நாவல்
நட்ராஜ் மகராஜ்
தேவிபாரதி
காலச்சுவடு பதிப்பகம்
319 பக்கங்கள்
'ரா' என்ற எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகவும், 'தே' என்ற எழுத்தை தனது புனைப் பெயரின் முதல் எழுத்தாகவும் கொண்ட படைப்பாளியின் எழுத்துக்களை மிகவும் விரும்பி வாசிப்பது வழக்கம். இந்நாவல் குறித்து எனது ஆசிரியர் 'கு' என்ற எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்ட மொழிபெயர்ப்பாளர் 'உலகநாவல்' என்றவாறு வியந்து எழுதியிருந்தார். இது போதாதா எனக்கு? இந்நாவலை வாங்கவும் வாசிக்கும் செய்ய.
'ந' என்ற பெயரையுடைய எளிய மனிதனை மையப்படுத்தி புனையப்பட்டுள்ள நாவல் இது. அரசுப் பள்ளி ஒன்றில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்ற வகையில், பள்ளிச் சூழல் தொடர்பான விவரணைகள் தேவிபாரதியின் தொடர்ச்சியான நேரடி அனுபவங்களின் வாயிலாக 'நிழலின் தனிமை' நாவலைப் போன்றே இந்நாவலிலும் மிக யதார்த்தமாக புனையப்பட்டு இருக்கின்றன.
நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் அனைத்தும் முதல் எழுத்தினால் மட்டுமே சுட்டப்படுகின்றன. துவக்கத்தில் சலிப்பை ஏற்படுத்துவது போல் தோன்றினாலும், வாசிப்பின் இயக்கத்தில் இப்புதுமை பரிச்சயமாகி விடுதல், தேவிபாரதியின் எழுத்து மேதமைக்குச் சான்றாகும்.
ஃபைனான்ஸ் அலுவலகம் ஒன்றில் மேலாளராக பணி புரியும் 'ந', சிதிலமடைந்த அரண்மனை ஒன்றின் காவல் கூண்டுகளில் மனைவி 'வ' மற்றும் இரு குழந்தைகளுடன் குடியிருக்கிறான்.
அரசு வேலையும் குடியிருக்க மிகச்சாதாரண வசதிகள் கொண்ட சிறு வீடுமே அவனது பெரும் தேவைகளாக உள்ளன.
பெரிதும் முயன்று அரசுப் பள்ளி ஒன்றின் சத்துணவு அமைப்பாளர் பணியினை அடைகிறான். சற்றும் மிகையின்றி அப்பள்ளியின் பணிச்சூழல்கள் நாவலில் இடம் பெறுதல் மிகவும் சிறப்பு.
'ந' என்ற சாதாரணனின் மிக எளிய நேர்கோட்டு வாழ்வியல், அவன் வசிக்கும் ஊரில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் 'பூ' என்பவரால் தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளாகிறது.
அரசு ஒதுக்கீட்டு முறையில் கிடைக்கப்பெறும் சிறு வீடு ஒன்றை கட்ட முற்படும் 'ந', பேராசிரியர் அவரது உதவியாளர் இருவரின் வருகையின் மூலம் 'ந' என்பவன் வெறும் 'ந' வோ, 'ந' என்று சத்துணவு அமைப்பாளரோ அல்லவென்றும், நட்ராஜ் காளிங்க மகாராஜாவின் நேரடியான உயிருள்ள ஒற்றை வாரிசு 'நட்ராஜ் மகராஜ்' என்றும் அறிந்து கொள்கிறான்.
மேற்கண்ட வரி, நாவலில் குறைந்தது 20 முறைக்கு மேல் இடம்பெற்றாலும் சற்றும் அலுப்பு தரவில்லை.
'ந' கட்ட முற்படும் வீட்டின் கட்டுமானம் தடைபடுகிறது. புதிதாக பணியில் இணைகையில் பிறரால் உதாசீனப்படுத்தப்படுவதும், நெளிவு சுளிவுகளை உணர்ந்து சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வாழ்வை நகர்த்துவதும், ராஜவாரிசு என்பதனை அறிந்து கொண்ட நிலையில் பிடிவாதமாக நேர்மையுடன் நடந்து கொள்வதும், பின் மீண்டும் தனது பிடியை இழப்பதாகவும் பெரும் ஏற்றம் இறக்கம் கொண்ட எளிய மனிதனாக நாவலில் விரவியிருக்கிறான் 'ந'.
போர்வையற்ற மனிதன் நடுங்கும் குளிரில் ஒருக்களித்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை பக்கவாட்டில் அணைத்துக்கொண்டு உறங்குகையில் கிடைத்திடும் ஆறுதல் 'ந'வுக்கு மட்டுமே உரியதா என்ன?
ராஜ வாரிசு என்று அறியாத நிலையில், சிதிலமடைந்த அரண்மனையின் காவல் கூண்டில் வசிக்கையில், பனிக்காலம் ஒன்றில் 'ந' அடைந்திடும் இயல்பான இன்பத்தினை வாசிக்க நேர்கையில் தோன்றிய வரி மேற்கண்டது.
வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் பேராசிரியர் மூலமாக கிடைக்காமல் இருந்திருப்பின் 'ந' என்ற சாதாரண நபரின் வாழ்வு அதற்கேயுரிய ஏற்ற இறக்கங்களுடன் இயல்பாக முற்றுப் பெற்றிருக்கும்.
புனைவும், வாழ்வும் நமது எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விடுபவையாகவே, அனுமானங்களுக்கு உட்படாதவையாகவே அமைந்து விடுவதே அவற்றின் இயல்பும், சிறப்பும் என்று தோன்றுகிறது.
Comments
Post a Comment