எண்ணும் மனிதன்
எண்ணும் மனிதன்
மல்பா தஹான்
தமிழில் கயல்விழி
அகல் வெளியீடு
224 பக்கங்கள்
இயல்பான கணித திறன்களைக் கொண்டோ அல்லது மிகுந்த ஆர்வமுடைய கணித ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு வழிநடத்தப்பட்டோ, கடினமானதாக அல்லது இயல்பு வாழ்வுக்கு பயனற்றதாக, மேலோட்டமான புரிதலுடன் அறியப்படும் கணிதப் பாடத்தை பயின்று, ஆசிரியராகவும் ஆகிவிட்டவர்கள், தமது வழிகாட்டலுக்கு இந்நூலினை நிச்சயமாக அணுகலாம்.
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 'பெரமிஸ் சமீர்', தனது முதலாளியின் கண்டிப்புக்கு அஞ்சி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனது மந்தையில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
'எண்ணுதல்' கலையில் அவன் அடைந்து விடும் தேர்ச்சி, பெரும் மரமொன்றின் கிளைகளையும், இலைகளையும் ஒரு சில வினாடிகளில் கணக்கிட்டுக் கூறிவிடும் அளவுக்கு நீண்டு விடுகிறது.
நண்பருடன் பாக்தாத் செல்லும் 'எண்ணும் மனிதன்', கணிதத்தின் அடுத்தடுத்த பரிமாணங்களிலும் தனது தேர்ச்சியை நிரூபிக்கிறான்.
ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்படும் மனிதர்களை தனது திறனால் வியக்க வைத்து வெற்றி கொள்கிறான்.
அரசர் அளிக்க ஒப்புக் கொண்டு விடும் உயர்வான வெகுமதிகளாக அறியப்படும், நிலையாமை கொண்ட செல்வங்களை மறுதலித்து, தன்னை நேசிக்கும் பெண்ணை மணம் புரிந்து கொள்கிறான்.
'ஒருவரை பொறாமை பற்றிக் கொண்டது என்றால் அவர் வெறுக்கத்தக்க அளவுக்கு அநாகரீகமான மன நிலைக்கு உள்ளாகிறார்'
'எண்ணத்தின் வலிமையையும், ஆன்மாவின் மாயத் தன்மையையும் உணர உதவும் உறுதியான வழிகளில் ஒன்று கணிதம்'
'ஒழுக்கக் கேட்டுடன் கணிதம் இணைந்து செல்லாது. கணிதம் ஒழுக்கக் கேட்டை நிந்திக்கும்'
மேற்கண்ட வரிகளை வாசித்தபோது இந்நூலின் இலக்கியச் செழுமையையும் உணரலானேன்.
'லீலாவதி' என்ற கணித நூல் குறித்து பள்ளி நாட்களிலேயே ஓரளவு அறிந்திருந்தேன். தன்னை மணந்துகொள்ள இருக்கும் ஆண் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமிகுதியில், ஆடையில் இருந்து உதிர்ந்த முத்து, அவளது வாழ்வை வெறுமையாக ஆக்கிவிட்ட போதும், அவளது தந்தை 'பாஸ்கரர்', தனது கணித நூலுக்கு 'லீலாவதி' எனப் பெயரிட்டதால், அப்பெண், அழியாப் புகழ் அடைந்து விட்டாள்.
குறைந்தது ஓராண்டாவது எனது மாணவ செல்வங்களை ஆர்வமூட்ட இந்நூல் எனக்கு பயன்படக்கூடும்.
Comments
Post a Comment