சேரன்மாதேவி
சேரன்மாதேவி
குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
334 பக்கங்கள்
பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற புனைவுகள் அத்தகைய வலிகளை பொதுவெளிகளில் உணர்ந்தறியச் செய்துவிடுகின்றன.
புரட்சிகரமான தேசபக்தர் வ.வே.சு ஐயர் சாந்தி நிகேதனம் போன்றதொரு ஆசிரமத்தை தமிழ் மண்ணில் நிறுவிவிடும் ஆர்வத்துடன் மிகுந்த பிரயத்தனத்துடன் பிராமணர், பிராமணரல்லாதோரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சேரன்மாதேவியில் ஆசிரமம் நிறுவுகிறார்.
ஆசிரமத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ண மறுக்கும் இரு சிறுவர்களுக்கு சமையல் அறையில் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இளவயதில் குழந்தைகளிடையே பிறப்பு சார்ந்து அமையும் ஏற்றத்தாழ்வுகள் என்ற நஞ்சினை விதைப்பதாக அமையும் இச்செயலை வரதராஜுலு நாயுடு அவர்களும், ஈவேரா பெரியாரும் எதிர்க்கிறார்கள்.
குருகுலப் போராட்டம் வலுப்பெறுகிறது. சமபந்தி போஜனத்தை உறுதி செய்ய வேண்டும் அல்லது திரட்டப்பட்ட நிதியை திருப்பி அளித்தல், புரவலர்களிடம் ஆசிரமத்தை ஒப்படைத்தல் போன்ற தீர்வுகளை மகாத்மா முன்வைக்கிறார்.
கடும் எதிர்ப்புக்கிடையே வ.வே.சு ஐயர் குருகுலத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகி மகாதேவஐயர் என்பவரிடம் ஆசிரமத்தை ஒப்படைக்கிறார். எதிர்ப்பு கிளம்பிய சில மாதங்களில் வ.வே.சு ஐயர் பாபநாசம் அருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தனது மகளைக் காக்க முயன்று தானும் அவருடன் பலியாகி விடுகிறார். ஐயரின் தேசபக்தியும், தியாகமும் எதிர்தரப்பினரால் கண்ணீருடன் நினைவுகூரப்படும்போதிலும், ஆசிரமப் பிரச்சினை நீடிக்கவே செய்கிறது.
பத்திரிகைகளில் தொடர்ந்த வாத,பிரதிவாதங்கள் காங்கிரஸ் இயக்க ஆலோசனைகள் எதன் மூலமும் தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. பெரும் கனவுடன் துவக்கப்பட்ட குருகுலம் சர்ச்சைகளின் மையம் ஆகிவிடுகிறது. அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தல், சுயமரியாதையின் துவக்கப்புள்ளி ஆகிவிடுகிறது.
கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக் கொள்ள, துப்பாக்கி பிடிக்கையில் கைகள் நடுங்காதிருக்க பயிற்சியளித்த தீவிர தேசபக்தரான வ.வே.சு ஐயர், பின்னாட்களில் அஹிம்சை கருத்தாக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெரும் லட்சியத்துடன் அமைத்த குருகுலத்தில், சர்ச்சைக்கு தீர்வுகாண இயலாமல் தவித்தமையும், அகாலத்தில் மரணித்தமையும் பெரும் சோகங்கள்.
இன்றுவரை 'சோற்றுப் பிரச்சினையில் துவங்கிய சுயமரியாதை எழுச்சி' என்ற அளவில் வரலாற்றில் சேரன்மாதேவி குருகுலம் நினைவுகூரப்படுகிறது.
நிகழ்ந்தவை குறித்த நடுநிலையான விரிவான பதிவுகளாக இந்நூல் திகழ்கிறது. அ.மாதவையாவின் 'ஏணியேற்று நிலையம்' புனைவு ஒரு சார்பாக அமைந்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.
சக மனிதனை கண்ணியமாக நடத்துதல், அவனுக்கு ஏதோ கருணை காட்டிவிடும் பெரும் குணமாக எண்ணிக் கொண்டுவிட்ட காலங்களையெல்லாம் கடந்து வந்திருப்பதை இந்நூலை வாசிக்கையில் உணரமுடிகிறது.
அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர் போன்ற வாக்குறுதிகளையும் மீறி தொடர்ந்துவிட்ட பாரபட்சங்கள் ஏமாற்றம் அளிப்பவை. தனது இறுதிக் காலங்களில் டாக்டர் வரதராஜுலு அவர்களே இப்போராட்டம் குறித்து ஏமாற்றத்துடன் புலம்பியமை முடிவான வெற்றி கொண்டு சேர்த்துவிடும் வெற்றிட மனநிலையை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது .
பெரும் வரலாற்று நிகழ்வுகளை ஆவணமாக, தீவிர முனைப்புடன் அளித்திருக்கும் பழ.அதியமான், அழகுற இந்நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் நன்றிக்கும்,அன்புக்கும் உரியவர்கள். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று.
Comments
Post a Comment