வீடில்லாப் புத்தகங்கள்
வீடில்லாப் புத்தகங்கள்
எஸ் ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
232 பக்கங்கள்
எஸ்ராவை வாசித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற குற்ற உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது.
ஆகையால் இந்நூல் கைக்கு கிடைத்த இரண்டே நாட்களில் வாசித்தாகிவிட்டது. எஸ்ராவின் எந்த ஒரு நூலுக்கும் இதுவரை வாசிப்பு பதிவு நான் எழுதியதில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018 சென்னை புத்தகத் திருவிழாவில், தேசாந்திரி பதிப்பகம் துவங்கிய புதிதில், 2 சுற்றுகளாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவந்து வாசித்திருந்தேன். அதற்கு முன்னர் உயிர்மை பதிப்பகம், உள்ளூர் நூலகத்தில் இருந்து வாசித்த நூல்கள் 30க்கும் மேல் இருக்கும்.
ஆரம்பநிலை வாசகனுக்கு அடுத்தடுத்து வாசிக்கவேண்டிய படைப்புகளையும், படைப்பாளிகளையும் எஸ்ராவைவிட எந்த தமிழ் எழுத்தாளர் அறிமுகப்படுத்திவிட முடியும்?
'வாசகபர்வம்' நூலினை வாசித்ததால்தான் ப.சிங்காரம், வண்ணநிலவன், கோபிகிருஷ்ணன் போன்றவர்களை அறிந்து கொள்ள முடிந்தது.
'நம் காலத்து நாவல்கள்' உலக இலக்கியத்தையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்தது.
ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் எஸ்ராவின் பரிந்துரைகள் வாசகர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்குகின்றன.
தன் படைப்புகளை மட்டுமே முன்னிறுத்தாமல் வாசிக்கவேண்டிய இலக்கியங்களை நேர்மையாக முன்வைக்க அவரால் மட்டுமே இயலும்.
சாலையோர புத்தகக் கடைகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம் வாசித்த நூல்களையும் ,வாங்கி வைத்து வாசிக்காமல் இருக்கும் நூல்களையும், அடுத்தடுத்த கட்டங்களில் வாங்க வேண்டிய நூல்கள் குறித்தும், தெளிவாகக் கூறிவிட்டது.
புத்தகங்கள் மட்டுமல்ல, வாசகர்களும் அழிவற்றவர்கள் என்ற வரி பெரிதும் ஆறுதலாக இருந்தது.
புத்தகங்களை பரிசாக தந்துவிட்டால் மட்டும் போதாது. யாருக்கு எவ்வகையான புத்தகங்கள் தரவேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும் என்று எஸ்ரா கூறுவது மிகவும் பொருத்தமானது.
தொடர்ச்சியான வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வாங்கிக் குவிக்கும் நூல்கள் அவர்தம் கடைசி தருணங்களில் பெரும் மலைப்பையும், வாசிக்கப்படாத நூல்கள் பெரும் ஆற்றாமையையும் ஏற்படுத்திவிடுவதை உணர முடிகிறது.
அவ்வகையில் வீட்டின் பெரும்பகுதி அல்லது முக்கியப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நூல்கள் வாசகனின் மறைவுக்குப்பின் வீடில்லா புத்தகங்களாக மாறி விடுவது பெரும்சோகம்.
இந்நூலை வாசித்து நிறைவு செய்கையில் பத்துக்கும் மேற்பட்ட வாங்க வேண்டிய நூல்கள் குறித்து அறிந்துகொண்டேன்.
நம் காலத்து நாயகன் எஸ்ராவிற்கு மிக்க நன்றியும்! அன்பும்!!
எஸ் ராவின் வாசக பர்வம் மிகச்சிறந்த புத்தகம்.
ReplyDeleteஇந்த கட்டுரை மிக சிறந்த சுருக்கமான அறிமுகம்.
நன்றி சரவணன்.
மிக்க நன்றி தோழர்
Delete