தாலிபன்


 தாலிபன்
 

பா ராகவன் 

மின்நூல் 

325 பக்கங்கள் 


சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் மேன்மைகளை அவற்றைப் பெற முடியாமல் தவற விட்டுவிட்ட நாடுகளே நமக்கு உணர்த்துவதாக அமைந்துவிடுகின்றன. அத்துமீறல்களும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் ஆப்கனில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை அறிகையில் மனம் மிகுந்த துயரம் அடைகிறது.


 பா ராகவனின் 9/11, 'ஓப்பன் டிக்கெட்' உள்ளிட்ட நூல்களை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது உண்டு. தாலிபன்கள் குறித்த தகவல்களை மிக அழகாக செய்நேர்த்தியுடன் கோர்த்து, அலுப்பு ஏற்படுத்தாத மொழிநடையில் அளித்திருக்கிறார்.


தீவிர இலக்கிய வாசிப்புகளுக்கு இடையில் முன்பெல்லாம் 'சுஜாதா', 'மதன்' ஆகியோரின் நூல்களை வாசிப்பது போன்று இந்நாட்களில் பாராவின் நூல்களின் வாசிப்புகள் அமைந்துவிடுகின்றன.


 மத அடிப்படைவாதம் தலைதூக்குகையில், மக்கள் அடைய நேரிடும் துன்பங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. கல்வி மறுக்கப்படும் சமூகம், வளர்ச்சி பெறவும் வழியின்றி, மூளைச்சலவை செய்யப்பட்டு, மிக சுலபமாக பலிகடாக்கள் ஆக்கப்பட்டு விடுகின்றனர்.


 தீவிரவாதம்  எத்தரப்புக்கும் நன்மை அளிக்கப் போவதில்லை. வளர்ச்சியை நிறுத்தி, மனித சமூகத்தை பல ஆண்டுகள் பின் நகர்த்துவது ஒன்றையே செய்கிறது என்பதை விளக்கி விட்டது இந்நூல். முல்லா ஓமரின் தாலிபன்கள் ஆப்கனில் நிகழ்த்தியுள்ள கொடூரங்கள் மனதை பதற வைக்கின்றன.


 முன்னாள் அதிபர் மற்றும் எதிர்தரப்பு தலைவர் கருணையின்றி வேட்டையாடப்பட்டதையும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதையும்  வாசிக்கையில் அச்சம் ஏற்படுகிறது.


 அரசே முறைப்படுத்தி ஓபியம் வளர்த்த செயல், பாமியான் புத்தர் சிலைகளை பிடிவாதமாக அழித்தமை, வேண்டுகோளுடன் வருகை தந்த வெளிநாட்டுத் தலைவரை எச்சரித்து அனுப்பியது உள்ளிட்ட ஓமரின்  செயல்பாடுகள் ஆப்கன் மக்களுக்கு எவ்வகையில் நன்மையாக இருந்திருக்க முடியும்?


 போராளிகளின் பிடியிலிருந்து மீண்ட தேசம், இயற்கை பேரழிவுகளில் சிக்கிக்கொண்டது மிகப்பெரும் சோகம். நம்பிக்கை அளித்த தலைவராக, பணிவுடன் உதவிகளைக் கேட்டுப் பெற்று நாட்டினை மீள்கட்டமைக்க முயன்ற அப்போதைய அதிபர் 'ஹமீத் கர்சாய்' பாராட்டுக்குரியவர்.


 ஆப்கன் போன்ற தேசங்களையும், அந்நாட்டு மக்களையும் ஆதரித்து காக்க வேண்டிய பணி வளர்ந்த, வளரும் நாடுகளின் கடமையே ஆகும்.


 அதுவே நாகரீகமடைந்த மனித குலத்தின் கருணை மிகுந்த  வெளிப்பாடாக அமைய முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருப்பது மற்றொரு ஏமாற்றமளிக்கும் நிலையாகும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்