ் ஏன் தீராக்காதலனாக கொண்டாடப்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.


லயோலா என்ற பெரும் பாம்பின் கதை

அயல்மொழி சிறுகதைகள்

சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகம் 


எளியமனிதன் அவன். அருகாமை வீடுகளுக்கு தண்ணீர் சுமந்து தருவதன் மூலம் சிறுகூலி பெற்று குடும்பம் நடத்துகிறான்.

அவன் மனைவி வீட்டு வேலைகளுக்கு செல்பவள். இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.

ஒருநாள் தண்ணீர் குடம் சுமந்துவருகையில் தவறி விழுந்து இறந்து விடுகிறான்.

அருகாமையில் உள்ள வீடுகளிலிருந்து அவர்களின் வழக்கப்படி ஓரிரண்டு நாட்களுக்கு அவர்களுக்கு உணவு கிடைக்கிறது.

வீட்டு வேலைகளுக்கு அப்பெண்ணை யாரும் அதன்பிறகு அழைக்காததால் அம்மூவருக்கும் உணவு கிடைக்காமல் போய்விடுகிறது.

கடும் பசியில் மூத்தவன் கடையொன்றுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கியபின் பணத்தை வீட்டிலேயே மறந்து விட்டதாகவும் பிறகு தருவதாகவும் கூற, கடைக்காரன் பிள்ளையை விரட்டிவிட்டு குடும்பத்தின் வறுமை குறித்து (வருத்தத்துடன்!) மனைவியிடம் பேசுகிறான்.

வெறுங்கையுடன் திரும்பியவனை ஏமாற்றத்துடன் காண்கின்றனர் தாயும் தம்பியும். காய்ச்சலில் விழுகிறான் அப்பிள்ளை.

மறுநாள் சிறியவன் தாயிடம் தயக்கத்துடன் சென்று காய்ச்சலில் இருக்கும் தன்அண்ணன் இறந்து விடுவானா என்று கேட்கிறான்.

ஒருவேளை அப்பிள்ளை இறந்துவிட்டால் அடுத்த ஓரிரு நாட்களுக்கு அவர்கள் வழக்கப்படி அருகாமை வீடுகளில் இருந்து உணவு கிடைக்குமே!

துருக்கி  எழுத்தாளர் 'செவெத் குத்ரத்' எழுதிய இக்கதையின் பெயர் 'விருந்து'.


கடந்த 20 ஆண்டுகளில் வெளிவந்த, வாசிக்க நேர்ந்த 38 நூல்களைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு தந்துள்ளேன். ஆவலுடன் வாங்கிவந்து வாசிக்கப் படாமல் 20க்கும் மேற்பட்ட நூல்கள் புத்தக அலமாரியில் காத்துக்கொண்டிருக்கின்றன. வாசிப்பில் ஆர்வம் கொண்ட பாமர வாசகனின் எளிய கருத்துக்களாகவே மேற்கண்ட பக்கங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எத்தனையோ காத்திரமான மொழிபெயர்ப்புப் படைப்புகள் இப்பதிவில் விடுபட்டிருக்கிறது.


 மொழிபெயர்ப்பு இலக்கியத்தை வாசிக்க இயலும் என்ற பெரும் நம்பிக்கையை தனது படைப்புகளின் மூலம் என்னுள் விதைத்தவர் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்கள். அவரது படைப்புகளை தேடித்தேடி வாசித்து வருகிறேன். மேற்கண்ட பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு அவரது படைப்புகளாகவே இருப்பதற்கு இதுவே காரணம்.


 இலக்கியத்திற்கான கலாச்சார தூதுவர்களான மொழிபெயர்ப்பாளர்களை பணிவுடன் வணங்கி விடை பெறுகிறேன்.




Comments

  1. பிரமிக்க வைக்கிறது உங்கள் வாசிப்பின் விஸ்தரிப்பு. வாழ்த்துகள்🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்