கருப்புப் புத்தகம்

 கருப்புப் புத்தகம் 

ஓரான் பாமுக் 

தமிழில் எத்திராஜ் அகிலன் 

காலச்சுவடு பதிப்பகம் 

623 பக்கங்கள் 



இயல்பான நடத்தைகளையும், உணர்வுகளையும் புறந்தள்ளி யாரோ ஒருவரை போலிசெய்து வாழ்வதே நாகரீகம் என்றும், புத்திசாலித்தனம் என்றும் கற்பிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்ட காலத்தில், 'கருப்புப் புத்தகம்' போன்ற நூல்கள் தனிமனித குணாதிசயங்களை ஆய்வு செய்வதில் அளித்திடும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.


பாமுக்கின் முந்தைய நான்கு நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து 'தமிழ் பாமுக்'காகவே நிலைத்துவிட்ட ஜி.குப்புசாமி அவர்கள், செய்திருக்க வேண்டிய இந்நூலின் மொழிபெயர்ப்புப் பணியை தயக்கத்துடன் ஒப்புக் கொண்டதாக பின்னுரையில் குறிப்பிடும் எத்திராஜ் அகிலன் அவர்கள், பெரும் உழைப்பை சிரமம் பாராமல் அளித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.


 பௌதிக இருப்பாகவன்றி, நினைவு கூர்தல்களிலும், சிறுசிறு உரையாடல்களிலும் மட்டுமே அறியப்படும் பத்தி எழுத்தாளன் ஜெலால், நாவலின் 90% நிறைவிற்குப்பின்  பிரேதமாகவே அறிமுகமாகிறான்.


'நினைவெனும் தோட்டம் வறண்டு போகும் போது, அந்தத் தோட்டத்தில் இருக்கும் கடைசி மரங்களையும் வாடத் தயங்கிநிற்கும் ரோஜா மொக்குகளையும் வெறிகொண்டு நேசிக்காமல் யாராலும் இருக்க முடியாது'.


 சமகாலத்தில் புதுமையற்ற தருணங்களாக உணரப்படும் காலம், சில காலத்திற்குப்பின் ஏக்கங்களில் ஆழ்த்தி மனித மனங்களுக்கு ஆசுவாசத்தையும், தேறுதலையும் அளிக்கவல்லவை.


ஜெலாலின் கட்டுரைகள், ரூயாவின் நினைவுகள், காலிப்பை அலைக்கழித்து நகர் முழுவதும் இலக்கின்றி அலையச் செய்கின்றன. அல்லாதீன் கடைநிகழ்வுகள் குறித்த விவரணைகள் மிகவும் சிறப்பானவை.


 மார்சல் ப்ரூஸ்ட்டின் கீழ்க்கண்ட வரிகள் செவ்வியல் தன்மை கொண்டவை.


 'ஏதோ ஒரு காரணத்திற்காக பிறர் நம்மிடம் இருந்து பிரிகிறார்கள். அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தையும் நம்மிடம் சொல்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல அவர்கள் நமக்கு வாய்ப்பு தருகிறார்கள். அப்படி ஒன்றும் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விடுவதில்லை. இல்லை. அப்படிச் செய்தால் அது மிகவும் சிறுபிள்ளைத்தனமான செயல்'.


 சுயத்தை அழித்தொழிப்பதில் நகலெடுத்தல் முக்கிய பங்காற்றுகிறது. அதுகுறித்த பிரக்ஞை ஏதும் அத்தகையோருக்கு ஏற்படுவதும் இல்லை.


 வழக்கறிஞர் பணி செய்யும் காலிப், தனது ஆறுநாட்கள் தேடுதலில் உண்மையற்ற தகவல்களை விரிவாக அளிப்பவனாக, தனது கட்டுரைகளை, ஜலாலின் பெயரில் துணிச்சலுடன் அனுப்புபவனாக பயணிக்கிறான். ஜெலாலின் தீவிர வாசகனுடன் அவன் நடத்தும் மிகநீண்ட உரையாடல் அல்லாதீன் கடைவாசல் துயர நிகழ்வுக்கு ஏதுவாகி விடுகிறது.


 பகிர் மகிழுந்து, மின் வெந்நீர்ப் பொறி போன்ற பெயர்கள் நாவலில் இடம் பெறுகையில் தோன்றும் சிலிர்ப்பு, கேசக் கவ்வி, உலோக கீழிழு கதவு போன்ற சொற்களை வாசிக்கையில், ஹேர் கிளிப், ஷட்டர் என்றவாறு டிரான்ஸ்லிட்டரேட் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் எண்ண வைக்கிறது.


 தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் ஆங்கில பேராசிரியர்கள் உணரும் திண்டாட்டங்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. முழுமையாக ஆங்கிலத்தில் கற்பிக்கையில் மாணவரிடம் சென்று சேராத நிலையும், தமிழ்- ஆங்கிலம் இணைந்த கற்பித்தலில் கற்றல் விளைவுகள் நேர்மறை விளைவுகளின் சாத்தியங்களையும் உணரலாம்.


 அவ்வகையில் மொழிபெயர்ப்பாளர் நாவலினை எளிமையாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் தனது பணியினை அமைத்துக் கொண்டிருக்கிறார்.


 காலிப், சயீமிடம் சமயோசிதமாக மாற்று காரணங்களைக் கூறி ரூயா, ஜெலால் இருப்பிடத்தை தேட யத்தனிக்கிறான். சயீமின் அதீத உற்சாகம், தேடலை நள்ளிரவைத் தாண்டியும் நீளச் செய்கிறது.


 பத்தி எழுத்தாளர்களுக்கான அறிவுரைகளாக மூன்று பக்கங்களுக்கு மேல் நீளும் குறிப்புகள், மூத்த பத்திரிகையாளரின் ஜெலால் மீதான வன்மம் இவற்றையெல்லாம் கடந்து காலிப்பின் தேடல் தொடர்கிறது.


'ஒரு மனிதன் உறக்கமின்றி தவிக்கும் நேரத்தில்தான் அவனுடைய கொடும் கனவுகள் மிகவும் அசலானவையாக இருக்கின்றன'. மொழிபெயர்ப்பாளர் மெச்சப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.


 மனதறிந்த அனைத்தையும் புறவுலகில் பகிர்ந்துகொள்ளும் சாத்தியங்கள் இங்கு இல்லை. நாவல் குறிப்பிடும் சுய இரட்டை மனிதனின் தேவைக்கான ஆரம்பப்புள்ளி இதுவெனவே எண்ணிக் கொள்ளலாம்.


 நகரவே மறுக்கும் வரிகள், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் புயலென சீறும் வேகம், சுழற்றியடிக்கும் எண்ணங்கள், பொங்கிப் பிரவகிக்கும் சொற்கள் சிந்தனைகளின் ஊடாக நூலினை கையில் ஏந்தி இருக்கும் வாசகனை புரட்டி வீசுகிறது.


 முத்தமிடுவதற்கான பெண்ணைத் தேடி அலையும் பத்திரிகையாளன், துணிச்சலான அல்லது செய்யத்தகாத செயல்களை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியான தருணங்களின்போது கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நம்மை அச்சுறுத்துவதாகவோ, வேறெவரையோ எடுத்துக்காட்டும் வாய்ப்பும் உள்ளதை, காலிப் பரத்தையர் விடுதி பெண்ணுடன் உறவாடுகையிலும், அவளது காரை மீட்டெடுத்தல் குறித்த பேச்சுக்களின் போதும் வாசகன் உணரமுடியும்.


 இரட்டை வாசிப்பு கோரும் அத்தியாயங்கள் நாவலில் நிறைந்திருக்கின்றன. கதைசொல்லல் தொடர்கள், கவனக் குவிப்பிற்கு சவால் அளிக்கும் சொற்களின் அருவியாகவே அறியப்படக்கூடும்.


 இயல்பான குணங்களுடன் செயல்படுதலை சூழலே சாத்தியமற்றதாக ஆக்கிவிடுகிறது. பிறர்தான் நாம் எவ்வாறெல்லாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். பொய் முகங்கள் நிறைந்ததாகவே சமூகம் மாறிவிடும் அபாயமும் நிலவுகிறது.


 பிரபஞ்சன் தனது நேர்காணல் ஒன்றில் குடிப்பழக்கம் தனக்கு இருப்பதாகவும், அதனை மறைத்து ஒரு போலியான பிம்பத்தை கட்டமைக்க விரும்பவில்லை என்றும் கூறியது நினைவுக்கு வந்தது.


 'தன்னுடைய கடந்த காலத்தை, தன்னுடைய நினைவுகளை, தன்னுடைய கனவுகளை தொலைத்துவிட்ட ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் வேறு ஒருவரின் நகலாக இருப்பது மேல் அல்லவா?'


 நகல் மனிதர்களின் தோற்றுவாயை மேற்கண்ட வரி எடுத்துக்காட்டுகிறது.


 ஆரம்ப தடைகளை முயன்று கடந்துவிட்டால் புனைவின் பெருஞ்சுவையை உணரலாம்.


 'ரூமி - தப்ரீஸ், ஜெலால்-காலிப் ஒப்புநோக்கப்படும் இரட்டையர்களாக அமைந்து விடுகிறார்கள்.


 கவனக் குவிப்பில் மிகக் குறுகிய அளவு பிசகு ஏற்படும் நிலையில், மனக்குதிரை எங்கெங்கோ தாவிச் செல்கையில், புரிதல் வேண்டி பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியதாகிறது.


 30 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 80 பக்கங்கள் என ஜலால் எழுதிக் குவித்திருப்பதை வியந்து பேசும் வாசகன், காலிப்பிடம் (ஜலாலாக எண்ணிக்கொண்டு) 7 தொலைபேசி எண்களைத் தருகிறான்.


ஜெலாலைக் கண்டடைவதற்கான தனது தேடலில் அவ்வெண்களுக்கு தொடர்பு கொள்ளும் காலிப் ஏமாற்றமடைய நேரிடுகிறது.


 கொல்லமாட்டேன் என்று அளித்த வாக்குறுதியையும் மீறி அவ்வாசகனே, ஜெலாலுடன் சேர்த்து ரூயாவையும் கொன்று விட்டானா? எனத் தெளிவு கிடைக்கவில்லை.


பட்டத்து இளவரசன் கதை புதியதொரு வாசிப்பனுபவத்தை அளித்துவிடுகிறது. அவ்வாறே தூக்கிலிடுபவன் தொடர்பான குறிப்புகளும் அமைகிறது.


 'தான் தானாக இருப்பதற்கு ஆசைப்படும் எந்த ஒரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஆகப் பெரும் தடைகள் அவனைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களே என்று இளவரசர் உஸ்மான் ஜலாலுதீன் எஃபெண்டி கருதினார்'.


 'பாதியில் கைவிடப்பட்ட புத்தகம் போல், அந்தக் கோடையின் நாட்கள், தகிப்பு மிகுந்து முடிவற்றதாய் நீண்டன'.


 'எழுத்தைத் தவிர, வாழ்க்கையைப்போல் வியப்பூட்டும் வேறொன்று இல்லை, வேறு ஆறுதல் எதுவுமே இல்லை'.


 இத்துடன் வாசிக்கும் செயலையும் இணைத்துக்கொள்ளலாம்.


 மிக்க நன்றியும்! அன்பும்!! எத்திராஜ் அகிலன்!!!

Comments

  1. மிக்க நன்றி, சரவணன் சுப்பிரமணியன். நூலை ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. வாசிப்பை, ரசனையை மிக நயமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். நூல் மதிப்புரைகள் பெரும்பாலும் கதைச் சுருக்கங்களாகவே காணப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் பாமுக்கின் கதைகூறு நேர்த்தியைப் பக்குவமாய்ச் சுட்டிக் காட்டிப் பிற வாசகர்களுக்கு நூலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் பாங்கு போற்றத்தக்கது. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பிசகல்களை இனி வரும் படைப்புகளில் நீக்க முயலுகிறேன். அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  2. பெரும் உழைப்பை இட்டிருக்கிறீர்கள். அசாதாரானமான பணி இது. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்