இதய ஒலி

 இதய ஒலி 

ரசிகமணி டிகேசி கட்டுரைகள் 

மின்நூல் 

179 பக்கங்கள் 



'பிறமொழிகளின் வாயிலாக கவியின் உயர்நிலையை அடைய எண்ணுவது காதலியின் புன்னகையைக் காண வக்கீலுக்கு வக்காலத்து அளிப்பது போன்றது' என்ற டி கே சி யின் கூற்று தமிழுக்கு மிகவும் பொருத்தமானதுதான்.


 ஜப்பான் கொரியாவை கைப்பற்றிய போது கொரிய மொழியை அழிக்க ஜப்பானியர்கள் முயன்றது பெரிதும் அதிர்ச்சி அளிப்பதுடன், தாய்மொழியின் மேன்மையையும் உணர்த்துகிறது.


 முன்னுரையில் இந்நூலினை பெரும் ஆர்வமுடன் களவாடி வந்தமை குறித்து சின்ன அண்ணாமலை சுவைபட எழுதியுள்ளார்.


 காலச்சுவடு இதழில் தீப.நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையை வாசித்தபோது டி கே சியின் இதய ஒலி நூல் குறித்த தகவல் அறிந்தேன்.


 எப்போதோ கிண்டிலில் விலையின்றி தரவிறக்கம் செய்து வைத்த இந்நூலின் நினைவுவந்து வாசிக்கத் துவங்கினேன்.


 போதுமான அளவு குறிப்புகளையும் எடுத்துவிட்டு, வாசிப்பை நிறைவு செய்ததும் கைதவறி நூல் டெலிட் ஆகிவிட்டது.


 ஏற்பட்ட கவலைக்கு அளவே இல்லை. நம்பிக்கையின்றி செயலியை அணுகிக் கொண்டிருந்தபோது உதவி வாய்ப்பின் மூலம் சில நிமிடங்களில் நூல் திரும்ப கைக்கு கிடைத்தது.


 சின்ன அண்ணாமலை அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், இதுபோன்ற அறிவியல் வளர்ச்சியின் இடர்களையும் ஒருங்கே உணர்ந்தறியும் வாய்ப்பு கிட்டியது.


 'தமிழுக்கு தமிழர்தான் கதி, தமிழருக்கும் தமிழே கதி' என்ற வரிகள் எல்லா காலத்துக்குமானது.


 'தலைக்கு சூளாமணி, மார்புக்கு சிந்தாமணி, காதுக்கு குண்டலகேசி, கைக்கு வளையாபதி, இடைக்கு மணிமேகலை, கடைசியாக காலுக்கு சிலப்பதிகாரம்' என்ற வரிகளில் தான் மயங்கி விட்டதாக கூறுகிறார் டிகேசி.


 'மாணவருக்கு கற்பிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் அவர்கள் பருவத்துக்கு ஒத்ததா, அவர்கள் அனுபவத்தோடு ஒன்றக்கூடியதா, மனம் ஈடுபடக்கூடியதா என்று ஆசிரியர் கருதி கற்பிக்கவேண்டும்' கற்பித்தல் குறித்து டிகேசியின் மேற்கண்ட  வரி மிகவும் பயனுள்ள அறிவுரையாகும்.


 குற்றாலக் குறவஞ்சியின் அழகியலை பெரிதும் வியக்கும் டிகேசி, தமிழர் அனைவரும் அவ்விலக்கியத்தை வாசிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.


 செவ்வியல் தன்மை கொண்ட 'இதய ஒலி' அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய நூலாகும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்