விருந்து

 விருந்து

கே.என் செந்தில்

காலச்சுவடு பதிப்பகம்

191 பக்கங்கள் 



நீண்ட கதைகளுக்காகவே பெயர் பெற்றுவிட்ட கே என் செந்திலின் குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல்.


 பக்கங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கதைகளின் வீச்சுக்கு சற்றும் குறைவில்லை. மூன்றே பக்கங்களில் சில பத்தாண்டு நிகழ்வுகளை சிறப்பாக காட்சிப்படுத்தும் லாவகம் வாய்க்கப் பெற்றிருக்கிறார்.


 ஒருசில கதைகளை அவரது முகநூல் பக்கத்தில் வாசித்திருக்கிறேன். இருப்பினும் நூல்வடிவில் பெரிதும் வசீகரித்துவிட்டன இக்கதைகள்.


 ஒன்றுடன் ஒன்று எவ்வகையிலும் பொருந்தாத கதைக்களன்கள் கொண்ட கதைகள் இவை.


 சூதாட்ட மோகம், குத்தலான பேச்சுக்கள், நம்பமுடியாத குரூரம், காவலில் இருந்து தப்பிவிட நினைக்கும் முதியவர், பேருந்துக்கான காத்திருப்பின் போது பெண்களின் மீதான மையல், தந்தையின் இறுதி நாட்களை வாசகனுக்கு கடத்திவிடும் கதை, என்றவாறு மனித மனங்களின் அடித்தளங்களை தொட்டு சென்றிடும் கதைக்களன்கள்.


 இருவரிடம் ஈர்ப்பு கொள்பவள் அவர்களில் ஒருவரை விலக்கிவிட இயலாமல் தவிக்கிறாள்.


லாட்டரி, குடிப் பழக்கங்களை துல்லியமாக எடுத்துக் காட்டும் மூன்றே பக்கக் கதை, கனமான தரவுகள், குறைவான பக்கங்களில், கச்சிதமான கட்டமைப்பு கூடிவரப் பெற்றுள்ளது.


'கால்களுக்கு இடையில் கோல் முளைத்தவன்கள்', 'வெளிச்சத்தின் ஒழுக்க சீலர்கள்' போன்ற சொற்பிரயோகங்கள் மனசாட்சியை தட்டி எழுப்புபவை.


 நேர்மையற்ற எதிர்பார்ப்புகளின் யதார்த்தமாக அமையும் 'மிச்சம்' கதை, பள்ளிக்கால ஆண்-பெண் நட்பைப் பேசும் 'இடம்', அதற்கு எதிர்வினையாக கார்த்திக் பாலசுப்பிரமணியன் முகநூலில் எழுதிய கதை ஒன்றையும் நினைவுபடுத்தியது.


 சுனாமி தாண்டவத்தை நடுக்கமுடன் ஒரு கதை நினைவுக்கு கொண்டுவர, கானுயிர் புகைப்படக் கலைஞனின் வாழ்வை மற்றொரு கதை பேசுகிறது.


 'நாயகன்' கதையை வாசித்துவிட்டு வாய் விட்டுச் சிரித்தேன். நாய்களின், மீன்களின் பார்வைகளிலும் அமையப்பெறும் கதைகள் இத்தொகுப்பின் தனிச்சிறப்புகள்.


 சமூகம் முற்றாக புறக்கணித்து ஒதுக்கித் தள்ளும் மனிதர்களே செந்திலின் கதை மாந்தர்களாக வலம் வருகிறார்கள்.


ஏழ்மையின் துயரும், வசைச் சொற்களும் கருப்பு- வெள்ளை வடிவாகவே புனைவில் தமக்கான இருப்பை அடைந்து விடுகின்றன.


 அச்சில் வெளிவந்திருக்கும் செந்திலின் அனைத்து நூல்களையும் ஒருமுறை வாசித்துவிட்டப் பெருமிதம் ஏற்படுவதுடன், மறுவாசிப்புக்கான தகுதிகளையும் கொண்டுள்ளவை அவரது புனைவுகள் என்றே தோன்றுகிறது.


 'விருந்து' -  கே.என் செந்தில் என்ற நம்பகமான கலைஞனின் மற்றுமொரு பரிமாணம். 

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்