நிரந்தரக் கணவன்
நிரந்தரக் கணவன்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தமிழில் நர்மதா குப்புசாமி
பாதரசம் வெளியீடு
200 பக்கங்கள்
'யாருக்கும் தெரியாது என்று நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எல்லோரும் எப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்' என்ற தி.ஜானகிராமனின் கூற்றினை நினைவுபடுத்தி விட்ட நாவல் இது.
செய்ய நேர்ந்துவிட்ட தவறினால் குற்ற உணர்வுடன் தூக்கமின்மையுடன் வருந்தும் வெல்ச்சேனினோவ், பாவெல் பாவ்லோவிச் தன்னை தொடர்ச்சியாக கண்காணிப்பதை அறிகிறான்.
நதாலியாவின் இறப்பு குறித்தும், லிசாவின் பிறப்பு சார்ந்தும் பூடகமாக அவனிடம் விளக்குகிறார் பாவெல்.
துவக்கத்தில் அவனைக் கண்டு அஞ்சும் லிசா, நோயுற்று மரணிக்கிறாள். சீண்டல்களை ஏற்படுத்தும் பாவெல் உடனான உரையாடல்கள் வெல்ச்சேனினோவை கவலையடையவும் செய்கின்றன.
முதிர் பருவத்தை நெருங்கும் பாவெல், பதின்வயது சிறுமி நத்யாவை மணம் செய்ய எண்ணி, பரிசுப் பொருளுடன் வெல்ச்சேனினோவையும் அழைத்துச் செல்கிறார்.
அறத்தையும், மனசாட்சியையும் உலுக்கிவிடும் உரையாடல்கள் பாவெல்-வெல்ச்சேனினோவ் மற்றும் வெல்ச்சேனினோவ்-லோஃபவ் இடையே நடைபெறுகின்றன.
இளவயதுக்காரனாக இருப்பினும், துல்லியமான அனுமானத்தோடு, தீர்க்கமாக வாதிடும் லோஃபவ், நத்யா உடனான தனது காதலில் மிக உறுதியாக இருக்கிறான்.
இதுபோன்ற அச்சமற்ற சிந்தனை வாய்த்திருந்தால், வாழ்வின் கணிசமான நாட்களை முதல் காதல் குறித்த நினைவுகளில் மூழ்கிப் போகாமல், நேர்மறையாக வாழ்ந்து, இருப்பினை கொண்டாட்டமாக கழித்துவிட பெரும்பாலான நபர்களால் முடிந்திருக்கும்.
வன்மத்துடன் உரையாடும் பாவெல், நெஞ்சு வலியால் அவதிப்படும் வெல்ச்சேனினோவை கரிசனத்துடன் அணுகும் போதும், இருளில் சவரக்கத்தி கொண்டு பழி தீர்க்கவும் எண்ணுகிறார்.
லிசாவின் மீதான அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமலும், அவளது திடீர் மரணத்தை ஏற்கவியலாமலும் தவிக்கிறான் வெல்ச்சேனினோவ்.
லோஃபவ் காட்டும் அதே உறுதியினை நத்யாவும் கொண்டிருக்கிறாள். பாவெல்லை அவளால் அச்சமற்று பகடி செய்து, புறக்கணிக்க முடிகிறது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் நர்மதா குப்புசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும்! வாழ்த்துகளும்!!
Comments
Post a Comment