நேர்காணல் நூல்
அங்கீகரிக்கப்படாத கனவின் வலி
சி.மோகன்
மின்நூல்
73 பக்கங்கள்
'உரையாடல் என்பது மிகவும் சௌகரியமான வெளியீட்டு சாதனம்' என்று கூறும் மோகனின் 4 நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.
பல சந்தர்ப்பங்களில் தோல்விகள் மகிழ்ச்சி தரக்கூடியது என்றும், மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வதற்கான மனோபாவம் இலக்கியப் படைப்பில் இருந்து தனக்கு உருவாகியிருக்கும் என்றும் தோன்றுவதாக கூறுகிறார் மோகன்.
நற்றிணை வெளியீடான 'சி.மோகன் கட்டுரைகள்' -முழுத்தொகுப்பு நூலினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாசித்திருந்தேன். அப்பெரும் நூலின் சிறுசிறு பகுதிகளான பத்துக்கும் மேற்பட்ட மின்நூல்களை இம்மாதம் முழுவதும் வாசித்தபோதும், அலுப்பே ஏற்படுத்தாத எழுத்துக்கள் இவை.
'அமெரிக்கா நினைவுகளற்ற நாடு. குடியேறிகளால் உருவாக்கப்பட்டது. இறந்த காலத்தின் பாரம்பரியத்தின் மரபின் தொன்மையான நினைவுகள் எதுவும் அதற்கு இல்லை'.
'இன்றைய படைப்பாளியின் பொறுப்பு தீர்மானிக்கப்பட்ட வாழ்வின் வெற்றி உருவாக்கும் நெருக்கடியை எதிர்கொள்வது என்று நினைக்கிறேன்'.
மோகனின் நுட்பமான எதிர்வினைகளில் ஒருசில வரிகள் மேற்கண்டவை.
படைப்பிலக்கியம் என்பது குறிப்பிட்ட சில தனிநபர்களோடு முற்றுப்பெறுகிற செயல்பாடில்லை என்ற மோகனின் கூற்று சிந்திக்கத்தக்கது.
புனைவுகளில் மிகக்குறுகிய அளவிலும், விமர்சனங்களில் மிக விரிவாகவும், பங்களித்திருக்கும் மோகன், நவீன ஓவியங்கள், செழுமையான புதிய படைப்புக்களை மிகவிரைவாக அடையாளம் காணுதல், மறைக்கப்பட்டுவிட்ட புனைவுகளை வலிய முயன்று மீட்டெடுத்தல் போன்ற செயல்பாடுகளில் தீர்க்கமாக இயங்கிவரும் படைப்பாளியாக அறியப்படுகிறார்.
தனித்த நபராக வாழ்கையிலும், எவ்வித தன்னிரக்கமுமின்றி 'ஒருவரால் இப்படி இருக்க முடியும் என்றால் இருக்கலாம்தானே?' என்று இயல்பாக கூறமுடிகிறது அவரால்.
அவ்வகையில் தமிழ் இலக்கிய சிகரங்கள் ப.சிங்காரம், நகுலன் போன்றோரின் தொடர்ச்சியாகத் திகழ்கிறார் அவர்.
அரியவைகளின் களஞ்சியமாய் மிளிரும் இவரால் தூண்டப்பட்ட தீபங்கள் அதிகம்' என்ற கூற்றில் சற்றும் மிகையில்லை.
’எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால், அது தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்' என்ற வரி, வாசிப்பதற்கும், வாசிப்பு பதிவுகள் தொடர்ச்சியாக எழுதுவதற்கும் ஊக்கமளிப்பவை.
Comments
Post a Comment