வரலாறு

 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 

மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல் 

210 பக்கங்கள் 



களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.


 தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி  நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது.


 'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள்.


 இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.


 'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.


 இலங்கையில் குறுகிய காலப் பகுதிகளில் அமைந்த ஆட்சி மாற்றங்கள், பக்தி இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி குறித்தும் இந்நூலை வாசிப்பதன் மூலம் அறியலாம்.


 களப்பிரர் என்று அழைக்கப்பட்ட இவர்களின் ஆட்சிக் காலத்தில் பிராகிருத, சமஸ்கிருத மொழிச் சொற்கள் பௌத்த, சமண சமயங்களின் வழியாக தமிழில் கலந்து விட்டதாக நூலில் குறிப்பிடப்படுகிறது.


 வரலாற்று ஆவணங்களை ஒப்புநோக்கி, முரண்தரும் தகவல்களையும், தர்க்கரீதியாக தவிர்க்கப்பட வேண்டியவை குறித்தும் ஆசிரியர் எளிமையாக விளக்கிச் செல்கிறார்.


 நக்கீரர்கள் குறித்த அவரது கருத்துக்களும், பார்வைகளும் நூலின் சிறப்புகள். தமிழ் இலக்கியத்திற்குச் அவர்களின் பங்களிப்பு குறித்தும் நூல் விளக்குகிறது.


 மாபெரும் சாம்ராஜ்யமாக இருந்த நாட்களும், சிற்றரசுகளாக குறுகிவிட்ட நாட்களும் குறித்த பக்கங்கள் வாசகனை களப்பிரர் ஆட்சிக்காலம் குறித்து உணரச் செய்கின்றன.


 'கடந்த காலம் குறித்த இயன்ற அளவு புரிதலுக்கு இட்டுச் செல்வதே வரலாறு' என்ற ரொமிலா தாப்பரின் கூற்றை மெய்ப்பிப்பதாக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் இந்நூல் திகழ்கிறது. 


தமிழ் அறிஞராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்த ஆசிரியரின் பண்பாட்டு ஆவணம்  இந்நூல்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்