விமர்சனக்கலை
விமர்சனக்கலை
க.நா.சு
மின்நூல்
177 பக்கங்கள்
புத்தக மதிப்புரைகளுக்கும், விமர்சனத்துக்குமான நுட்பமான வேறுபாடுகளை மிகத்துல்லியமான அவதானிப்புடன் அணுகும் முதல் கட்டுரையில் இருந்து துவங்கி, மொழிபெயர்ப்புக் கலை, அயல் இலக்கிய மதிப்பீடுகள் வரை க.நா.சுவின் மேம்பட்ட புரிதலுடனான பார்வையில் அமைந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
எந்த விதிக்கும் கட்டுப்படாத ஆளுமையாக, இலக்கியத்தின் எந்த ஒரு வகைமையிலும் ஈடுபடுபவர் இயங்குதல் வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சமரசம் அற்றவனாக கலைஞனை காணவேண்டி கூறப்படுகிறது.
//எதையும் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அனுதாபம் தேவையே இல்லை. எந்த இலக்கிய ஆசிரியனுக்கும் யாருடைய அனுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது//
விமர்சனக் கலையின் மிகப்பெரும் ஆளுமையாக க.நா.சு இன்று வரை கொண்டாடப்படுவதன் காரணத்தை சற்று எடுத்துக்காட்டும் வரிகள் மேற்கண்டவை.
தமிழில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கப்படும் எழுத்தாளர்களின் புனைவுகளைக் காட்டிலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய அபுனைவு படைப்புகளே வாசகர்களை வாசிப்பின் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்ல உதவுகின்றன.
உலக மக்களின் பொதுச் சொத்தான உலக இலக்கியத்தை அனுபவிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என கூறுகிறார் க.நா.சு.
பத்திரிகை எழுத்துக்களை இலக்கியம் என்று வாசகர்களை நம்பும்படி செய்து விட்டவர்களை வருத்தமுடன் குறிப்பிடுகிறார் அவர்.
குறிப்பிட்ட கால கட்டங்களில் பெருவிருப்புடன் வாசிக்கப்படும் சாரமற்ற எழுத்துக்கள், செவ்வியல் தன்மை அற்றதாக கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதை நல்ல வாசகன் அறிந்து கொண்டுதான் இருக்கிறான்.
மாறாக வெளியான நாட்களில் குறைந்த அளவு கவனிப்பும் பெறாத தேர்ந்த படைப்புகள் விமர்சனங்களின், மதிப்புரைகளின் வாயிலாக தமக்குரிய விஸ்தீரனத்தை அடைவதும் தமிழ்ச்சூழலில் சாத்தியமாகி இருக்கிறது.
ப.சிங்காரத்தின் மேன்மை மிகுந்த படைப்புகளை, விமர்சனக் கலைஞரான சி.மோகன் மூலமே தமிழ் உலகம் கண்டுகொண்டது ஒரு உதாரணம்.
நாயக வழிபாட்டு நிலைகளை விடுத்து, சாரமுள்ள எழுத்துக்களை கண்டறிந்து, அடுத்தடுத்த உயர் தளங்களுக்கு தமது வாசிப்பினை கொண்டு செல்வதே நல்ல இலக்கிய வாசகன் ஒருவனின் குறைந்தபட்ச கடமையாக இருக்க வேண்டும் என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் உறுதியாகச் சொல்கின்றன.
மிகவும் சாதாரண வெகுசன எழுத்துக்களுடன் தொடர்புடையவர் பெரும் புகழ் அடைந்து போகட்டும். நல்ல எழுத்துக்களை வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுதலே இங்கு மிக அவசியமானதொன்று.
Comments
Post a Comment