மஞ்சள் மோகினி
மஞ்சள் மோகினி சிறுகதைகள்
சி.மோகன்
மின்நூல்
185 பக்கங்கள்
எளிதாக வாசித்து கடந்துவிட இயலாத மிக நுட்பமான வாசிப்பைக் கோரும் கதைகளின் தொகுப்பு நூல் இது.
ஜி நாகராஜனின் கடைசி இரு நாட்களை புனைவாக கொண்டு வந்து மனதை கனக்கச் செய்துவிட்டார் மோகன்.
பெரும் கலைஞர்களின் சாகச மனநிலையும் எதிர்பார்த்தே இராத உடனடி பெருவீழ்ச்சியையும் அடைந்துவிட்ட ஜி நாகராஜன் பற்றிய குறிப்புகள் மோகனின் எழுத்துக்களில் முற்றிலும் புதிய தரிசனங்களை அளித்துவிடுகின்றன.
'மரணம் அவருடைய முகத்துக்கு ஒளியூட்டி இருந்தது. நிறைவும் சாந்தமும் அந்த ஒளியில் புலப்பட்டன' என்றவாறு அக்கதை நிறைவடைகிறது.
விடுமுறை நாட்களில், கிராமத்து பூர்வீக வீடுகளில் கிடைக்கப்பெறும் சிறுசிறு அனுபவங்களும் மறுக்கவியலா இனிய தருணங்களாக நிலைத்து விடுவதை வேறொரு கதை பேசுகிறது.
பொருளாதாரமே முதன்மையாக அறியப்பட்டுவிட்ட சூழலில் தனிமையில் புறம் ஒதுக்கப்பட்டுவிடும் பிஞ்சுகளின் உலகை நினைவுபடுத்தும் கதையொன்றும் இத்தொகுப்பில் உண்டு.
விளையாட்டு பொம்மைகள், தாத்தா, பாட்டிகளே குழந்தைமையில் பெரும் ஆறுதல் அளிப்பவர்களாக இருந்து விடுகிறார்கள். பிஞ்சுவயதில் அனுபவிக்கும் புறக்கணிப்புகள் மனங்களை இறுகச் செய்து விடுகின்றன.
பெரும் மாற்றங்கள் இன்றி நகரும் வாழ்வில் புத்தம் புதிய நம்பிக்கைகள் தோன்றும்போது நேரிடும் மாற்றங்கள் பழைய நிலைகளை நோக்கிய மனித மனங்களை தள்ளி விடுகின்றன. 'கடல்மனிதன்' புறக்கணிக்கப்படுவதையும் இவ்வாறே எண்ண முடிகிறது.
பாலியலின் இயல்பான அத்துமீறல்களை மோகன் புனைவுகளில் மிகஅழகாக வெளிப்படுத்தி விடுகிறார். நிகழ்ந்துவிட்ட விரும்பத்தகாதவைகளின் தாக்கம் குறுகிய காலத்தில் மாறிவிடப் போவதில்லை.
கலைஞர்களின் அகஉலகில் பயணிக்கும் 'மஞ்சள் மோகினி' மாய யதார்த்தவாதத்துடன் விவரிக்கப்படும் நேர்த்தியான கதை.
'நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட மனிதனுக்கு இந்த உலகத்தில் எஞ்சியிருப்பது அழகு மட்டும்தான்'
பிரயத்தனமின்றி வெகு இயல்பாகவே பலர் அடைந்துவிடும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்டவர்கள் வடிகாலாக எண்ணுவதே பிரக்ஞையில் அவரவர் கண்டடையும் அழகியல்களே என்பதை நினைவூட்டுகிறது மேற்கண்ட வரி.
முதல் மூன்று கதைகளை எளிதாக வாசித்துவிட முடிந்தது. அடுத்தடுத்த கதைகள் மறுவாசிப்பு கோரியவை. எளிதாக இந்நூலை வாசித்து விட இயலவில்லை.
இத்தன்மையே இந்நூலினை வாசித்தே ஆகவேண்டும் என்று எண்ணவைக்கப் போதுமானது.
Comments
Post a Comment