வந்தவாசிப்போர் 250
வந்தவாசிப் போர் 250
மு.ராஜேந்திரன் அ.வெண்ணிலா
அகநி பதிப்பகம்
168 பக்கங்கள்
'பயணங்களின் தூக்கத்தில் நழுவிவிடும் நிலக்காட்சிகளைப்போல் அவரவர் தம் சொந்த மண்ணின் வரலாற்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறோம்'
வெண்ணிலாவின் மேற்கண்ட கவித்துவமான வரி நூலின் எதிர்பார்ப்புகளை கூட்டிவிடுகிறது.
'வாழ்ந்து கெட்டவன் ஊரோடு ஒட்டமாட்டான்' என்ற மு.ராஜேந்திரன் அவர்களின் வரி, வந்தவாசி நகருக்கு கச்சிதமாகப் பொருந்தி விடுகிறது.
விலைவாசி சற்றே குறைந்த, எளிய மனிதர்களின் நகரமான வந்தவாசியின் மீது எனக்கு எப்போதும் ஒரு வாஞ்சையுண்டு.
அரசுப் பணிக்கு வந்த ஆரம்ப நாட்களில், தொகுப்பூதிய காலங்களில், வெறும் 50 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் பயிற்சிகளுக்காக மதுராந்தகத்தில் இருந்து 40 ரூபாய் பேருந்து கட்டணம் செலவழித்து வந்தவாசியைக் கடந்து அம்மையப்பட்டு வரை சென்று வந்திருக்கிறேன்.
மீதமாகும் பத்து ரூபாய்க்கு வந்தவாசி பேருந்து நிலையத்தில் வாழைப் பழங்கள் வாங்கி வருவது எனது வழக்கம். அன்றைய நாட்களில் 24 பழங்கள்(!!!!) பத்து ரூபாய்க்குத் தருவார்கள்.
அது போன்ற ஒரு பயிற்சி நாளில்தான் வெண்ணிலா அவர்களை சந்தித்து உரையாடியது நினைவில் இருக்கிறது. தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த அவரது கட்டுரை குறித்து உரையாடல் சென்றது.
இன்று அவர் நாடறிந்த கவிஞர், எழுத்தாளர். ஆசிரியர் பணியில் இருப்பவர் என்ற வகையில் அவரது உயர்வு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிறந்த மண்ணிற்கு எழுத்தாளர் ஒருவர் இதைவிட என்ன செய்துவிட முடியும்?
1760இல் நிகழ்ந்த வந்தவாசிப் போர் குறித்து பாடப் புத்தகங்களில் படித்த நினைவுகளையெல்லாம் மீட்டெடுத்துக் கொண்டு வந்துவிட்டது இந்த வண்ணமயமான நூல்.
தமிழகத்தைப் பெரிதும் சுரண்டியவர் என்ற போதிலும், ஜெனரல் லாலியின் பரிதாப முடிவு துயர் ஏற்படுத்தவே செய்கிறது. அவரது மகனின் உறுதியான முயற்சிகளினால் ராஜதுரோக குற்றச்சாட்டுகளிலிருந்து மரணத்துக்குப் பின்பு 'லாலி' விடுவிக்கப்பட்டது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
ஜைன மதம் குறித்த கட்டுரையும், கல்வெட்டுகள் குறித்த பேராசிரியர் எ.சுப்பராயலுவின் நேர்காணலும், வரலாற்றில் தடம் பதித்து மறக்கப்பட்டுவிட்ட இடங்கள் குறித்த பதிவுகளும் இந்நூலின் சிறப்புகள்.
வந்தவாசி என்ற இந்நகருக்குள் இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருப்பது பெரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
வாசிக்கவேண்டிய மிகவும் சிறப்பான நூல். வாழ்த்துகள்! வெண்ணிலா-முருகேஷ் இணையருக்கு!!
Comments
Post a Comment