பசித்த மானிடம்
பசித்த மானிடம்
கரிச்சான் குஞ்சு
காலச்சுவடு பதிப்பகம்
271 பக்கங்கள்
அழகியல் மற்றும்
நோய்மையின் குறியீடுகளாக புனையப்படும் மனித உடல், மிதமிஞ்சியக் காமம், வரையறைகளைத் தகர்த்து நிகழ்ந்துவிடும் அத்துமீறல்கள், பணம் ஒன்றையே பெரும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகையில் நிகழ்ந்துவிட சாத்தியம் உள்ளவை அனைத்தையும் விவரித்துச் செல்கிறார் கரிச்சான் குஞ்சு.
40 ஆண்டுகளுக்கு முன்னரே ஓரினச்சேர்க்கை குறித்து புனைவில் கொண்டுவந்திருப்பதும், தேர்ந்த படைப்பாளி ஒருவரின் ஒற்றை நாவல் படைப்பாக உள்ளதுவும் இந்நாவலின் சிறப்புகள்.
300 க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை வாசித்து நிறைவு செய்ய 4 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனைக்கும் ஆண்டுக் கணக்காக இந்நூலுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
செல்லும் இடமெல்லாம் எவ்வித பேதமுமின்றி கணேசன் அரவணைக்கப்பட்டு விடுவதும், 'கிட்டா' தனது சிறுசிறு முன்னெடுப்புகளின் விளைவாகவே பெரும் செல்வங்களை அடைந்துவிடுதலும், புனைவின் நேர்மறையான அணுகல்களாகவே தோன்றுகிறது.
கணேசன்மீது பரிதாபப்பட்டு அழைத்துவரும் வாத்தியார், வீடு நிறைய புத்தகங்களை குவித்து வைத்திருப்பதும் அவனது உபநயன நிகழ்வை நம்பமுடியாத ஆர்வத்துடன் நடத்துவதும், சிங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து அவனைக் கைவிட்டுச் செல்வதும் சோகமானவை.
சிங்க ராவுத், ஜவுளிக் கடைக்காரர் இருவராலும் வலிந்து நுகரப்படும் கணேசன், பெண்களையும் ஈர்க்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.
கலவர கும்பலுக்கு அஞ்சி ஓடுபவன், சுந்தரியின் வீட்டிற்குள் நுழைவதும், அங்கிருந்து அவனது வாழ்வின் மற்றொரு பரிணாமம் துவங்குதலும் சோபையின்றி முற்றுப் பெறுதலும் மிகுந்த கனம் ஏற்படுத்தும் பகுதிகள்.
துள்ளல்களை ஏற்படுத்தும் கட்டுடல், எதிர்திசையில் உக்கிரமாக பயணித்து நோய்மையில் விழுதலும், வாதையின் வினோத மணங்கள், புறக்கணிப்புகளை ஏற்படுத்தி உறவுக்கு முற்றுப்புள்ளி இடுகின்றன.
மாப்பிள்ளைக் கிழவரின் வீட்டில் மிக இயல்பாக நடந்து வருபவை அனைத்தும் நேரடியாக புனைவில் சொல்லப்படவில்லை. மாறாக குறிப்பால் உணர்த்தப்பட்டு விடுபவை அவை.
தஞ்சை பிரகாஷின் 'மீனின் சிறகுகள்' நாவலில் இடம்பெறும் 'ரங்கமணி', கணேசனின் பாதிப்பில் உருவானவனாகவும் இருக்கக்கூடும்.
கணேசன் பிறரால் கருணையின்றி குதறப்படுபவனாகவும், கிட்டா துணிச்சலுடன் எதிர்ப்படுபவர்களை வீழ்த்திச் செல்பவனாகவும் நீடிக்கிறார்கள். வலிய முயன்று தேடியடைந்த பெருஞ்செல்வம் அவனைத் தனது வாரிசின் வாயிலாகவே தண்டிக்கச் செய்கிறது.
தொடர்ச்சியாக சிரமமின்றி வாசிக்க முடியாத படைப்பாகவே இந்நாவலை கருத முடிகிறது. அழகியலுடன் கட்டமைக்கப்படும் பாத்திரங்கள், தொடர்ச்சியாக முற்றுப்பெறாமல் மறைந்து கொண்டே செல்கிறார்கள்.
நேர்க்கோட்டு முறையில் அல்லாமல் எழுதப்பட்டு இருக்கும்போதும், குழப்பமின்றி மனிதர்கள் புனைவில் தமது இருப்பைத் தக்க வைக்கிறார்கள்.
பெரும் பணத்தை தனது பையில் வைத்துக் கொண்டு அலையும் கணேசன், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வது சிறப்பு. மிதமிஞ்சிய காமத்திற்கும், தொழுநோயைப் பெறுதலுக்கும் தொடர்பு ஏதேனும் இருக்குமோ என்று தோன்றுகிறது.
நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடும்படியான அரவணைப்புகளை சுலபமாக அடைந்துவிடும் கணேசனும், பணத்தின் மீதான தனது பிரயாசைகளுக்காக மனிதர்களை கவர்ந்துவிடும் கிட்டாவும் நாவலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்பவர்கள்.
மனித வாழ்வில் பெரும் இலக்குகளாக நீடிக்கும் காமம், செல்வம், அதிகாரம் இவை அனைத்தும் மனத்திருப்தி என்னும் வரையறைக்குள் அடைபட்டு விடுவதில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்த்திச் செல்கிறது 'பசித்த மானிடம்'.
Comments
Post a Comment