நாவல்
காயாம்பூ
லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம்
383 பக்கங்கள்
தொடர்ச்சியாக விரைந்து வாசித்து எளிதில் கடந்து சென்றுவிட இயலாத துயரார்ந்த எழுத்துக்களை கொண்டிருக்கும் பக்கங்கள்.
அளவுகடந்த தெய்வ நம்பிக்கைகளை எழுதி செல்கையிலும், மூடநம்பிக்கைகளை, அதன் வணிக யுக்திகளை கண்டிக்கத் தவறவில்லை லாவண்யா.
வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் சமூகம், தனி மனிதனுக்கு கருணையின்றி அளித்திடும் அழுத்தங்களும், அதைத் தொடர்ந்த வாதைகளும் பெரும் துயரளிப்பவை.
எனது மாணவி ஒருத்தி, பதின்பருவத்தின் இறுதியிலேயே திருமணம் செய்விக்கப்பட்டு, ஓராண்டு முடிவதற்கு முன்பே பேறு காலத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
சுகப்பிரசவமே நடைபெறும் என்று எல்லோராலும் கணிக்கப்பட்ட நிலையில் அவளது குழந்தை இறந்தே பிறந்தது என்றும், அவள் உயிர் மீண்டதே பெரும் அதிசயம் என்றும் கேள்விப்பட்டு வருந்தினோம்.
பிரசவ அறைக்குள் நுழைந்த ஆண் மருத்துவரைக் கண்டு அதிர்ந்துபோன அவள் கோபமான சொற்களை வீச, பின்பு ஏற்பட்ட களேபரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்தது.
இயல்பாக கிடைத்துவிட வேண்டிய பேறுக்காக நந்தினி ஆண்டுக்கணக்கில் மருத்துவம், ஆன்மீகம், ஜோதிடம் என்றவாறு சென்ற இடமெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறாள்.
வாழைப் பழத்தை மென்று ஊட்டிவிடும் சாமியார் பற்றிய குறிப்புகள், சமூகக் கரையான்கள் போன்று செயல்படும் நபர்களை குறிக்கிறது.
கேட்காமலேயே வழங்கப்பட்டுவிடும் அறிவுரைகள், பீதியடையும் தருணங்களில் மன அழுத்தத்தையும் கொண்டு வந்துவிடுகின்றன.
போலி மருத்துவர் ஒருவர் எங்கள் ஊரில் வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்த பெண்ணிடம் திரைக்குப் பின்னால் அழைத்துச் சென்று நடத்திய பாலியல் அத்துமீறல், கணிசமான மிதிகளை அவருக்கு அளித்து கிளினிக்கை மூடச் செய்தது.
அப்பெண் குழந்தையின்மைக்கான சிகிச்சை பெறவே அன்று அம்மருத்துவரிடம் சென்றதாக அறிந்தோம்.
திருமணம் முடிந்த சில வருடங்களுக்குள்ளாகவே குழந்தை பெற வேண்டிய நிலையில் இருக்கும் தம்பதியரை, அதுகுறித்த அவசியமற்ற கேள்விகளால் குடைவதும், தத்தெடுக்கச் சொல்லும் அறிவுரைகளும் கருணையற்றவை.
நந்தினி தனது மன ஆறுதலுக்காக கோயில்களுக்கு செல்கிறாள். வேண்டுதல் குறித்த பிரக்ஞையின்றி வழிபாடு முடித்து வெளியேறியும் விடுகிறாள்.
மூன்று தம்பதிகள் குறித்த பதிவுகள் நாவலில் நேர்த்தியாக கோர்க்கப்பட்டுள்ளன. குறைவான எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட அத்தியாயங்கள் நாவல் செப்பணிடப்பட்டுள்ளதை காட்டுகின்றன.
திருமணம், குழந்தைப்பேறு இவற்றைத் தொடர்ந்து சிறப்பு குழந்தைகளைப் பள்ளியும், சக மனிதர்களும் நடத்தும் விதம் அதிர்ச்சி அளிப்பவை.
ஜெயந்தி-குமார் தம்பதியரின் மகன் பிஜு, சிறப்பு குழந்தையாக பிறந்து, பெரும் அலைக்கழிப்புகளை அனுபவித்து, தனது பதின்ம வயதிலேயே மரணிக்கிறான்.
சாதியைக் கடந்து, விருப்பின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் அலமேலு, வாழ்வின் இயல்பான தடைகளை நம்பிக்கையுடன் கடந்து ஆறுதல் அளிக்கிறாள்.
சுற்றத்தினர் அவளுக்கு அளித்திடும் துயரும், அவளது எதிர்வினையும் பெருவாரியாக அறியப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
செயற்கை கருத்தரிப்பு மையங்களின் வணிக முறைகளும், மனிதாபிமானமற்ற அவர்தம் கொடுஞ்செயல்களும், நந்தினியை மரத்துப் போகும் நிலை வரை கொண்டு செல்கின்றன.
துரை அவளுக்கு ஆறுதலாக இருப்பது போன்று தோன்றினாலும், அவள் அனுபவித்து செல்லும் வாதைகள் தெய்வத்துடனான அவளது உரையாடலுடன் புனைவை நிறைவு பெறச் செய்கிறது.
சந்திக்கும் நபர்களிடம் திருமணம் ஆகிவிட்டதா?, எத்தனை குழந்தைகள்? போன்ற அநாகரிகமான கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டிருக்கிறேன்.
நேர்மறையான முடிவுகளுக்குப் பின்பும் பொருட்படுத்தாத அலட்சியங்கள் அக்கேள்விகளில் நிறைந்துள்ளன.
ஒருபுறம் உள்கட்டமைப்பு சவால்களுடன், அர்ப்பணிப்புடன் இயங்கும் அரசு மருத்துவமனைகள், மறுபுறம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் என்றவாறு நமது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஜெயந்தியை ஆறுதல்படுத்தும் குமார், நந்தினியின் கோபதாபங்களை அனுசரித்துச் செல்லும் துரை, அற்ப மனிதர்களாக நடந்துகொள்ளும் அலமேலு, தேன்மொழி நாவலெங்கும் சீராக விரவியிருக்கிறார்கள்.
மனவளர்ச்சிக் குறை, உடல் ஆரோக்கியம், கல்வி, எதிர்காலம் மூன்றையும் குழந்தையிடமிருந்து பறித்து விடுவதுடன், பெற்றோரையும் பெரும் மனச்சுமையுடன் நோயாளிகளாக ஆக்கிவிடுகிறது.
பிஜூவை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் சமேலி, அத்துமீறலில் ஈடுபடும் ரேஷ்மா, மனைவி, சுற்றத்தாருடன் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் ராஜேந்திரன், முதல் காதலை மறக்க இயலாமல் தவிக்கும் ஹரி, நாவலில் சில பக்கங்களுக்கு பயணித்தாலும் தமது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார்கள்.
இந்நாவலை வாசித்து நிறைவு செய்ய ஒரு மாதம் ஆகிவிட்டது. எளிதாக வாசிக்க இயலவில்லை.
பெண்மையின் துயரார்ந்த நிலைகளை அழுத்தமாக பதிவு செய்துவிடும் இப்புனைவு, சற்று நேர்மறையாக ஜெயந்தி, நந்தினிக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்திருக்கலாம் என்று தோன்றினாலும், நல்லதொரு நாவலை நேர்த்தியாக படைத்திருக்கும் லாவண்யா சுந்தரராஜனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்!, பாராட்டுக்களும்!
Comments
Post a Comment