திலக மகரிஷி
திலக மகரிஷி
வ உ சி
பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்
184 பக்கங்கள்
பெரிதும் பரிச்சயமான சொல்லாடல்களான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' போன்றவற்றின் மூலமாக இளம்வயது முதல் தற்போது வரை அறியப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்கள், தமது அரசியல்குரு லோகமான்ய திலகர் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
வரலாற்று பாடங்களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 'தீவிரவாதிகள்', 'மிதவாதிகள்' என்ற இருவகையான அணியினர் அவரவர் நம்பிய வழியில் செயல்பட்டு இருந்தமை குறித்து அறிந்திருப்போம்.
சுதந்திரத்திற்குப் பிறகு இன்றுவரை மிதவாதத் தலைவர்களே பெரிதும் மக்களால் நினைவு கூறப்படுகிறார்கள். 'அமிதவாதிகள்' மற்றும் 'தேசியவாதிகள்' என்று தமது அணியினர் குறித்து பெருமிதத்துடன் குறிப்பிடும் வ.உ.சி, திலகரின் பங்களிப்புகளை நெகிழ்வுடன் முன்வைக்கிறார்.
மிதவாதிகளை கோழைகள் என்றும், காங்கிரஸ் கூட்டங்களில் அவர்தம் ஆதிக்கம், திலகரை உரையாற்றவிடாமல் இடையூறு செய்தமை, அன்னிபெசன்ட் அம்மையார் உடன் தனக்கு ஏற்பட்ட பிணக்கு, உள்ளிட்ட நிகழ்வுகளை இலக்கியத்தரத்துடன் நேர்மையாக எழுதியிருக்கிறார்.
சுதந்திரம் அடைதல் என்ற ஒற்றை இலக்கில் மிக உறுதியாக இருந்தபோதிலும், முதலாம் உலகப் போர் நடைபெற்ற தருணங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தருவது நமது கடமை என்ற நிலைப்பாட்டையே திலகர் எடுத்துள்ளார்.
அவரது முடிவுகள் ஆட்சியாளர்களால் ஐயத்துடனேயே எடுத்துக்கொள்ளப்பட்டதை இக்கட்டுரைகள் வாயிலாக அறியமுடிகிறது.
பல நாட்களுக்குப் பிறகு க்ரியா அகராதியை கையில் ஏந்தும் வாய்ப்பினையும் இந்நூலே வழங்கியது. மணிக்கொடி காலத்திலேயே வஉசி போன்ற குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களும் தோன்றியது மகிழ்வான விடயம்.
சிறைசென்று மீண்டதற்குப் பிறகாவது வஉசி இலக்கியத்தில் இன்னமும் கவனம் செலுத்தி இருப்பாரா என்பதை ஆய்வாளர்களே தெளிவுபடுத்த வேண்டும்.
நல்லதொரு நூல் செம்பதிப்பாக வெளியிடப் படுகையில் அது வாசிப்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விடுகிறது.
இலங்கை வீரகேசரி பத்திரிகையில் 1930களின் ஆரம்ப வருடங்களில் வெளியாகியுள்ள இக்கட்டுரைகளை பெரும் ஆர்வத்துடன், அர்ப்பணிப்புடன் வெளியிட்டிருக்கும் ஆ.இரா வேங்கடாசலபதி தமிழ் வாசகர்களின் நன்றிக்கும், வணக்கத்திற்கும் உரியவர்.
திலகரின் வாழ்வை, பணியை முழுமையாக சொல்லிவிடாத நூல் என்ற போதிலும் மிகவும் திருப்தி அளித்த நூல் இது.
Comments
Post a Comment