ஆஸாதி

 ஆஸாதி

அருந்ததிராய்

தமிழில் ஜி குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்

224 பக்கங்கள்



ஒரு அமர்வில் 10 பக்கங்களுக்கு மேல் நகர முடியாத கனமான வரிகள் கொண்ட நூல் இது.


 சாட்டையடியாக விளாசும் சொற்கள் எத்தரப்பையும் விட்டுவைப்பதில்லை.


 1998ஆம் ஆண்டில் இந்திய அரசு அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தியபோது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் கண்டனங்களை பெற்ற அதே வேளையில், தேசமெங்கும் கொண்டாட்ட மனநிலை பரவியது.


 போரினால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து யோசிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் அவசியம்தானா என்று தோன்றியது. எனினும் மந்தை மனப்பான்மை எவரையும் விட்டுவிடவில்லை.


 தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கட்டுரையில் இடம்பெறும் கவிதை, சகிப்பின்மையின் கொடூர முகத்தை விளக்கவல்லது.


'அம்மா என்னை உனக்கு திரும்பத் திரும்ப அறிமுகம் செய்து சலித்துப் போயிருக்கிறேன்'


 இக்கவிதையை எழுதியவர் உயிருக்கு அஞ்சி தலைமறைவானது சுடும் நிதர்சனம்.


 மகாத்மாவுக்கு நிகரான ஆளுமை அம்பேத்கரை 'காந்தி' திரைப்படம் முற்றாக புறக்கணித்தமை தற்செயலானதல்ல.


 'பெருமகிழ்வின் பேரவை' நாவல் குறித்த கட்டுரைகள் நாவலை வாசித்த நாட்களை நினைவுபடுத்தின.


 கைவிடப்பட்ட கல்லறையில் வசிக்கும் அஞ்சும், உயிர் அற்றவர்களாகவே பாவிக்கப்படும் மனிதர்கள் வசிக்கும் கஷ்மீர், வலி தரும் ஒப்பீடு இது.


 உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு 'புக்கர்' பரிசை பெற்று விட்ட 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவல், தாய் மண்ணான கேரளத்தில் புறக்கணிப்புக்கு உள்ளானது முரண்நகை.


 சாதியப் படிநிலைகளை முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் உள்ளூர தொடரவே விரும்புகின்றனர்.


 கொரோனா பெருந்தொற்று காலத்தின் துவக்கத்தில் எழுதப்பட்டு இந்நூலில் இறுதியாக இடம்பெற்றிருக்கும் கட்டுரை, நடுநிலை சிந்தனையாளரின் தீர்க்கமான அனுமானத்தைக் காட்டியது.


 வடமாநிலத் தொழிலாளர்கள் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர்கள் சென்றமையும், இடைவழியில் உயிர் துறந்ததும், தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த சப்பாத்திகள் படம் ஏற்படுத்திய அதிர்வுகளும் மறக்க இயலாதவை.


எவ்வித முன்னேற்பாடும் இன்றி உடனடியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும், மனிதர்களை குழுவாக அமர வைத்து அவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தமையும் வருத்தம் அளிப்பவை.


 நடுநிலையான, துணிச்சல் மிகுந்த சிந்தனையாளர் அருந்ததிராயின் எழுத்துக்களை, ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வாசிப்பது மிகவும் சிறப்பு.


 கால் நூற்றாண்டு நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்ட நூல் இது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்