நாவல்

 நித்ய கன்னி 

எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம் 

182 பக்கங்கள் 



விஸ்வாமித்திரருக்கு குருதட்சிணை அளித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் சீடர் காலவ முனிவர்.


 அமைதியாக மறுத்துக் கொண்டே இருக்கும் அவர் ஒரு கணத்தில் கோபமுற்று (வழக்கம்போல்) 800 புரவிகள் - உடல் முழுவதும் வெண்ணிறமாகவும், ஒரு காது மட்டும் கருப்பு நிறமுடனும் - அளிக்குமாறு உத்தரவிடுகிறார்.


 அதிர்ச்சி அடையும் காலவர், யயாதி மன்னரிடம் உதவி கோருகிறார். தனது தெய்வீக வரம்பெற்ற மகள் மாதவியை காணிக்கையாக அளிக்கிறார் அவர்.


 ஒரு குழந்தை பெற்றவுடன் மீண்டும் கன்னித் தன்மையை அடைந்துவிடும் வரம்பெற்றவள் மாதவி. அவ்வரமே அவளுக்கு சாபமாய் அமைந்துவிடுகிறது.


 மனதார காலவரை வரிக்கும் அவள், நடைபெறவிருக்கும் கேலிக்கூத்துகளுக்கு ஒப்புக்கொள்கிறாள்.


 விசுவாமித்திரரின் யோசனைப்படி (!) மூன்று மன்னர்களை ஒருவர்பின் ஒருவராக திருமணம் செய்து, ஒவ்வொருவரிடமும் தலா 200 புரவிகளை பெறுகின்றனர்.


 மீதமுள்ள 200 புரவிகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். குழந்தை பிறப்பிற்குப் பின் வழமைபோல் கன்னித்தன்மையை மீளவும் பெறும் அவளுக்கு, யயாதி மன்னர் சுயம்வரம் ஏற்பாடு செய்கிறார்.


 உறுதியுடன் காலவனைப் புறக்கணித்து கானகம் அடைகிறாள் மாதவி. பெண்மையை அவமதிப்பதையும், கருணையின்றி துன்புறுத்துவதையும் தர்மம் என்று உறுதியுடன் நம்புகிறார்கள் யயாதியும், காலவனும், விசுவாமித்திரனும்.


 வண்ணமயமான பெரும் காவியமான மகாபாரதத்தில் உள்ள சிறு குறிப்பொன்றை பெரும் புனைவாக்கியுள்ளார் எம் வி வெங்கட்ராம். 


தனது படைப்பின் மீதான பெருமிதமும், அதன் நீடித்தல் குறித்த உறுதியும் பெற்றிருக்கிறார் அவர்.


 பெண்ணின் மீது பரிவு கொள்ள வேண்டியதில்லை அவளை சமமாக பாவித்தல் போதும் என்றே தோன்றுகிறது.


 நினைவும், உள்ளமும் சிதைவுற்ற வேளையில் மாதவியின் முடிவு வியப்பளிக்கவில்லை.


 யயாதியும், காலவனும், விசுவாமித்திரனும் தமது இழிந்த செய்கைகளுக்கு சற்றும் வெட்கப்படுவதில்லை. ஹர்சுவனின் காம வேட்கையைக் காட்டிலும் இழிந்த நிலை இது.


 உசீநரன் என்ற கலைஞனே மாதவிக்கு ஆறுதல் அளிப்பவனாகத் தோன்றி வஞ்சகமாக கொல்லப்படுகிறான்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்