நாளை வெகுதூரம்


நாளை வெகுதூரம் 

சமகால உலகச் சிறுகதைகள் 

தமிழில் ஜி குப்புசாமி

உயிர்மை பதிப்பகம் 

216 பக்கங்கள் 


'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் இந்நூலை வாங்குவதற்காகவே மூன்று ஆண்டுகள் பெரும் பிரயத்தனத்துடன் தேடினேன்.


 'நாளை வெகு தூரம்' என்ற இந்நூலின் தலைப்பு எனது வாசிப்பிற்கும் மிகக் கச்சிதமாக பொருந்தி விட்டது. ஜூலை 28-ஆம் தேதி வாசிக்க ஆரம்பித்து, ஆகஸ்ட் 21 இல் தான் நிறைவு செய்ய முடிந்தது. இந்நூல் தற்போது எனது கண்களுக்கு அபாயகரமான 'எச்சி எடிகா' பாம்பாகவே காட்சியளிக்கிறது.


 கலைஞர்கள் சந்தேகத்திற்கிடமின்றி பெருமகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டியவர்கள். லௌகீக சிந்தனைகளில் துயருடன் மூழ்காத அளவுக்கு அவர்களை பாதுகாக்க வேண்டியது, கலையை நேசிப்பவர்கள், கலையால் பயன் அடைபவர்கள் கடமையே ஆகும். ஜூலியன் பார்ன்சின் 'நிசப்தம்' கதை உணர்த்தியது மேற்கண்ட வரிகளை.


 'எப்போதும் நினைவில் வைத்திருங்கள். உலகத்தின் எந்த நகரத்திலும் விமர்சகன் எவனுக்கும் சிலை வைத்திருக்கவில்லை'.


 இசைக் கலைஞன் ஒருவனின் அகம் நோக்கிய பயணமாக 'நிசப்தம்' கதையை உணர்கிறேன். Silence என்ற தலைப்பை 'அமைதி' என்ற தேய்ந்துபோன, தட்டையான சொல்லைக்கொண்டு மொழிபெயர்க்காமல் 'நிசப்தம்' என்ற சொல்லைத் தேர்வு செய்தமை மிகவும் சிறப்பு.


 சூதாட்ட பழக்கமும், மிகையாக உண்ணும் செயலும், பொது குளியலறை வளாகம், 40 பங்கேற்பாளர்கள் என்ற புதுமை திட்டமும் புனைவை பெரும் தனித்துவ அழகியலுடன் பொருத்துகிறது.


 ஒவ்வொரு பங்கேற்பாளரின் மரணத்தையும் மற்றவர்கள் விரும்பி எதிர்பார்த்தல் புதுமைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆகிவிடுகிறது.


 அசோகமித்திரனின் செகந்தராபாத் கதைகளுக்கு இணையான வாசிப்பனுபவத்தை அளித்தது இத்தொகுப்பிலுள்ள காசுவோ இஷிகுரோவின் 'இருட்டிய பின் ஒரு கிராமம்' கதை. 


பரிச்சயமான மனிதர்களை, இடங்களை வெகுகாலம் கழிந்து காண நேர்கையில் கிடைக்கக் கூடிய எதிர்பாராத பரவசங்கள், ஏமாற்றங்களின் கலவையாக அமைந்துவிட்ட தருணங்களை உணர்த்திய புனைவு இது.


'காட்டுக்குள் இருந்த ஒன்று' கதையை மூன்றுமுறை வாசித்த போதும் கதையின் ஆன்மாவை என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள இயலவில்லை. எனினும் வாசிப்பில் திருப்தி அளித்த கதைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.


 செகாவின் இறுதி நாட்களின் பெரும் புனைவான 'தூதன்', தம்பதியரின் அணுகல் விலகல்களை உணர்த்திய 'தேவையெனில் என்னை நீ அழைக்கலாம்' இரு கதைகளும் ரேமண்ட் கார்வரின் தனித்துவத்தை அழுத்தமாக உணர்த்தின.


 கெவின் பிராக்மைரின் 'பேசும் கிளிகள்', வாய்பேச முடியாத மனிதனை, செவிடனாக கண்டுகொள்ளும் மக்களையும், அவனது கடைசி மூச்சின் சலனங்களை படியெடுத்து ஒலித்த கிளிகளையும் முன்னிறுத்துகிறது.


'இறந்தவர்களின் சின்னஞ்சிறு சரித்திரம்' சமகால நிகழ்வுகளையும், மரணத்திற்கு பிந்தையதான உலகம் குறித்த மதிப்பீடுகளுக்கும் இட்டுச் செல்கிறது.


 மனநிலை சரியில்லாதவன் சாதுர்யமாக நடந்து கொண்டு விடுவதும், பெரும் செல்வாக்குடன் வாழ்பவன் பித்தனாக அறியப்படுவதும், சினுவா ஆச்சிபியின் 'பித்தன்' கதையில் நேரிடுபவை.


 அடீச்சியின் புதுமையான கதை சொல்லலில் 'நாளை வெகு தூரம்', ஆண்வழித்தோன்றல்கள் கொண்டாடப்படுவது உலகளாவிய வழக்கம் என்பதை அறியச் செய்தது.


 ஹனீப் குரேஷியின் 'திருமணங்களும் சிரச்சேதங்களும்' கதை குறுகிய அளவில் புனையப்பட்டிருக்கும் அதிர்வுகளை ஏற்படுத்திய கதை.


 பிக்பாக்கெட் அடிப்பவனை தண்டிக்க நினைப்பதும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள முயல்வதும், பயணங்களின் ஊடான நினைவுகளும் 'சந்தேகத்தின் பலன்' கதையை குறிப்பிடத் தகுந்ததாக ஆக்கிவிடுகிறது.


 வாசிப்புக்கு சவால்களை விடுத்து இறுதியில் திருப்தியான மனநிலைக்கும் எடுத்து சென்றவை இத்தொகுப்பில் உள்ள கதைகள்.


ஜி குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களுள் குறிப்பிடத்தகுந்த இடத்தை இந்நூலும் பெற்று  விடுவதற்கு இதுவும் காரணமாகிவிடுகிறது.


இந்த நூலுடன் ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அச்சில் வெளிவந்திருக்கும் 16 நூல்களையும் வாசித்து முடித்துவிட்டேன். மறுவாசிப்புக்கு காலம் கனிய வேண்டும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்