கி.மு-கி.பி
கி.மு-கி.பி
மதன்
மின்நூல்
217 பக்கங்கள்
பூமியின் இதயப் பகுதியான ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதஇனம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கால்நடையாகவே பிற இடங்களுக்கு பயணித்து இருக்கிறது.
பூமியானது வெப்பநிலை உயர்வுக்கு முந்தைய கடல் எல்லைகளை கொண்டிருந்ததால், மனிதனின் தடையற்ற பயணங்கள் சாத்தியப்பட்டிருக்கிறது.
மின்னல் தோன்றிய போதெல்லாம் காணநேர்ந்த காட்டுத்தீ, நெருப்பை அவனுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. நெருப்பில் வாட்டிய இறைச்சி புதியதொரு ருசியை அறிமுகப்படுத்த, சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு மனித இயக்கம் புத்தெழுச்சி பெற்று இருக்கிறது.
உலகின் முதல் மன்னன் ஹமுராபியின் தொலைநோக்கு பார்வையும், துல்லியமான சட்ட வரையறைகளும் அப்போதைய மனித இயல்புக்கு மிகவும் அவசியமாக இருந்திருக்கவேண்டும்.
கிரேக்கர்கள் மனித குலத்திற்கு அளித்துள்ள பங்களிப்புகளை மதன் எளிய மொழியில் தந்திருக்கிறார்.
பாடநூல்களில் காண நேர்ந்த தரவுகளை, மதிப்பெண்கள் குறித்த அழுத்தமின்றி அபுனைவு மொழியில் வாசிப்பது மிகவும் இனிமை அளிக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்திய வரலாற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெளிவாகவே நிரூபித்திருக்கிறது.
நந்தவம்ச அரசனுடன் மோதலில் ஈடுபட்ட சாணக்கியர், சந்திர குப்தனை கல்வி, போர்க் கலைகளில் தேர்ச்சி பெறச்செய்து மவுரிய வம்சத்தை ஸ்தாபித்தமை, பெரும் தத்துவஞானி சாக்ரடீஸ் துணிவுடன் விஷமருந்தி இறந்தது, அவரது வழித்தோன்றல்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடர்பான குறிப்புகள் என இந்நூலைக் குறித்த வியப்புகள் நீண்டுகொண்டே செல்வன.
எகிப்தின் பிரமிடுகளும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு புத்துயிரூட்டி அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேடல்களை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.
'கடைசி மூச்சு வரை நான் என் மக்களுக்கு சொல்வது இது தான் - பணம், பதவி, பகட்டு போன்ற தற்காலிக மகிழ்ச்சிகளில் மயங்கி உங்களை இழக்காதீர்கள். உங்கள் ஆன்மாவை மேம்படுத்துவது அறிவும், உண்மையும் தான்'.
மரணத்தருவாயில் சாக்ரடீசின் அறைகூவல் மேற்கண்டது. விஷத்தை அருந்திவிட்ட நிலையில் அது முறையாக வேலைசெய்ய தான் ஏதாவது செய்ய வேண்டுமா என்று காவலாளியிடம் கேட்கும் அளவிற்கு சாக்ரடீஸ் உறுதி மிகுந்தவராக இருந்திருக்கிறார்.
மலைக்க வைக்கும் தரவுகள், எளிய விவரணைகள், சீரானநடை என மதன் இந்நூலினை அளித்திருக்கும் விதம் வரலாறு மீதான பெரும் ஆர்வத்தினை வாசகர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது.
Comments
Post a Comment