ஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
தமிழில் நம்மாழ்வார்தாசன் மின்நூல்
202 பக்கங்கள்
எதுவும் செய்யத் தேவையற்ற வேளாண்மையை முன்னெடுத்த மசானபு புகோகாவின் இயற்கை விவசாயம் குறித்த எளிய, ஆச்சரியமளிக்கும் கருத்துகளைக் கொண்டிருக்கும் நூல் இது.
நிலத்தை உழத் தேவையில்லை, நீரைத் தேக்கிவைக்க வேண்டியதில்லை, ரசாயன உரங்கள் அவசியம் இல்லை என்றவாறு அவரது பரிந்துரைகள் செய்ய வேண்டாதவைகளின் குறிப்புகளாகவே உள்ளது.
'ஒன்றைத் தனதாக்கிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதை புரிந்து கொண்டுவிட்டால் இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்துவிடும்'
ஃபுகோகாவின் சிந்தனையில் புரட்சிகரம், எளிமையுடன் கைகோர்த்து வருகிறது.
பயிர்களை வளர்ப்பது மட்டும் வேளாண்மை அல்லவென்றும், மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதும் அதன் பணியே என்ற கருத்து தெளிவிற்கு இட்டுச் செல்கிறது.
விதைப்புக்குப்பின் தீவனப்பயிர், வைக்கோல் பரப்புதல் போன்ற நடைமுறைகள் முயன்று பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை.
நுகர்வு யுகத்தின் அதீத முரண்கள், வேளாண்மையை கடுமையாக பாதித்து இருப்பதை உணரமுடிகிறது.
இயற்கை வேளாண்மையில் உழைப்பும், செலவும் குறைவாக அமைவதால் விளைபொருட்கள் மிகக் குறைவான விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் நேர்மையுடன் விளக்கவும் தவறவில்லை ஃபுகோகா.
அவரது மலைச்சரிவின் வயல்களும், ஆரஞ்சு மரங்களும் கண்முன்னே தோன்றாமல் இல்லை.
அவசியமற்று நீண்டு, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நவீன அறிவியல் வசதிகளை மறுதலித்தல், எளிமையான இயற்கையுடன் இணைந்து வாழ்தலையும் இந்நூல் விளக்கிச் செல்கையில் வாசகனுக்கு பெரும் ஏக்கம் உருவாகாமல் இருக்காது.
ஃபுகோகாவின் புரிதல்கள் வேளாண்மை சார்ந்து மட்டும் நின்றுவிடுவதில்லை.
களைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒழிக்கப்படக்கூடாது, நீர் தேக்கி வைக்கப்பட்ட வயல்களை கடினமாக உழும்போது இறந்துவிடும் நுண்ணுயிர்கள், ரசாயன உரங்கள் இடப்பட்டு செயற்கையான விளைச்சலை ஈட்டும் விவசாயிகள் அடையும் மிகக் குறைவான வருவாய் போன்ற வெளிப்படையான கருத்துக்கள், வேளாண் துறையின் மீது புரிதல்களையும் ஆர்வத்தையும் நம்முள் விதைக்கின்றன.
Comments
Post a Comment