ராமானுஜன்
அனந்தத்தை அறிந்தவன்
மாமேதை ராமானுஜனின் வாழ்க்கை
ராபர்ட் கனிகல்
தமிழில் வாஞ்சிநாதன்
நேஷனல் புக் டிரஸ்ட்
511 பக்கங்கள்
1987ஆம் ஆண்டு (ராமானுஜம் நூற்றாண்டு) தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி கதிரில் 'ரகமி' என்றழைக்கப்பட்ட ரங்கசாமி, 'கணிதமேதை ராமானுஜன் வரலாறு' என்னும் தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார்.
சிறுவயதில் அத்தொடரை தொடர்ச்சியாக விடுபடல் இன்றி வாசித்தது நினைவுக்கு வருகிறது. என்பதுகளில், தினமணி நாளிதழும், அதன் சனி, ஞாயிறு இணைப்புகளான 'தினமணிச் சுடர்', 'தினமணி கதிர்' ஆகியன எங்களுக்கு பெரும் வியப்பை அளிப்பதாக அமைந்திருந்தன.
'முகுந்தன்', 'ஷா' உள்ளிட்ட கதை மாந்தர்களைக் கொண்ட, கிரிக்கெட்டை மையப்படுத்திய தொடர்கதை, அசோகமித்திரனின் எழுத்துகள் உள்ளிட்டவை மற்ற பிரம்மிப்புகள். ராமானுஜனின் நினைவுகளோடு விடிந்த ஞாயிற்றுக்கிழமைகள் அவை.
ரகமியின் 'கணிதமேதை ராமானுஜன்' என்ற நூலை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். ராமானுஜன் குறித்த அறிமுகத்திற்கும், அடிப்படையான புரிதலுக்கும் இட்டுச் செல்லக் கூடிய எளிய நூல் அது.
'The Man Who Knew Infinity' என்ற புத்தகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது போன்ற விரிவான ஆங்கில நூலை வாசிக்க முடியுமா?, இதன் தமிழாக்கம் வெளிவருமா? என்ற கேள்விகளுடன் சில ஆண்டுகள் கழிந்தது.
சென்ற ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு எனது ஆசிரியர் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூலான 'அந்தி ராகம்' நூலுக்காக இரண்டாம் முறை சென்றபோது நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்டாலில் இப்பெருநூல் (ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்தது) அதிர்ஷ்டவசமாய் கிடைத்தது.
'அனந்தத்தை அறிந்தவன்' என்ற தலைப்பே பெரும் உவகை அளிப்பதாக இருந்தது. வாழ்க்கை வரலாற்று நூல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்நூலைக் கருதலாம்.
பக்க சார்பின்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலுக்காக ராபர்ட் கனிகலுக்கும், தமிழாக்கம் செய்து அளித்திருக்கும் வாஞ்சிநாதனுக்கும் எத்தனை நன்றிகள் கூறினாலும் அவை போதாது.
'மேதமை-வறுமை', 'மேதமை-இளவயது மரணம்' வருந்தத்தக்க விநோதத் தொடர்பு கொண்டவை இவை.
ராமானுஜனை மட்டுமே மையப்படுத்தி எழுதாமல் எட்டு பெரும் பிரிவுகளில், அம்பத்தி மூன்று அத்தியாயங்களில் சமகால நிகழ்வுகளுடன் விரிவாக எழுதப்பட்டுள்ள நூல் இது.
நுட்பமான சிந்தனையுடன், நுண்ணுணர்வு மிகுந்தவராக ராமானுஜன், சிறுசிறு ஏமாற்றங்களுக்கெல்லாம் தளர்ந்து விடுபவராகவும் இருந்திருக்கிறார்.
அவரது ரயில் பயணங்கள் குறித்து எழுதுகையில் ராபர்ட் கனிகல் குறிப்பிடுவது துல்லியமான பார்வையின் வெளிப்பாடு.
ரயில்கள் சமத்துவத்தை தற்காலிகமாகவேனும் உண்டாக்கி இருக்கின்றன. குறைவான கட்டணத்தில் நீண்ட தூரப் பயணம் என்ற அடிப்படையில் சாதிபேதம் மிகுந்திருந்த அந்நாட்களில் மக்கள் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்திருக்கிறார்கள்.
ரயிலுக்கு உள்ளே மறைந்து விடும் அவர்தம் சாதிபேதம், பயணம் முடிந்து ரயிலில் இருந்து வெளியேறியபின் மீண்டும் ஒட்டிக்கொண்டு விடுகிறது என்றவாறு எழுதி இருக்கிறார்.
அப்படி ஒரு குறைந்தபட்ச சமநிலைக்காகவாவது இருப்புப்பாதை அமைத்து உள்கட்டமைப்பு உருவாக்கிய ஆங்கிலேயர்கள் நன்றிக்குரியவர்கள்.
படிக்கும் காலங்களில் மதிப்பெண்களுக்காகவும், தேர்ச்சி அடைவதற்காகவும் இயந்திரகதியில் கடந்து சென்ற கணித தலைப்புகளின் எளிய விவரணைகள் இந்நூலில் நிறைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
முடிவிலாத் தொடர், குவியும் தொடர், குவியாத் தொடர் இவை குறித்த விளக்கங்கள் கணித ஆசிரியர்கள் அனைவரும் இந்நூலை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குபவை.
மகனின் மேதமையை முழுமையாக அறிந்து கொண்ட கோமளத்தம்மாள், அவரை வாஞ்சையுடன் நேசித்திருக்கிறார். மருமகள் ஜானகியிடம் கடுமையாக அவர் நடந்து கொண்ட விதம் தமிழ்ச்சூழலில் புதியதல்ல.
துவக்கத்தில் மகனின் கணித ஆர்வத்தில் பெரிதும் வியக்கும் தந்தை சீனிவாசன், இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான குணங்கள் இன்றி ராமானுஜன் வாழ்வதை அறிந்து வருத்தம் அடைகிறார்.
ராமானுஜன் பலமுறை தேர்ச்சியடைய தவறிய F.A தேர்வில் ஆரம்பத்திலேயே வெற்றியடைந்த அவரது சகோதரர்கள், அரசு பணிகளில் அமர்ந்து சாமான்யமான வாழ்வில் கரைந்து மறைந்து விட்டிருக்கிறார்கள்.
ராமானுஜனின் மனைவி ஜானகியின் வாழ்வு தியாகம் நிறைந்தது. 9 வயதில் கரம் பிடித்து, பதிமூன்று வயதில் வெளிநாட்டிற்கு கணவனை அனுப்பிவிட்டு, 17 வயதில் நோயாளியாக அவரை சந்தித்து, ஓராண்டு பணிவிடை செய்து திருப்தியுற்றிருக்கிறார்.
வளர்ப்பு மகன் நாராயணனுடன் 90 வயதுவரை வாழ்ந்து மறைந்த அவரது வாழ்வு கலங்க வைக்கிறது.
தீவிர கடவுள் மறுப்பாளரான ஜி ஹெச் ஹார்டி, கடவுள் நம்பிக்கையில் ஊறிய இராமானுஜனை ஆதரித்ததும், அவரது திறனை வெளிக்கொணர்ந்ததும் கணிதத்தால் இணைந்த அவர்கள் நட்பின் சாத்தியங்கள்.
துறைமுக அலுவலகத்தில் ராமானுஜன் மீது பெரிதும் அக்கறை காட்டிய நாராயண அய்யர், சிலேட்டுகளை பரிமாற்றம் செய்து கொண்டு விடை பெறுகிறார்.
இருபத்தியோரு வயதுவரை வறுமையில் வாடியும், துபாஷியாக உயர்ந்து, அடுத்த 25 ஆண்டுகள் பெரும் செல்வத்தை ஈட்டியும், சமூக நலனுக்காக அவற்றை ஒப்படைத்த பச்சையப்ப முதலியார், நாற்பத்தி ஆறு வயதில் மரணித்தபோதும் பலரது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இராமானுஜனின் கணிதத் திறனை வியந்து போற்றிய சிங்காரவேலு முதலியார் தனது 41வது வயதில் மரணமடைந்தபோது இராமானுஜன் இங்கிலாந்தில் இருந்து திரும்பியிருக்கவில்லை.
இந்திய கல்வி முறையில் F.A தேர்வையே எளிதாக தேர்ச்சி அடைய முடியாத இராமானுஜன், இங்கிலாந்தில் F.R.S பட்டம் பெறும் நிலைக்கு உயர்வடைகிறார்.
உள்ளுணர்வுகளாலும், நாமகிரித் தாயாரின் அருளாலும் தன்னிடம் கணித ஆற்றல் நிறைந்திருப்பதாக நம்புகிறார்.
கடல் கடந்து சென்றதை தீட்டாகக் கருதி புறக்கணிப்புக்கு ஆளான இராமானுஜன் சென்னை சேத்துப்பட்டில் பூஞ்சையாகிப் போன உடலுடன் 32 வயதில் மரணிக்கிறார்.
சைவ உணவுப் பழக்கத்தை கைவிட இயலாதவராகவும், இங்கிலாந்து குளிரை தாங்க முடியாமலும், கணிதத்தில் மூழ்கியிருந்த மேதை சுய மரணத்திற்கும் முயன்று இருப்பதை அறியும்போது வருத்தம் ஏற்படுகிறது.
வாழ்வின் இறுதி நாட்களில் 'Mock theta functions' என்ற தலைப்பில் அவர் எழுதிய தேற்றங்கள் இன்று வரை ஆய்வுக்குரியதாய் நீடிக்கின்றன.
கற்கும் நாட்களில் கணிதம் இயல்பாக கைவரப் பெற்றவர்கள், கற்பிக்கும் வாய்ப்பு உடையவராய் மாறுகையில், கணிதத்தின் அன்றாட வாழ்வுப் பயன்பாடு குறித்த கேள்விகளுக்கு தடுமாறி விடுகின்றனர்.
ஜிஹெச் ஹார்டியும் கூட இதுகுறித்த தனது ஏமாற்றத்தை வெளியிடுகிறார். எனினும் இராமானுஜனின் கண்டுபிடிப்புகள் தமது பங்களிப்புகளை அவற்றுக்குரிய துறைகளில் அளித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
நிரூபனம் குறித்த பிரக்ஞையற்று அவர் படைத்துக் குவித்த தேற்றங்கள், அம்மேதைக்கு அழியாப் புகழை அளித்திருப்பவை.
பெரும் வறுமையில் உழன்ற போதிலும், ஏழை மாணவர்களின் கல்விக்காக தனது உதவித்தொகையின் பெரும்பங்கு செலவிடப்பட வேண்டும் என்ற அவரது எண்ணம் ராமானுஜனின் இரக்க சிந்தைக்கு சான்று.
முதல் உலகப்போரின் இக்கட்டான சூழலில் இங்கிலாந்தில் ராமானுஜன் ஆற்றிய பணிகள், இந்தியர்களை, தமிழர்களைத் தலைநிமிர செய்திருப்பவை.
தமிழக கணிதமேதையின் வாழ்வை, நீண்ட விவரணைகளுடன் அற்புதமான நூலாக படைத்திருக்கும் அமெரிக்க நாட்டவர் ராபர்ட் கனிகலும், தமிழாக்கம் செய்து செம்மையாக அளித்திருக்கும் வாஞ்சிநாதனும், அழகுற வெளியிட்டிருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் வாசகர்களின் வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியவர்கள்!
Comments
Post a Comment