நீராட இருக்கிறது நதி
நீராட இருக்கிறது நதி
சி.மோகன்
மின்நூல்
83 பக்கங்கள்
மனித வாழ்வின் தலைசிறந்த ஊடகமாக இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய சினிமாவே இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரத்திற்கு வேறெந்த சிந்தனையுமின்றி, பெரும் கவனக்குவிப்புடன் நமது நேரம் செலவாவதிலிருந்தே இதை உணர முடியும்.
திரைப்படங்கள் காண்பதும், அது சார்ந்த கட்டுரைகளை தேர்ந்த எழுத்து ஆளுமைகளின் படைப்புகளிலிருந்து வாசிப்பதுவும், எப்போதும் சமகாலத் துயர்களில் இருந்து தற்காலிகமாக நம்மை விடுவிப்பவை.
'நினைவு நதியில் நீராடி களிக்கும் பரவசமே இக்கட்டுரைகளின் ஆதாரம்' என்று குறிப்பிடும் மோகன், தனது எழுத்துக்களின் மூலம் திரைக்கலையின் மீதான பார்வையை மாற்றி அமைக்கவும் யத்தனிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னியான டி ஆர் ராஜகுமாரி பற்றிய கட்டுரை நிலையாமையை பெரிதும் உணர்த்தி வருந்தச் செய்கிறது. காந்தக் கண்களால் பெரிதும் வசீகரித்தவர், அந்திமக் காலத்தில் தொழுநோயுடன் போராடி இறந்திருக்கிறார் என்ற தகவல் பெரும் கலக்கம் அடையச் செய்கிறது.
ஆரூடங்களை முற்றிலும் உண்மையாக்கி, ஒளிவீசி மறைந்த மதுபாலாவின் வாழ்வு, விதியின் கொடுங்கரங்கள் பிரித்து மகிழ்ந்த திலீப்குமார் - மதுபாலா காதல், முற்றிலும் புதிய தகவல்களாக இருந்தவை.
'கலையை பிரதிபலித்தது வாழ்க்கை' என்ற மோகனின் வரி இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக இருந்தது.
ஆண்டு முழுவதும் உழைத்து வாழும் ஏழை, எளிய மக்கள் திருவிழாக் காலங்களில் அடையும் இன்பத்தை சிலாகித்துக் குறிப்பிடுகிறார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சினிமாவே நீடித்திருக்கிறது.
மதுரையை பெரியதொரு கிராமம் என்று குறிப்பிடும் போதும், ரீகல் திரையரங்கம் குறித்த தகவல்களை பேசுகையிலும், வடிவேலு என்ற பெருங்கலைஞனைப் பற்றிய எண்ணங்களை தெரிவிப்பதிலும் தனித்து தெரிகிறார் மோகன்.
தமிழ்த்திரையின் பெரும் கலையாளுமைகளான எம் ஆர் ராதா, சந்திரபாபு போன்றோரை நினைவுகூர இளம் தலைமுறையினருக்கு ஏதுமற்றநிலை உண்மையில் பெரும் குறைதான்.
கண்டு, உணர்ந்து, வியந்த தரவுகள் குறித்த இக்கட்டுரைகள் நுட்பமாக எழுதப்பட்டிருக்கின்றன.
சந்திரபாபு, சாவித்திரி போன்ற கலைஞர்களின் பொருளாதார வீழ்ச்சி அவர்தம் கலையுலக மேன்மைகளைக் கடந்தும் நிகழ்ந்து விட்டிருக்கின்றன.
மதுரை திரையரங்குகளில் ஒவ்வொரு வகையான காட்சிகளின்போதும் பகிரப்படும் சங்கேதச் சொல்லாடல்கள் ரசிக்க வைத்தன.
காலம் மறைத்து விட்ட கலைஞர்களின் அபூர்வ நினைவூட்டல்களாகவே அமைந்துவிட்டன இக்கட்டுரைகள்.
Comments
Post a Comment