கட்டுரைத் தொகுப்பு
கரையும் தார்மீக எல்லைகள்
சிவானந்தம் நீலகண்டன் அகநாழிகை பதிப்பகம்
140 பக்கங்கள்
வாசித்துவிட்ட நூல்கள் குறித்து இது போன்று தெளிவாக, மனநிறைவு தரும் வகையில் சில பக்கங்கள் எழுதிவிட முடியும் எனில் அதைவிட ஒரு வாசகனுக்கு திருப்தி அளிப்பது வேறு என்ன இருக்க இயலும்?
இக்கட்டுரைகளில் சிவானந்தம் குறிப்பிடும் நூல்கள் தேடியலைந்து வாசித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் தரம் உடையதாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
காந்தியின் பன்முக ஆளுமையை, மாசற்ற சிந்தனையை முதல் கட்டுரை விளக்குகிறது.
சந்தைப் பொருளாதாரத்தின் கருணையற்ற, கோரமுகத்தை அறிகையில் நம்ப முடியாத உணர்வு ஏற்படுகிறது.
மகாகவி பாரதி குறித்த கட்டுரை பாரதியை மேலோட்டமான புரிதலுடன் அணுகுபவரை தெளிவை நோக்கிச் செலுத்தவல்லது.
எட்டயபுரம் ஜமீன்தார் அளித்த 500 ரூபாயில் 485 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கியும், 15 ரூபாயை செல்லம்மாவுக்கு வீட்டு செலவுக்கு அளித்தும், 'அழியும் செல்வம் கொண்டு அழியா பொக்கிஷங்களை பெற்று வந்தேன்' என பெருமிதம் கொள்ள பாரதியால் மட்டுமே இயலும்.
சமையல் குறிப்பு நூல்கள் அதிக அளவில் விற்பனையாவதன் காரணமாக அசோகமித்திரன் குறிப்பிடுவது அவரது சிந்தனையின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
அரைமனதுடன் 'ஆனந்த்' கிராமத்திற்கு பணியாற்ற செல்லும் 'வர்கீஸ் குரியன்' வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டதும், கூட்டுறவு இயக்கங்களை பெரும் உழைப்புடன் ஒருங்கிணைத்து, புதிய வரலாறு படைத்ததும் வாசிக்கையில் பெரும் மகிழ்வை அளித்தவை.
பெரும் கனவுடன் சிங்கப்பூரை கட்டியெழுப்பிய 'லீ குவான் இயூ' போன்ற தலைவர்களின் செயல்பாடுகள் தூய்மையையும், கூட்டு முயற்சியின் மாயங்களையும் விளக்கிச் செல்கின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள யூமா வாசுகியின் கவிதை 'மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்' வறுமையின் துயரையும், குழந்தைமையின் தூய்மையையும் ஒருசேர எடுத்துக்காட்டிய புனைவு.
கற்பித்தல் பணியை மிகவும் விரும்பி உணர்வுபூர்வமாக ஆற்றக்கூடிய 'வாஞ்சிநாதன்' போன்ற ஆசிரியர்கள் மாணவர் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுவதில் எந்த வியப்பும் இல்லை.
ஒவ்வொரு கட்டுரையையும் மிகவும் ரசித்து வாசித்தேன். நூலினை அன்பளித்த அகநாழிகை பொன் வாசுதேவனுக்கு மிக்க நன்றியும்! அன்பும்!
மிக்க மகிழ்ச்சி, நன்றி!
ReplyDelete