தொ.ப
நீராட்டும் ஆறாட்டும்
தொ.பரமசிவன்
காலச்சுவடு பதிப்பகம்
159 பக்கங்கள்
இச்சிறு நூலில் குறைந்தபட்சம் பக்கத்திற்கு ஒரு புதுத் தகவலையாவது தந்து பெரும் ஆச்சரியமூட்டுகிறார் தொ.ப
'மஞ்சள் மகிமை' என்ற ஒரு பக்க கட்டுரையில் வாசித்த தகவல்கள் கீழ்க்கண்டவை.
விறல் என்றால் முகம், விறலி என்றால் முகபாவங்களை காட்டி நடிக்கும், நடனம் ஆடுகிற பெண்ணைக் குறிக்கும். விறலியர் முகம் பொலிவாகத் தெரிய மஞ்சள் பூசியிருக்கின்றனர். நாளடைவில் அனைத்து பெண்களும் மஞ்சளை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். விறலியரை மதிக்காத சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் தொடங்கியது என்றும் கூறுகிறார்.
விறலிமலை என்பதுதான் இன்று விராலிமலை ஆகி விட்டது என்பதும் புதுத்தகவல்.
பண்பாடு என்ற சொல்லுக்கான விளக்கத்தை ஆழ்ந்து வாசித்தேன்.
'பண்பாடு தனிமனித ஒழுக்கம் சார்ந்ததன்று. பண்பாடு ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு. ஒரு மக்கள்திரள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறை, சொல்லாலே, செயலாலே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறைக்கு பண்பாடு என்று பெயர்'.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் சமண மதத்தினராக இருந்தோம். சமண மதம் வலியுறுத்திய நான்கு விஷயங்கள் அன்னதானம், ஞான தானம், ஔசத தானம், அடைக்கல ஸ்தானம் ஆகியன.
இந்நான்கு வளங்களை தவிர்த்து மனித வாழ்வுக்கு வேறு என்ன தேவைப்படப் போகிறது?
உலகமயமாக்கம் என்பதை உலகத்தை சந்தை மயமாக்குதல் என்றவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
மதுரை புத்தகத்திருவிழாவில் வாசிப்பு குறித்து தொ.ப ஆற்றிய உரையின் எழுத்து வடிவமும் இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.
மங்கலம் என்ற சிற்றூர் குறித்த பதிவு மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளித்தது.
200 குடும்பங்கள் வசித்து வந்த ஊரில் பெரும்பான்மையான ஆண்கள் குடிகாரர்கள். மாலை நேரங்களில் வீட்டு பெண்களுக்கு அடியும், உதையும் அளவின்றி கிடைத்தன.
கொடுமை தாளாமல் ஒரு பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து இறந்து போகிறாள். அவளது கணவனை அனைவரும் திட்டி அவமதிப்பதை பார்த்த மற்றொரு பெண், தனது கணவருக்கும் இதேபோன்று தண்டனை கிடைக்க வேண்டுமென்ற விருப்பில் இதே முடிவை எடுக்கிறாள்.
சில மாதங்களில் அவ்வூர் பெண்கள் இதேபோன்று தொடர, மங்கலம் கிராமத்து ஆண்களின் மீது நம்பிக்கை அற்றுப்போன அண்டைப்பகுதி ஊர்க்காரர்கள் இவ்வூருக்கு பெண் தருவதை நிறுத்தி விடுகின்றனர்.
மங்கலம் கிராமத்து ஆண்கள் இப்போது ஒன்று கூடி இனி இவ்வாறு இறக்கும் பெண்களை மரியாதையாக அடக்கம் செய்வதில்லை என முடிவெடுத்ததும், பெண்களின் இறப்பு நின்று விடுகிறது.
பல ஆண்டுகள் கழித்தும் அவ்வூரில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்று வருந்துகிறார் தொ.பரமசிவன்.
தொ.பவின் நூல்களை நேர்த்தியாக அச்சிட்டு மிகவும் குறைவான விலையில் வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் பெரும் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது.
Comments
Post a Comment