நாவல் கலை

 நாவல் கலை 

சி.மோகன் 

மின்நூல் 

107 பக்கங்கள் 


நல்லதொரு நாவலின் கட்டமைப்பு, உட்கூறுகள், வாசித்தே ஆகவேண்டிய நாவல்களின் பட்டியல், தவிர்க்கப்பட வேண்டியவை குறித்த தகவல்கள் அடங்கிய நல்லதொரு நூல் இது.


 'நவீன யுகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நாவல்கலை என்ற எண்ணம் இன்றளவும் என்னிடம் தீர்க்கமாக இருந்துகொண்டிருக்கிறது'


 மோகனின் மேற்கண்ட வரி வாசிப்பில் நாவல் என்ற வகைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி விடுகிறது.


 'நாவலாசிரியன் ஒரு புனைவாளன் மட்டுமல்ல, அவன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன் எனத் தீர்க்கமாகச் சொல்லும் கட்டுரைகள்' என்று முன்னுரையில் குறிப்பிடப்படும் வரிகள் படைப்பாளியின் மேதமையை உயர்த்திப் பிடிக்கின்றன.


 இந்நூல் தரும் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வாசித்துவிட்ட நாவல்கள் பெரும் நிறைவையும், புதிய தரிசனங்களையும் அளிக்கின்றன.


 எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற விழிப்பு எப்போதும் நிறைந்திருத்தல்  மிகவும் அவசியமென்று தோன்றுகிறது.


 கரமாஸவ் சகோதரர்கள், இடைவெளி, புயலிலே ஒரு தோணி, மோகமுள் நாவல்கள் குறித்து மோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாசிக்கையில் பெரும் நிறைவினை அளிப்பவை.


 'தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தாஸ்தயெவ்ஸ்க்கிதான். நான் அதற்கு முன்னரும்கூட சற்றே வித்தியாசமானவனாக, அவ்வுணர்வு இல்லாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியிடம் ஆழமாக மூழ்கிய அந்த தருணத்தில் இருந்து நான் நிச்சயமாக ஒரு வித்தியாசமானவனாக ஆனேன்'.


 தாஸ்தயெவ்ஸ்கியை வாசித்த அனைவரும் உள்ளுர உணர்ந்துவிடும், வார்த்தைகளில் அனுபவத்தை வெளிப்படுத்த தவறிவிடும் நபர்களின் எண்ணங்களாகவும் மேற்கண்ட வரிகளை கொள்ளலாம்.


 நல்ல நூல்களை வாசிக்க முடிந்தவர் அனைவரும் குறைந்தபட்ச படைப்புத்திறன் கொண்டிருப்பின் இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.


 தனது நூலினை அச்சில் காண்பதற்கு முன்பே மரணித்துவிட்ட சம்பத், மிகுந்த ஈடுபாட்டுடன் எடிட்டிங் பணிகளில் தன்னுடன் பணியாற்றியதை மோகன் குறிப்பிடுகிறார்.


 'காலத்தின் பார்வை சற்று தாமதமாகவே என்றாலும், தீட்சண்யமாக பதிந்து ப.சிங்காரத்தின் இரு நாவல்களும் துலக்கம் பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன'


 'ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வாசிப்பிற்கும், வசீகரித்துக்கும் ஆட்பட்டவை'.


 மேற்கண்ட மோகனின் வரிகள் அப்படைப்புகள் மீதான ஈர்ப்பினை அதிகரித்து விடுகின்றன.


 இந்நூல் சி.மோகனின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கிய பங்களிப்பு.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்