சின்னஞ்சிறு பழக்கங்கள்
சின்னஞ்சிறு பழக்கங்கள் ஜேம்ஸ் கிளியர் நாகலட்சுமி சண்முகம் மின்நூல்
378 பக்கங்கள்
மனதிற்குப் பிடித்த மற்றும் பயன்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், நம்மையறியாமல் நம்மிடம் ஒன்றிவிட்ட விரும்பத்தகாத பழக்கங்களை விலக்கி விடவும் பயனுள்ள குறிப்புகளை தந்திடும் நூல் இது.
எளிய குறிப்புகளாகவே இருப்பினும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வடிவம் கொள்கையில் ஆச்சரியமளிக்கும் மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்திவிடக் கூடிய தகவல்கள் இவை.
அமேசானில் பொருட்களை வாங்குகையில் தொடர்புடைய பொருட்கள் என்ற வகையில் ஒரு துணைப்பட்டியல் வெளிவரும். நமது பட்ஜெட்டை பதம் பார்க்கவல்ல இவ்வணிக உத்திக்கு 'டிடெராட் விளைவு' என்று பெயரிட்டிருக்கின்றனர்.
எல்இடி டிவி வாங்குகையில் அதன் ஒலியமைப்பை மிகவும் குறைவாக அமைத்துவிட்டு அதற்கு துணையாக ஸ்பீக்கர்கள் வாங்கிட வைத்திடும் தந்திரம் இதற்கு உதாரணம்.
தினமும் செய்கின்ற தொடர்ச்சியானதொரு பழக்கத்துடன், ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் புதியதொரு செயலினை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் செயல்படும் முறையை இத்துடன் ஒப்பிடுகிறார் ஜேம்ஸ் கிளியர்.
'பழக்கங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குதல்' என்று இதனைக் குறிப்பிடுகிறார்.
மனித நடத்தையானது 'குறைவான முயற்சி' விதியை பின்பற்றுவதாக அறிகையில் பெரும் வியப்பு ஏற்படுகிறது.
புத்தகம் வாசிப்பதைவிட தொலைக்காட்சி முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காண நம்மில் பெரும்பாலானோர் விரும்புவதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.
வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் உழைப்பைக் கோரும் வாசிப்பு போன்ற பழக்கங்கள் சிந்தனைகளை மேம்படுத்துவதை அறிகையில் உவகை அடைந்து கொள்ளலாம்.
செய்வதற்கு சாத்தியமற்றதாக, விரும்பத்தகாத பழக்கங்களை அமைத்துக் கொள்ளவும், மனம் விரும்பும் பழக்கங்களை கையருகிலேயே வைத்துக் கொள்ளவும் பரிந்துரைக்கிறார் ஜேம்ஸ் கிளியர்.
தொடர்ச்சியாக செய்ய விரும்பும் செயல்களை சங்கிலி அறுந்துவிடாமல் பராமரிப்பதில் வெற்றி அடங்கியுள்ளது. ஒருமுறை தவறலாம். இரண்டாம் முறையும் செயல்கள் தவறுகையில் சாத்தியமற்ற நிலையை அவை அடைகின்றன.
கையாளத்தக்க சிரமத்துடன் கூடிய செயல்களை தேர்ந்தெடுப்பதிலேயே நமது வெற்றி அடங்கியுள்ளதை அறியமுடிகிறது.
சுய மேம்பாட்டு நூல்கள் வரிசையில் குறிப்பிடத் தகுந்த நூல் என்ற தகுதியை இந்நூலும் பெற்றுவிடுகிறது.
Comments
Post a Comment