வாழ்வியல்
இக்கிகய்
ஹெக்டர் கார்சியா பிரான்செஸ்க் மிராயியஸ்
தமிழில் பிஎஸ்வி குமாரசாமி
மின்நூல்
216 பக்கங்கள்
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றும், அவ்வாயுள் மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்றும் நினைக்காதவர் யார் இருக்கமுடியும்?
இந்நூல் நேர்மறை சிந்தனைகளுடன் உற்சாகமாக பணிகளை மேற்கொள்ளுதல், உடற்பயிற்சி, அளவான உணவு, நண்பர்கள் வட்டம் உள்ளிட்ட அனைவரும் அறிந்த தலைப்புகளை எளிய விவரணைகளுடன் வாழ்வியலாக அறிவுறுத்துகிறது.
'தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செயல்படுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியே இக்கிகய்' என்று வாசிக்கும்போது மிகவும் நேசிக்கும் பணிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் விளங்கும்.
'நீங்கள் உங்களுடைய சிறிய வட்டத்தை விட்டு வெளியே வரும்போது உங்களுக்கு பதட்டம் ஏற்பட்டால்கூட நீங்கள் அதைச் செய்யவே முயற்சிக்க வேண்டும்'
மேற்கண்ட வரிகளை நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் கடந்து வந்திருப்போம். சௌகரியமான நிலையிலேயே தொடர்ந்து நீடித்தல் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளி விடுவதை உணரமுடியும்.
100 வயதை கடந்தவர்கள் மிக அதிகமாக வாழும் நாடு ஜப்பான் என்று அறிகையில் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் அவர்தம் ஒழுக்கமான வாழ்வு, பணி நேர்த்தி, ஓய்வறியா உழைப்பு உலக மக்கள் அறிந்ததே.
பணியில் மூழ்கி திளைத்து இருத்தல் குறித்தும் இந்நூல் பேசுகிறது. அவரவருக்கு மிகவும் விரும்பிய பணியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
பல மணி நேரங்கள் திறமையாக களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரரின் பார்வையில் வீசப்படும் பந்துகள் மிகப்பெரிய அளவில் தெரியும் என்பர்.
மனதிற்கினிய பணியில் முழு உழைப்பைச் செலுத்தி தொடர்ச்சியாக செயல்படுகையில் உன்னதங்களை அடைய முடிகிறது.
'மகிழ்ச்சியாக இருப்பவர்கள் சாதனையாளர்கள் அல்லர். திளைத்திருக்கும் நிலையில் அதிகமான நேரத்தை செலவழிப்பவர்கள்தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்'
மேற்கண்ட வரிகளை வாசித்ததும் வாழ்வில் கிடைக்க நேரிட்ட திளைத்திருந்த நிலைகள் நினைவுக்கு வந்தன.
தேர்வுக்கு தயாரித்தல், கற்பித்தல் பணி, நூல் வாசிப்பு, நண்பர்களுடன் அரட்டை எதுவாக இருப்பினும் நேர்மறை சிந்தனையுடன் தொடர்ச்சியான ஆர்வத்துடன் திளைத்திருத்தல் நிலையை அடைய எண்ணுகையில் உயர்வுகள் தானாகவே கைகூடிவிடும்.
Comments
Post a Comment