நினைவுகள்
உதிரும் நினைவின் வர்ணங்கள்
இளங்கோ
அகநாழிகை பதிப்பகம்
144 பக்கங்கள்
திரைப்படங்களை விரும்பி ரசித்துக் காணும் ஆக சரிபாதி நபர்கள் சமகால மன அழுத்தங்களிலிருந்து தளர்த்திக் கொள்வதற்காகவும், கொண்டாட்ட மனநிலையின் பொருட்டும் அவற்றை அணுகுகிறார்கள். விசிலடிச்சான் குஞ்சுகளின் தோற்றுவாயாக இந்நிலை உருப்பெற்றுவிடுகிறது.
வெகு நுட்பமான அவதானிப்புகள் கலைஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி விடுகிறது. பல நபர்களின் பெரும் முனைப்புடன் தயாராகும் திரைப்படங்களுக்கு அத்தகைய துலங்கல்கள் ஆறுதல் அளிக்கவும் கூடும்.
இந்நூலில் இளங்கோ வடித்திருக்கும் கட்டுரைகள் ரசிக மனதின் மேம்பட்ட நிலைக்கு சான்றுகளாக அமைகின்றன.
//உண்மை சொல்கின்றவன் பலமுறை விசாரிக்கும் போது எதையாவது கொஞ்சம் மாற்றியாவது சொல்வான். ஆனால் இவன் ஏற்கெனவே கூறியதை அப்படியே திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக சொல்கின்றான். எனவே இவன் உண்மை பேசவில்லை.//
சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து ரசித்த தமிழில் எடுக்கப்பட்ட மலையாள மறுஆக்கப் படத்தை நினைவுபடுத்திய வரிகள் மேற்கண்டவை.
உணர்வுபூர்வமாக நமது சுக துக்கங்களின் மௌன சாட்சியங்களாக விளங்கிய கல்விக்கூடங்கள், படிப்புக் காலம் முடித்து வேறு ஒரு தருணத்தில் அவ்விடம் செல்கையில் அந்நியத் தன்மையுடன் இருப்பதை விலகல் மனத்துடன் கண்டு கலங்கி அவ்விடம் நீங்கி வெளியேறிய அனுபவங்கள் நம்மில் பலரிடம் இருந்திருக்கும்.
தமிழில் இவ்வுணர்வு சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றிகளை அடைந்ததை நினைவுபடுத்தும் கட்டுரையொன்று இந்நூலில் இடம்பெறுகிறது.
//எதையும் எதிர்பார்க்காத காதல் என்பது அடியாழங்களில் புதையுண்டு போகாது. என்றுமே உயிர்ப்புடன் இருப்பதுதான் இல்லையா.//
மகிழ்ச்சி குறித்த இளங்கோவின் வரிகள் வாசிப்பின் மூலம் ஓரளவு அறிந்திருந்தபோதிலும் மீளவும் யோசிக்க வைப்பவை.
//மகிழ்ச்சி என்பது இன்னொருவரால்/ இன்னொன்றாக தரப்படுவதில்லை. அது நம் மனதோடு சம்பந்தப்பட்டது//
ஒத்த சிந்தனை, ஈடுபாடு அமையப்பெற்றவருடன் உறவுகளை கட்டமைப்பது ஒரு கலையாக இருப்பினும், அத்தகைய உறவுகளை நேர்ர்மறையாக முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லாததாக ஆகிவிடுகிறது.
'ஸிஸானும்,ஸோலாவும்' திரைப்படம் குறித்த கட்டுரையை வாசித்தபோது தோன்றியவை மேற்கண்ட வரிகள்.
இனியதொரு வாசிப்பனுபவம் அளித்தமைக்கு இளங்கோவுக்கும், பொன் வாசுதேவன் மற்றும் அகநாழிகை பதிப்பகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், அன்பும்!
Comments
Post a Comment