சுழலும் சக்கரங்கள்

சுழலும் சக்கரங்கள்

ரியுனொசுகே அகுதாகவா

தமிழில் கே கணேஷ்ராம் நூல்வனம் வெளியீடு

144 பக்கங்கள்



ரியுனொசுகே அகுதாகவாவின் 6 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கும் தொகுப்பு இந்நூல்.  முரகாமியின் முன்னுரையே படைப்பாளியின் மேதமையை உணர்ந்து கொள்ள போதுமானதாக உள்ளது.


'கடவுள்கள் துரதிர்ஷ்டம் பீடிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நம்மைப் போல் அவர்களால் தற்கொலை செய்து கொள்ள இயலாது'.


 மேற்கண்ட வரிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக இருப்பினும் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜப்பானிய பண்பாட்டுச் சூழலில் உதிர்க்கப்பட்ட சொற்கள் அவை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.


 மழைக்காக கட்டிடத்தில் ஒதுங்கும் கீழ்நிலை ஊழியன், உயிர்த்திருத்தலுக்கான தத்துவ தரிசனத்தை அங்கு பெற்று விடுகிறான்.


 கைவிடப்பட்ட பிணங்கள் குவிந்துள்ள அவ்விடத்தில், தலைமயிர்களை சேகரிக்கும் கிழவியின் மூலம் பாம்பினை துண்டங்களாக வெட்டி மீன் இறைச்சி என்று விற்பனை செய்தவள் குறித்து அறிகிறான் அம்மனிதன்.


கிழவியின் ஆடைகளை பறித்துக் கொண்டு கிளம்புபவன் தன் செயல் குறித்த எவ்வித குற்ற உணர்வும் இல்லாதவனாக, தெளிந்த சிந்தை கொண்டவனாக செல்கிறான்.


 எழுத்தாளனின் மனவெழுச்சிகள் நிறைந்த உள்முக போராட்டங்களை விளக்கிய கதை 'சுழலும் சக்கரங்கள்'. தவிர்க்கவே இயலாமல் கோபி கிருஷ்ணனை நினைவு கொள்ள வைத்த கதை இது.


 'மூங்கில் காட்டினுள்ளே' கதை, நடைபெற்றுவிட்ட துயர நிகழ்வில் அவரவர் பார்வையும், நியாயமும் இடம்பெற்றுவிட்ட புனைவு.


'ஞானி' கதையில் இடம்பெறும் அப்பாவி, காலநீட்டிப்பு குறித்த பிரக்ஞையற்று வெளிப்படும் வார்த்தைகளை உறுதியுடன் ஏற்று, ஏமாந்து விடுபவனாக இருக்கிறான்.


 தற்கொலை சிந்தனையால் உந்தப்படுபவர்கள் அத்துயரார்ந்த செயலில் ஈடுபடும்வரை கொண்டிருக்கும் எண்ணவோட்டங்களை தன்னிரக்கமற்று மிகையுணர்வின்றி  எடுத்துக் காட்டியது 'ஒரு மூடனின் நாட்குறிப்பு'.


  'ரியுனொசுகே அகுதாகவாவின் புனைவுலகு தார்மீக வறட்சியில் இருந்து மனிதனை மீட்சிக்கு இட்டுச்செல்லும் சூட்சுமம் நிறைந்திருக்கிறது'.


மொழிபெயர்ப்பாளர் கே.கணேஷ்ராமின் வார்த்தைகளான இவை எப்படியொரு  உணர்வெழுச்சியுடன் அக்கலைஞனை அவர் அணுகியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.


'இன்றும் ஜப்பானிய "தேசிய எழுத்தாளராக" வாழ்ந்தும், இயங்கியும் வருகிறார்'


ஹாருகி முரகாமியின் மேற்கண்ட வரி சற்றும் மிகையற்றது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்