இரவு

 இரவு

ஜெயமோகன்

மின்நூல்

319 பக்கங்கள் 



பணி நிமித்தமாக தமிழக ஆடிட்டர் சரவணன், எர்ணாகுளம் செல்கிறார். அண்டை வீட்டின் இரவு நடவடிக்கைகள் அவரை வியப்புக்குள்ளாக்குகிறது. பகலில் ஆளரவமற்று விளங்கும் அவ்வீடு இரவில் விழித்துக் கொள்கிறது.


 அவ்வீட்டில்  அட்மிரல் மேனனும், அவரது மனைவி கமலாவும் வசிக்கின்றனர். இரவில் மட்டும் நடமாடும், செயல்படும் குழு ஒன்று அவரது ஒருங்கிணைப்பில் இயங்குகிறது.


 இரவுகளுக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிடும் அவர்தம் கண்கள் பகலைக் காண கூசுகிறது. தயக்கத்துடன் குழுவில் இணையும் சரவணன் நீலிமாவை சந்திக்கிறான்.


 திருமணம் நடைபெற இருந்த கடைசித் தருணத்தில் தனது இணையை இழந்த நீலிமா, சரவணனால் கவரப்படுகிறாள். இரவு நேரங்களில் அவர்கள் இருவரின் கார் பயணங்களும், விவாதங்களும் கூர்மையாக புனையப்பட்டுள்ளன.


 முறையற்ற பழக்கம் இந்த இரவு நேர வாழ்க்கை என்று தன் வீட்டுப் பணிப்பெண்ணால் எச்சரிக்கப்படும் சரவணன், சுதாரித்துக் கொண்டு தனது இயல்பான பணிகளுக்குத் திரும்புகிறான்.


 சிறு இடைவேளைக்குப் பின் இரவு வாழ்வே அவனை மீண்டும் வசீகரிக்கிறது. முறையற்ற பாலியல் தொடர்பினால் அட்மிரலின் மனைவி கொல்லப்பட, ஏமாற்றத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு செல்கிறார் அவர்.


 அவரது இறுதி ஆலோசனையையும் மீறி நீலிமாவை மணந்து கொள்ளும் சரவணன், தமிழகம் சென்று அதே போன்ற இரவு வாழ்க்கையை மேற்கொள்கிறான்.


 ஜெயமோகனின் புனைவு மொழியின் வசீகரம் வாசகனை திக்குமுக்காட வைக்கிறது. பெரும் மாற்றத்தை, புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து அவர் உபயோகிக்கும் சொற்கள், அதே நிலையை மறுதலித்து அவரது கதை நாயகர்கள் மிக வலுவாக வாதிடுவதும், முடிவில் புதிய சிந்தனையே வலுப்பெறுவதுமாக இந்நாவல் நிறைவடைகிறது.


 கிண்டில் வாசிப்பில் இருக்கும் பெரும் வசதி, இங்கு அத்தியாயங்களை வாசிப்பதற்கான நேரம் கணக்கிடப்பட்டு அமைத்திருப்பதுதான் என்று தோன்றுகிறது.


 நாவலின் பெரும் பகுதியை வாசித்த நாளின் இரவு முழுமையாக உறங்க இயலவில்லை. பின்னிரவு 2 மணிக்கு விழித்துக்கொண்டு புனைவின் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தேன்.


 நுட்பமான, விரிவான பார்வை கொண்டிருக்கும் கலைஞனின் புனைவு வீச்சு, அபாரமான நீண்ட களத்தினை அமைத்து விடுகிறது.


 கேரள அறிவார்ந்த சமூகம், புதுமைகளை துணிவுடன் நாடிச் செல்கிறது. தனிநபர் சுதந்திரம் வேறு எங்கேயும்விட இப்பகுதியிலேயே மிகுதியாக போற்றப்படுகிறது.


'சொன்னால் ஒரு அபத்தமான நம்பிக்கை போல் இருந்தாலும் அது உண்மை. இரவில் மனிதர்கள் மலர்கிறார்கள்'.


'எத்தனை கோடி பகல்களை அணைத்தால் உருவாக்க முடியும் ஒரு இரவை'.


'தூங்கும் மிருகம் ஒன்றின் உடல் வழியாக ஊர்ந்து செல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி'.


'ஒரு மனிதன் தனக்கென ஒரு சிந்தனை முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது அவனுக்கு நன்மை செய்தால் போதுமானது'.


'பெண்களை அடிக்கும் ஆண்கள் பரிதாபமாக பெண்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள்தான்'.


'சொற்கள் இல்லாமையின் இருளில் முட்டாள் இருக்கிறான் என்றால், அறிவாளிகள் சொற்களின் இருளில் இருக்கிறார்கள்'.


'துரோகத்தை சந்தித்த கணவர்களில் மிகமிகச் சிலர்தான் மீண்டு வருவார்கள்'.


நாவலில் அடிக்கோடிட வைத்த வரிகள் மேற்கண்டவை.


 இரவு வாழ்வை வரித்துக் கொள்ளும் துணிவு இல்லையெனினும், இப்படைப்பை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்