கதைகள்

வெல்கம் டு மில்லெனியம் அரவிந்தன்

146 பக்கங்கள்


காலச்சுவடு பதிப்பகம் புத்தாயிரத்து காலகட்டத்து கதைகளின் தொகுப்பான இந்நூலில் 10 கதைகள் இடம்பெறுகின்றன.


கோபத்தையும், ஏமாற்றங்களையும் தன்னுள்ளேயே அடக்கி சீரிய பிம்பத்தை கட்டமைக்கும் நபர் ரயில் பயணம் ஒன்றில் தூக்கத்தில் உளறி நகைப்புக்கு ஆளாகி விடுகிறார்.


 உண்மையில் நற்பெயரும், நாயக பிம்பமும் பிறரது பார்வையிலிருந்து இயல்பாக அமைந்து விடுதல் நன்று. நமக்கான மதிப்பீடுகளை நாமே வலிய முயன்று உருவாக்குதல் விபரீதங்களுக்கு இட்டுச் செல்கின்றது.


 பத்மநாபன் போன்ற நபர்கள் பால்கால நண்பர்களின் சந்திப்பு போன்ற பிரத்தியேக தருணங்களில் கொச்சை மொழிகளில் பேசி சமகால அடையாளங்களை மறந்து மகிழ்ந்திருத்தலே பெரும் ஆசுவாசமாக அமைய வாய்ப்பிருக்கிறது.


 கதையின் கடைசி வரியில் இருமுறை இடம்பெறும் அந்த ஒற்றைச் சொல் கதை மாந்தர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துவதோடு கதையின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கச்சிதமான நிறைவுக்கு இட்டுச் சென்று விடுகிறது. 


தொகுப்பின் இரண்டாவது கதை 'விருது'. புத்தாயிர காலகட்டங்களில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும், எல்லா நிறுவனங்களிலும் இதுவே நிதர்சனமான உண்மை. 


எந்த ஒரு அமைப்பிலும் நம்ப முடியாத நேர்மையும், அர்ப்பணிப்பும், உழைப்பும் போற்றப்படுவதே இல்லை என்பதோடு நகைப்பிற்கும் ஏளனத்திற்குமே இக்குணங்கள் ஒருவரை கொண்டு செல்கின்றன என்பதே உண்மை.


 பணிகளை யார் செய்கிறார் என்பதல்ல, பெயர் யாருக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இங்கு முதன்மையாகி விடுகிறது.


 தமது செல்வாக்கினால், புத்திசாலித்தனத்தால் நினைப்பதை சாதித்து விடும் திறன் பெற்றவர்கள், இயல்பாக உழைத்தவனுக்கு கிடைக்க வேண்டிய பெயரை தட்டிப் பறிப்பது ஆகப்பெரிய சோகம்.


 சமீப நாட்களில் அரவிந்தனின் எழுத்துகள் மீது வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. காலச்சுவடு இதழில் அவரது இருகதைகளை முன்பே வாசித்திருந்தாலும், முழுமையான நூலாக வாசிப்பது இதுவே முதல்முறை.


 இரு கதைகளைப் பற்றிய கருத்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். சிறப்பான வாசிப்பு அனுபவம் அளித்த மற்றுமொரு நூல் இது.



Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்