நாவல்

 கிருஷ்ணப் பருந்து 

ஆ.மாதவன் 

நற்றிணை பதிப்பகம் 

126 பக்கங்கள் 





முன்னோர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு வாழும் குருஸ்வாமி, சாமியப்பாவாகவே அறியப்படுகிறார். சுய உழைப்பில் விளையாதவை என்ற அச்சம் தனது சொத்துக்களின் மீது அவருக்கு ஏற்படுகிறது.


 குறைவான வாடகைக்கு கடைகளை அனுமதிப்பதில் இருந்து, ரவி, பார்வதி, வேலப்பன்,ராணி  உள்ளிட்டவர்களிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்வதுவரை இதனை அறிய முடியும்.


 அம்மு அம்மையின் ஆறுதலளிக்கும் தூயநெருக்கம், தந்தையுடன் அவளைக் காண நேர்கையில், மேகம் போன்று கலைந்து செல்கிறது.


 மொட்டை மாடியில் தனியறை வசிப்பு, புத்தக வாசிப்பு என நேர்கோட்டு முறையில் செல்லும் சலனமற்ற வாழ்வு, இயல்பான மன எழுச்சிகளை உள்ளடக்கியதாகவும் புனையப்பட்டு இருப்பது சிறப்பு.


 தோப்புவிளையின் மரங்களில் வந்தமரும் கிருஷ்ணப்பருந்தாகவே குருஸ்வாமியின் உள்ளுணர்வுகள் நீடிக்கிறது.


 துவக்கத்தில் தனது நண்பனின் மகளை வேலப்பன் மணந்து கொள்ள உறுதியாக மறுத்து விடுபவர், தேவி கோவிலில் இருந்து வெளிப்படுகையில் புன்னகையுடன் அச்செயலை அனுமதிக்கிறார்.


கோயில் உட்பிரகாரங்களின் ஓவியங்கள் மீதான குருஸ்வாமியின் பெரும் ஆர்வத்தை வேலப்பன் காண நேர்கிறது.


 தந்தைக்கும் மேலாக குருஸ்வாமியை நேசிக்கும் வேலப்பன், கடும் சொற்களை பிரயோகிக்கும் அளவுக்கு செல்வதுடன், கலவரத்தின்போது அவர் மீது கல்வீசி தாக்குவதுவரை அவனது வன்மம் நீள்கிறது.


 மெல்லிய புன்னகையுடன் வேலப்பனின் வசைச் சொற்களை கடந்து செல்லும் குருஸ்வாமி, காவலில் இருந்து அவனை மீட்க உறுதியாக மறுத்துவிடுகையில் வாசகனுக்கு பொறி தட்டிவிடுகிறது.


சாலை பஜாரையும், தோப்புவிளை மனிதர்களையும் குறைவான எண்ணிக்கையிலான பக்கங்களைக் கொண்டே கண்முன் நிறுத்திவிடுகிறார் ஆ.மாதவன்.


 நாவலுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களைக் கூட பொருட்படுத்தவில்லை அவர்.  (இலக்கியச் சுவடுகள் நூலிலிருந்து)


 நாவலின் இறுதியான இரண்டு பக்கங்கள் அபாரமாக எழுதப்பட்டிருப்பவை.


 இயல்பானதொரு வேகத்தில் செல்லும் நதி, சட்டென்ற ஒரு திருப்பத்தில் சுழற்சியை அணுகி ஓய்ந்து வடிதலைப் போன்ற நிலை இது.


 தனது விழைவை ராணியிடம் உறுதியாக தெரிவித்து, ஒரேயொரு வினாவினால் மனசாட்சி உந்தித்தள்ள, பதறி விலகி இருளில் மறைகிறார் குருஸ்வாமி.


 தோப்புவிளை குருஸ்வாமி, சாமியப்பாவாகவே உயர்ந்துவிடும் அழகியல் மிகுந்த தருணம் இதுவே என்று தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்